சம்பாதிப்போம்... நண்பர்களை!

உலகின் அழகான, மிகச் சிறந்த உறவு நட்பு. ஒரு சிலருக்கு ஊர் முழுக்க நண்பர்கள் இருக்கலாம். ஒரு சிலருக்கு விரல் விட்டு எண்ணும் அளவில் நண்பர்கள் இருக்கலாம். 
சம்பாதிப்போம்... நண்பர்களை!


உலகின் அழகான, மிகச் சிறந்த உறவு நட்பு. ஒரு சிலருக்கு ஊர் முழுக்க நண்பர்கள் இருக்கலாம். ஒரு சிலருக்கு விரல் விட்டு எண்ணும் அளவில் நண்பர்கள் இருக்கலாம். 

எத்தனை பேர் இருந்தாலும் நட்பு என்றுமே மகிழ்ச்சி தருவதாகத்தான் இருக்கும். மகிழ்ச்சி தராத நட்பு, உண்மையான நட்பாக இருக்காது. 

நட்பின் மூலமாக அடையக் கூடிய பலன்கள் அதிகம் உள்ளன. ஆனால், சிலர் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வதில் தடுமாறுகின்றனர். நட்பு வட்டாரத்தை உருவாக்குவதிலும், ஏற்கெனவே உள்ள நண்பர்களைத் தக்கவைப்பதிலும் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அவ்வாறான நபர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம். 

எதனால் நட்பு வட்டாரத்தை நீட்டிக்க முடியவில்லை என்பதை முதலில் ஆராய வேண்டும். புதிய நபர்களுடன் பழகுவதில் கூச்ச சுவாபம் இருக்கலாம். அடுத்தவர்களுடன் நெருங்கிப் பழகுவதில் தயக்கம் காணப்படலாம். சமூகத்தில் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வதில் ஒருவித அச்சம் கூட காணப்படலாம். 

அவ்வாறு இருப்பவர்கள் தங்களது நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் படிப்படியாக மாற்றிக் கொள்ள வேண்டும். நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமெனில், சில பழக்கவழக்கங்களை அதற்கேற்றாற்போல் மாற்றுவது அவசியம். நண்பர்கள் நம்முடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோமோ, நாமும் அவ்வாறு முதலில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் எதிர்பார்க்கும் அத்தனை விஷயங்களும் நம்மிடம் இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். 

புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வதில் எந்தவிதத் தயக்கமும் வேண்டாம். அடுத்தவர்கள் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாவிடிலும் நாமாக முயன்று அவர்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். நாம் முயன்ற பிறகும் அவர்கள் நண்பர்களாக விரும்பவில்லை எனில் விட்டுவிடலாம். ஆனால், முயற்சி செய்யாமலேயே இருக்கக் கூடாது.

நீங்கள் தனிமை விரும்பியாக இருப்பதும் மற்றவர்களின் குணநலன்கள் உங்களுடன் ஒத்துப்போகாமல் இருப்பதும் அதிக நண்பர்கள் இல்லாததற்குக் காரணமாக இருக்கலாம். அனைத்துத் தருணங்களிலும் நம்மால் தனியாக இருக்க முடியாது. வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும்போது அவற்றில் இருந்து மீள்வதற்கு நண்பர்களின் துணை நிச்சயம் அவசியம். மிகுந்த துன்பம் மிக்க விவகாரங்களைக் கூட நண்பர்களின் துணை இருந்தால், எளிதில் கடந்து விட முடியும். 

எனவே, நண்பர்களைத் தேடிக் கொள்ள வேண்டுமெனில் நாமும் கொஞ்சம் இறங்கி வந்தாக வேண்டும்.  "என்னுடைய குணநலன்களை மாற்றிக் கொள்ளவே மாட்டேன். என்னைச் சுற்றியிருப்பவர்கள் என்னை சகித்துக் கொள்ள வேண்டும்'  என இருந்தால், உங்கள் நட்பு வட்டம் வெகு நாள்களுக்கு நீடிக்காது. நண்பர்களின் துணையைப் பெற வேண்டுமெனில் நாமும் சிலவற்றை இழக்க வேண்டும்.  இழந்தால்தான் பெற முடியும் என்பதுதான் உலக நியதி. 

வேலை தேடுதல், தேர்வுகளுக்குத் தயாராகுதல், குடும்பச் சூழல் உள்ளிட்டவற்றின் காரணமாக நண்பர்களுடன் போதிய நேரத்தை உங்களால் செலவிட முடியாமல் போகலாம். அது நட்பை பாதிக்கும் என வருந்தத் தேவையில்லை. நம்முடைய சூழலைத் திறம்பட புரிந்துகொண்டவர்கள் மட்டுமே உற்ற நண்பர்களாக இருக்க முடியும். பல்வேறு பணிகள் காரணமாக, நண்பர்களுடன் நேரடியாக நேரத்தைச் செலவிட முடியாமல் போனாலும், சமூக வலைதளங்கள், கைபேசி அழைப்புகள் உள்ளிட்டவற்றின் வாயிலாக அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம். 

ஏனெனில் நண்பர்களுடன் செலவிடும் நேரம் நமக்கான மகிழ்ச்சிகரமான தருணங்களாக இருக்கும். அவர்களுடன் நேரத்தைத் திறம்பட செலவிடுவது மனஅழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும். நண்பர்களுடன் அடிக்கடி பேசி மகிழ்வது, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்தும் நம்மைக் காக்கும். 

நண்பர்களைத் தேடுவதற்கு சமூக வலைதளங்களை நம்புவதில் பெரும் பயனில்லை. இலக்கியக் கூட்டங்கள், புத்தகக் கண்காட்சி, இசை நிகழ்ச்சிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட சமூக இடங்களுக்குச் செல்லும்போது ஒத்த விருப்பங்களைக் கொண்ட நபர்களை எளிதில் நண்பர்களாக்கிக் கொள்ள முடியும். 

அதிக நண்பர்களைக் கொண்டிருந்தாலும், நட்பைத் தொடர்ந்து பேணுவதே பெரிய விஷயம். நண்பர்களுக்கென்று நேரம் ஒதுக்குதல் அவசியம். நண்பர்கள் 
ஒன்றிணைந்து வெளியே செல்லத் திட்டமிட்டால், நாமும் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். அவசியம் என்றால் மட்டுமே அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் நண்பர்களின் தொடர்பில் இருந்து விலகிவிட வேண்டாம். 

உலகில் எந்தவோர் எதிர்பார்ப்பும் இல்லாத உறவு, நட்பு. நட்பால் பிணைக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய வரம். அந்த வரத்தை வேண்டுமென்றே இழந்துவிட வேண்டாம். நட்பைக் கொண்டாடுவோம். நண்பர்களைச் சம்பாதிப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com