கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 38

ஜனநாயகத்தில் முக்கியமான கட்டம் தேர்தல். முறையான தேர்தல் தான் வரப்போகும் ஆட்சியாளர்களை அரியணையில் உட்கார வைக்கிறது.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 38

ஜனநாயகத்தில் முக்கியமான கட்டம் தேர்தல். முறையான தேர்தல் தான் வரப்போகும் ஆட்சியாளர்களை அரியணையில் உட்கார வைக்கிறது.

ஒவ்வொரு தேர்தல் முடிவின் போதும் பதவி இழந்தவர்களை  விரட்டுகிறார்கள். புது ஆட்சியாளர்களை மேளதாளத்தோடு வரவேற்கிறார்கள். இந்த சுழற்சி நடந்து கொண்டே இருக்கிறது,  ஜனநாயகம் என்ற சர்க்கஸ் அரங்கில்!

"புதிய ஆட்சியாளர்களை குழலூதி வரவேற்று, அவர்களுக்கு விடை கொடுக்கையில் எதிர்க்கூச்சல் போட்டு மீண்டும் வேறொரு ஆட்சியாளரை குழலூதி வரவேற்கும் தேசம் பரிதாபத்துக்குரியது' என்பார் லெபனான் சிந்தனையாளர் கலீல் ஜிப்ரான். 

சுதந்திர இந்தியாவில் முதல் பொது தேர்தல் 1952 -இல் நடந்தது. இந்திய அரசியல் சாசனத்தில் எல்லா இந்திய பிரஜைகளுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. மற்ற நாடுகளில் இவ்வாறு ஒட்டு மொத்த மக்களுக்கும் ஒரே வேளையில் ஓட்டுரிமை வழங்கப்படவில்ல. 

இந்திய தலைவர்கள் மக்களின் அதீத அறிவில் முழு நம்பிக்கை வைத்து இந்த உயரிய உரிமையை அளித்தனர்.

"இந்தியா பல விதத்தில் பெருமை படைத்தது. ஆனால் அதில்  மூன்றைத்தான் முதன்மையாக சொல்ல வேண்டும். தாஜ் மஹால், மஹாத்மா காந்தி , இந்திய தேர்தல் ஆணையம்' என்கிறார் மேனாள் மேற்கு வங்காள ஆளுநரும் மூதறிஞர் ராஜாஜியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி.

பரந்து விரிந்த இந்திய துணைகண்டத்தில் எவ்வளவோ வேற்றுமைகளுக்கிடையில் ஜாதி, இனம், மத சக்திகள் போடும் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து முன்னேறத் துடிக்கும் இளைய தலைமுறை, 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முளைத்துள்ள அரசியல் கட்சிகள், அவ்வப்போது தலை தூக்கும் பயங்கரவாதம், உள் நாட்டு பாதுகாப்பு இவற்றையெல்லாம் எதிர்கொண்டு மக்களாட்சியை நிறுவ மக்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தலை வெற்றிகரமாக நடத்தும் மிகப் பெரிய இயக்கம் தேர்தல் ஆணையம்.

இதுவரை பதினேழு பாராளுமன்றத் தேர்தலும் 350-க்கும் மேற்பட்ட மாநில சட்டசபை தேர்தல்தளையும் வெற்றிகரமாக நடத்தி, இந்தியா உலக அளவில் நீண்ட காலம் ஜனநாயகம் தழைத்த நாடு என்ற பெருமையைச் சேர்த்துள்ளது. அரசியல் சாசனம் பிரிவு 324 -இலிருந்து 329 பிரிவு வரை பாராளுமன்றம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் விதிகள் சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. குடியரசாக இந்தியா 1950- இல் அடிவைத்தவுடன் காலம் தாழ்த்தாது தேர்தல் சட்டங்கள், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் - 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -1951, எல்லை நிர்ணய ஆணையம் சட்டம் - 1951 ஆகியவை தற்காலிக பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டத்தில் இந்திய பிரஜைகளில் யாரெல்லாம் ஓட்டளிக்கலாம், வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், தொகுதிகள் வரையறை, பாராளுமன்றம் சட்ட சபையில் எவ்வளவு அங்கத்தினர்கள் ஜனத்தொகை அடிப்படையிலும், அந்தந்த இடங்களின் புவியியல் அமைப்பிற்கு ஏற்றவாறு கணிக்க வழிவகை  என்று தேர்தல் நடத்துவதற்கான கட்டமைப்பை சட்டம் உருவாக்குகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதிகளுக்கான விதிகள், தேர்தல் நடக்கும்போது விதி மீறல் குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள்,  தேர்தல் ஆணையின் நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவை மேற்படி சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர் எந்த நிலையில் பதவி இழக்கக் கூடும், தேர்தல் வழக்குகள் விசாரணை என்பவையும்  தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. 

காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு தேர்தல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 1966 -ஆம் ஆண்டு  தேர்தல் சம்பந்தபட்ட  வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்; அதன் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் என்ற திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி,  உப ஜனாதிபதி தேர்தல் வழக்குகளை உச்சநீதி மன்றம் விசாரிக்கும் என்பதும் முக்கியமான மாற்றம். 

1960 - களில் மாநில அளவில் பல அரசியல் கட்சிகள் முளைத்தன. அந்த கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பெரும்பான்மை இடங்கள் பெற்ற பிரதான கட்சி ஆட்சி அமைப்பதற்கு சிறு கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. அந்த கட்சியிலிருந்து வெற்றி பெற்ற அங்கத்தினர்கள் பதவிக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு கட்சி தாவலில் ஈடுபட்டு தேர்தலே கேலிக்கூத்தாகியது. 1967- ஆம் வருடம் ஹரியாணா சட்டசபை காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கயா லால் ஜனதா கட்சிக்குத் தாவினார். அதே நாளில்  மீண்டும் காங்கிரசில் இணைந்தார் . இவ்வாறு ஒரே நாளில் மூன்று முறை கட்சி தாவினார். அப்போது வேடிக்கையாக இந்த கட்சி தாவல், ஊடகங்களில் "ஆயா ராம் கயா ராம்' என்று விமர்சிக்கப்பட்டது! "ஆயா' ஹிந்தியில் "வந்தார்', "கயா' என்றால் போனார், எம் எல் ஏ பெயரும் கயா லால் 
பத்திரிகை கேலிச் சித்திரத்திற்கு பொருத்தமாக அமைந்தது! 

1967, 1971 பொதுத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற, சட்டமன்ற  சுமார் 4000 உறுப்பினர்கள் கட்சி தாவலில் ஈடுபட்டார்கள். நாடெங்கிலும் அரசியல் களம் சூடு பிடித்தது. 

இதை உணர்ந்து தேர்தல் சீர்திருத்தக் கமிட்டிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அமைக்கப்பட்டன. 

இந்திரா அம்மையார், ஒய்.பி.சவான் தலைமையில் கட்சி தாவலைத் தடுக்க 1968- இல் சீர்திருத்தக் கமிட்டி அமைத்தார். அதன் பரிந்துரைகள் அடிப்படையில் கட்சி தாவல் வரைவுச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கட்சி தாவலில் அதிகம் பயனடைந்தது அன்றைய காங்கிரஸ் ஆளும் கட்சி. சட்டம் நிறைவேற்றப்படாமல் தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு விட்டது.

1974-ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் நாராயண் குடிமை உரிமைகள் பாதுகாப்பு தலைவர் தார்குண்டே தலைமையில் தேர்தல் சீர்திருத்தக் கமிட்டி அமைத்தார். அதன் முக்கிய பரிந்துரைகள் வாக்காளர் வயதை 21 -இலிருந்து 18 ஆக குறைக்க வேண்டும்; 

தேர்தல் கமிஷன் தலைவரோடு மேலும் இரண்டு அங்கத்தினர்கள் சேர்க்க வேண்டும்; டிவி ரேடியோ அரசு கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி சுதந்திரமாக செயல் பட வேண்டும்; எல்லாத் தொகுதிகளிலும் வாக்காளர் குழாம் அமைத்து தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும். பின்பு அமைந்த ஜனதாதள அரசால் இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

கட்சி தாவலால் இருபது வருடங்கள் அவதிப்பட்ட பிறகு தான் 1985 -ஆம் வருடம் "கட்சி தாவல் தடுப்பு சட்டம்' ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக பதவி வகித்த போது நிறைவேற்றப்பட்டது.அதன்படி உறுப்பினர் தான் சார்ந்த கட்சி கட்டளை மீறல், கட்சியிலிருந்து விலகுதல், கட்சி மாறல் முக்கிய வாக்கெடுப்பில் எதிர் வாக்களித்தல், அல்லது வாக்களிக்க வராதிருத்தல்,  போன்ற நடவடிக்கைகளுக்கு அந்த உறுப்பினர் பதவி இழப்பார். இந்திய அரசயிலமைப்புச் சட்டம் ஷெட்யூல் 10- இல் எட்டு பத்திகள் கட்சி தாவல் தடுப்பு சட்டம் எப்படி, எப்போது பிரயோகிக்கப்படும் என்பதை விவரிக்கிறது.

ஆனால் ஒரு கட்சி உடைந்து மூன்றில் ஒரு பங்கு அங்கத்தினர்கள் கட்சி மாறினால் சட்டம் பாயாது என்று 2003 -ஆம் வருட 91 வது அரசியல் சட்ட மாற்றம் கொண்டு வரப்பட்டது. இன்னொரு நல்ல திருத்தம், மந்திரி சபை எண்ணிக்கை மொத்த சபை அங்கத்தினர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த திருத்தம் சகட்டு மேனிக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவதைத் தடுத்துள்ளது!

1990 -ஆம் வருடம்  ஜனதா தள அரசு தினேஷ் கோசுவாமி கமிட்டி அமைத்து தேர்தல் சீர்திருத்த அறிக்கை தாக்கல் செய்தது. இடை தேர்தல் நடத்துவதற்கு கால வரையரை, சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட அதிக டெபாசிட் தொகை,செய்தித்தாளில் அரசு விளம்பரங்கள் குறைப்பு,கள்ள ஓட்டுப் போடுவதை தடுத்தல் ஆகிய முக்கிய பரிந்துரைகள் கோசுவாமி அறிக்கையில் 
உள்ளது. 

1998 -இல் அமைக்கப்பட்ட இந்திரஜித் குப்தா கமிட்டி தேர்தல் செலவைக் குறைக்க அரசே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வாகனத்துக்கான எரிபொருள், துண்டு பிரசுரங்களையும், தேர்தல் அறிக்கைகளையும்  அச்சிடுவது, ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதற்கு வேட்பாளர்களுக்கு நேரம் ஒதுக்குதல் ஆகியவற்றிற்கு   ஏற்பாடு செய்யலாம் என்றும், மேலும் பத்தாயிரத்திற்கு மேலான நன்கொடைகளை காசோலை மூலமாகப் பெற வேண்டும் என்பன போன்ற பரிந்துரைகளை அளித்தது.

கள்ள ஓட்டு போடுதல், வாக்குச்சாவடி முற்றுகை போன்ற கேவலமான வன்முறைகள் நடப்பதை மறுப்பதற்கில்லை. 

தமிழ்நாட்டில் நடந்த ஓர் இடை தேர்தலில் வாக்குப்பதிவு மதியத்திற்குள் 60% தாண்டியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. "பர்தா' அணிந்து ஆண்கள், ஓட்டளிக்காத பெண்களின் சார்பில் கள்ள ஓட்டு போட ஒரு கும்பல் தயாரானது தெரிந்து அவர்கள் பிடிக்கப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டது. 

பீகார் , கிழக்கு உத்தரபிரதேசம் மாவட்ட கிராமங்களில் ஊர் தலைவருக்கு கட்டுப்பட்டு வாக்களிப்பார்கள். சில கிராமங்களில் ஊர் தலைவரின் சகாக்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று எல்லா வாக்குகளையும் அவர்களே போட்டு விடுவார்கள். இதுதான் வாக்குச்சாவடி முற்றுகை. 1998 -இலிருந்து படிப்படியாக மின் அணு வாக்குப்பதிவு, வாக்காளர் அடையாள அட்டை, முறைகேடுகளை ஓரளவு ஒழித்திருக்கிறது. ஆயினும் கள்ள ஓட்டு போடுவது  ஒரு கலையாக வளர்ந்து வருவது ஜனநாயகத்திற்கு பேரிழுக்கு.

தேர்தல் கமிஷன் செப்டம்பர் -2021 அறிக்கைப்படி 2858 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் 8 தேசிய கட்சிகள், 54 மாநில கட்சிகள், 2796 
அங்கீகரிக்கப்படாத கட்சிகள். முதல் தேர்தலில் 1864 வேட்பாளர்கள் 489 இடங்களுக்குப் போட்டி போட்டனர். 17 -ஆவது மக்களவைக்கு 2019 தேர்தலில் 543 இடங்களுக்கு 8026 வேட்பார்கள் போட்டியிட்டனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 89.78 கோடி! சராசரி வாக்களிப்பு 67%. 

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 
தீரா இடும்பை தரும்

என்பது வள்ளுவரின் எச்சரிக்கை! குற்றவாளிகள், அரசியல் வாதிகள், அரசு ஊழியர்கள் இவர்களின் இணக்கம் அரசியலை குற்றக் களமாக சீரழிக்கிறது என்பதை உணர்ந்து மத்திய அரசு 1993 -ஆம் ஆண்டு வோஹ்ரா தலைமையிலான கமிட்டி அமைத்தது. குற்றப்பின்னணி உள்ள "தேரான்கள்' தான் அரசியலை ஆட்டிப்படைக்கிறார்கள் என்று பல ஆதாரங்களோடு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டதால் இந்த அறிக்கை ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது! நடக்கும் மக்களவையில் 233 அங்கத்தினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் உடனே உறுப்பினர்  பதவி இழப்பார் என்று உச்சநீதி மன்றம் மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 8(4) பிரிவை ரத்து செய்தது தேவையான சீர்திருத்தம். 2019 தேர்தலில் செலவு ரூ.50 ஆயிரம் கோடி. அதில் சுமார் ரூ.15000 கோடி வாக்காளர்களுக்கு!

"வோட்டுக்கு காசு... இல்லேன்னா வெற்றிக்கு வேட்டு' என்பதைக் களைவதற்கு ஒரே வழி, ஜனநாயகக் கடமையைப் புறக்கணிக்கும் படித்தவர்கள் வாக்களிக்க 
வேண்டும்.

மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மீண்டும் அவதாரம் எடுத்து வரவேண்டும்!

"நாற்காலியாய் இருந்தவன்
இருகாலி ஆனான்.
இருகாலி ஆனதால்
நாற்காலி செய்தான்.
நாற்காலிக்காக
நாற்காலி ஆனான்'

பதவி மனிதனை மிருகமாக்கும் என்ற அப்துல் ரகுமானின் கவிதை இன்றைய பொது வாழ்வின் அவல நிலையை உணர்த்துகிறது சென்ற  வாரக் கேள்விக்கு பதில்: தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகள் எண்பது இந்த வாரக் கேள்வி: வாக்காளர் வயது எந்த வருடம் மாற்றப்பட்டது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத்தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com