குளோபல் சிட்டிசன்!

""என்னங்க... இவ்வளவு படிச்சிருக்கீங்க? இன்னமும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கிட்டு இருக்கீங்க?'' இந்த வார்த்தையை அடிக்கடி கற்றறிந்த இளைஞர்களிடம் பெரியவர்கள் கேட்பதுண்டு.
குளோபல் சிட்டிசன்!


""என்னங்க... இவ்வளவு படிச்சிருக்கீங்க? இன்னமும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கிட்டு இருக்கீங்க?'' இந்த வார்த்தையை அடிக்கடி கற்றறிந்த இளைஞர்களிடம் பெரியவர்கள் கேட்பதுண்டு.

அப்படி என்றால் ஒரு சின்ன வட்டத்துக்குள் இருந்து கொண்டு பயணிப்பதை இன்றைய பெரியவர்களே விரும்புவதில்லை என்பது புரியும். அதுவும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய சிந்தனை, உலகளாவிய கல்வி போன்றவை மிக அவசியமாக மாறிவிட்டன.

மென்பொருள் துறையைப் பொருத்தவரை,  சென்னையில் இருக்கும் மென் பொறியாளர் அமெரிக்காவிலுள்ள, வாடிக்கையாளரிடம் பேச வேண்டியதுள்ளது. அதுபோல் பெங்களூருவில் இருக்கும் நிறுவனத் தலைவர், லண்டனில் இருப்ப
வருடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையுள்ளது.

இப்படி தொழில்ரீதியான சந்திப்புகளும், கலந்துரையாடல்களும் நாடுகளைக் கடந்து நிகழும் போது அந்தந்த நாடுகளின் சூழ்நிலை, கலாசாரம், கல்வி போன்றவற்றை தெரிந்திருந்தால் மிக விரைவாக நமது எண்ணங்களை, கருத்துகளை அவர்களுக்குப் புரியும் விதத்தில் சொல்லிவிட முடியும். இப்படி உலகளாவிய சிந்தனை அல்லது உலகளாவிய கல்வி மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

குளோபல் சிட்டிசன், குளோபல் எஜுகேஷன் என்ற வார்த்தைகள் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களால் உச்சரிக்கப்பட்டு வருகின்றன. இப்படி உலகமயமாகி விட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்களைத் தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொள்வது மிக அவசியம்.

ஒருவர் குளோபல் சிட்டிசன் ஆக விரும்பினால் உலக சமூகத்திற்கு தனது பங்களிப்பை கொடுக்கக் கூடியவராக தன்னை மேம்படுத்திக் கொள்வது அவசியம்.

உலகளாவிய சிந்தனை தற்போதைய தேவையாக மாறிவிட்டது. இனி வரும் மனித வரலாறு முழுவதும் குளோபல் சிட்டிசன் இருப்பது அவசியமானதாக மாறிவிட்டது.

எந்த ஒரு நாடாக இருந்தாலும் சரி, அங்கு குழுக்களாகவும், சமூகங்களாகவும் மக்கள் ஒழுங்கமைக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய குழுக்களில் ஒரே மாதிரியான சிந்தனைகள், கலாசாரம் இருப்பது நடைமுறை. அதுபோல் குழுக்களுக்கு என்று ஒரு தனி அடையாளமும் இருக்கும். இதைத் தாண்டி உலகளாவிய சிந்தனை என்ற பரந்து விரிந்த உலகிற்குள் நுழையும் போது அது பொருளாதாரரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மதரீதியாகவும், சமூகரீதியாகவும் புதிய சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

வகுப்பறை கற்றலில் கூட மாணவர்களுக்கு குளோபல் எகனாமிக்ஸ் பாடம் புதுவிதமான சிந்தனையை அளிக்கும். அத்துடன் உலக வரலாறு,

ஒவ்வொருவரின் அடையாளங்கள் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாசாரங்கள், சுற்றுச்சூழல் குறித்த பார்வை போன்றவற்றை இத்தகைய குளோபல் கல்வி முறை வழங்கும்.

இத்தகைய குளோபல் கல்வி முறையால் மாணவர்கள்,  நம்பிக்கை உள்ள நபர்களாக, உலக சிந்தனையை தெரிந்துகொண்ட மாணவர்களாக பரிணமிக்க முடியும். உலகளாவிய சிந்தனை திறன் பெற்றுவிட்ட இளைஞர்களால் இந்த உலகம் எவ்வாறு ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து செயல்பட முடியும்.

அத்துடன் ஒரு குறிப்பிட்ட செயல் நம் நாட்டிலும் மற்ற நாடுகளிலும் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற மாற்றங்களை தாம் செய்யும் தொழிலில், வேலையில் புகுத்தி உலக அளவில் அந்த மாற்றங்களை மதிப்புமிக்க மாற்றங்களாக ஆக்க முடியும். உலகளாவிய சிந்தனையைப் பெற்றவர்களால் உலகம் தழுவிய அனைத்து பொருட்கள் குறித்தும் விவாதிக்க முடியும். அதன் மூலம் மிகச்சிறந்த உயரிய இடத்தை எட்ட முடியும்.

இத்தகைய சிந்தனை படைத்த இளைஞர்கள் உள்ளூர் விஷயம் முதல் உலக விஷயம் வரை தெரிந்து கொள்ள முயற்சிப்பதால் அவர்கள் அனைத்து நிலைகளிலும் விவரங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் உடையவர்களாக மாறுகின்றனர். இதனால் ஒரு பொருள் குறித்து தெளிவான சிந்தனையை அவர்களால் பெற முடிகிறது. அதை பயன்படுத்தி சிறப்பான நிலையை அவர்களால் எட்ட முடிகிறது.

இன்னும் சொல்லப்போனால் உலகளாவிய சிந்தை  மற்றும் உலகளாவிய கல்வி முறையை தெரிந்த குளோபல் சிட்டிசன்களால்தான்  இனி வரும் காலத்தில் வரக் கூடிய எல்லாப்  பிரச்னைகளையும்  மிக எளிதாக தீர்க்க முடியும்; சமாளிக்க முடியும்.

சிக்கலான பிரச்னைகள் உலகம் முழுவதும் எவ்வாறு கையாளப்பட்டுள்ளன? எந்த சூழ்நிலையில், எந்த கலாசாரப் பின்னணியில் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது? என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு அந்தப் பிரச்னைக்கு நமது பகுதியில் எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டு தீர்வுகளை அளிக்கும் திறமையையும் இத்தகைய கல்வி நமக்கு வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com