வளர்ச்சிக்கு உதவும் மேலாண்மைத் திறன்!

படித்து பட்டம் பெற்று நல்ல மதிப்பெண் களைப் பெற்ற பல திறமையான இளம் வயதினருக்கு, கல்வி கற்கும் நிறுவனங்களில் நடத்தப்படும் வளாக நேர்காணல்களிலேயே வேலை கிடைத்துவிடுகிறது.
வளர்ச்சிக்கு உதவும் மேலாண்மைத் திறன்!

படித்து பட்டம் பெற்று நல்ல மதிப்பெண் களைப் பெற்ற பல திறமையான இளம் வயதினருக்கு, கல்வி கற்கும் நிறுவனங்களில் நடத்தப்படும் வளாக நேர்காணல்களிலேயே வேலை கிடைத்துவிடுகிறது. படிப்பை முடித்தவுடன் வேலைக்குப் போகும் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் படிப்பு மட்டுமே. எனவே அவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள், தங்களுடைய நிறுவனத்துக்குத் தேவையான திறன்களை அவர்கள் பெறும்வகையில் நிறுவனம் சார்ந்த பயிற்சியை அளிக்கிறார்கள்.

ஒரு நிறுவனத்தின் எந்தப் பிரிவில் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தாலும், தனக்குக் கீழ் அல்லது தன்னுடன் வேலை செய்பவர்களை மேலாண்மை செய்வது அவசியமாகிவிடுகிறது. வேறு சொற்களில் கூற வேண்டும் என்றால், ஒரு பொறியாளர், பொறியாளராக மட்டும் இல்லாமல், மேலாளராகவும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

எந்த ஒரு நிறுவனம் என்றாலும் சரி, அது சிறிய அளவிலான நிறுவனம் என்றாலும், பெரு நிறுவனம் என்றாலும் அந்த நிறுவனம் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்றால் அதில் பணியாற்றும் மேலாளரின் செயல்திறன் மிகச் சிறப்பானதாக அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

அலுவலகத்தின் ஊழியர்கள் திறம்பட உழைத்தாலும் அதற்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்து அந்த பணியை மேலும் பயனுள்ளதாக மாற்றும் பொறுப்பும், கடமையும் மேலாளருக்கு உண்டு. அத்தகைய சிறப்புமிக்க பணியிடத்தில் பணிபுரியும் அலுவலக மேலாளர்கள் பல்வேறு திறன் உடையவர்களாக இருப்பது அவசியம்.

ஒவ்வோர் அலுவலக மேலாளருக்கும் சிறப்பான தகவல் தொடர்புத் திறன் இருப்பது அவசியம். அலுவலக மேலாளர் ஊழியர்களுடனும், வாடிக்கையாளர்களுடனும், நிறுவனத்தின் பங்குதாரர்களுடனும் பேசும்போது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசும் திறன் உடையவராக இருப்பது அவசியம்.

மேலாளருக்கு சரியான தகவல் தொடர்பு திறன் இல்லை என்றால் ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற முடியாமல் கூட போய்விடும். "அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியவில்லை; நாம் எப்படி வேலை செய்ய முடியும்' என்று அவருக்குக் கீழ் வேலை செய்பவர்கள் நினைக்கக் கூடாது. மேலாளரின் வார்த்தையை நம்பி நாம் எப்படி வேலை செய்ய முடியும் என்பன போன்ற கேள்விகள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியிலும் எழக்கூடும். இதனால் நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். மேலாளர் தான் சொல்ல வந்ததை தெளிவாகவும் பிறருக்குப் புரியும் வகையிலும் பேசக் கூடிய திறன் படைத்தவராக இருக்க வேண்டும்.

கடைநிலை ஊழியர் முதல் மேல்நிலை ஊழியர் வரை அனைவரும் செய்யக்கூடிய பணிகள் குறித்த தெளிவான சிந்தனையும், அறிவும் பெற்றவராக அலுவலக மேலாளர் இருப்பது அவசியம். யார் யாருக்கு எந்தப் பணி, எந்த அளவுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது; எந்த கால அளவுக்குள் அவற்றை முடிக்க வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவு மேலாளருக்கு இருக்க வேண்டும். அப்போது தான் எந்த நிலையில் தவறு நடக்கிறது என்பதைக் கண்டறிந்து அதைச் சரி செய்வதற்கான ஆலோசனைகளை அவர் வழங்க முடியும்.

அதேசமயம் அந்தப் பணிகளை அவரே நேரடியாகச் செய்யாமல், அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை ஊழியர்களுக்கு அறிவுறுத்தக் கூடிய, கற்பிக்கக் கூடிய செயல்பாட்டு மேலாண்மை திறன் உடையவராக இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, பணியாளர் வருகைப் பதிவேடு முதல் அவர்களின் ஊதியம், ஊதிய பிரச்னை, வரவு செலவு, நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகள் போன்ற அனைத்தையும் தெரிந்தவராக மேலாளர் இருப்பதுடன், இன்றைய காலகட்டத்திற்கு தேவையான கணினி மென்பொருள் குறித்த அறிவும் கைபேசி பயன்பாடுகள் குறித்த அறிவும் உடையவராக இருத்தல் மிக அவசியம்.
இன்றைய வேகத்தில், இணைய யுகத்தில், ஒரே நேரத்தில் பல பணிகளை கையாளக் கூடியவர்களைதான் பெரிய நிறுவனங்கள் விரும்புகின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மேலாளர்களை நியமிப்பதை விட, ஒருவர் பல பணிகளை திறம்பட நிர்வகிக்க கூடியவராக இருந்தால் அப்படிப்பட்ட திறமையானவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

அலுவலக மேலாளர்கள் என்றதும் அலுவலகத்தை மேலாண்மை செய்பவர் என்ற எல்லைக்குள் அவரைக் குறுக்கிவிடக் கூடாது. வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் தொடர்பில் இருப்பவர்கள் தான் அலுவலக மேலாளர்கள்.

அவர்கள், தொலைபேசி மூலமாக கிடைக்கும் விவரங்களையும், மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் வரும் தகவல்களையும் சேகரித்து, அதை தொடர்புடைய ஊழியர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களிடம் விவரங்களைக் கேட்டு பெற்று வாடிக்கையாளர்களுக்கு சரியான பதிலை சொல்ல வேண்டிய பணி அலுவலக மேலாளருடையதாக பல நிறுவனங்களில் உள்ளது. இத்தகைய பணியைச் செய்யும் திறன் உடையவராக
அலுவலக மேலாளர் இருப்பது அவசியம்.

அதேபோன்று ஒரே சமயத்தில், பலர், பல வழிகளில் தகவல்களை கேட்டாலும் கூட, குறிப்பிட்ட காலக் கெடுவில் அந்த தகவலை சம்பந்தப்பட்டவருக்கு சொல்லும் திறன் உடையவராக அலுவலக மேலாளர் இருப்பது முக்கியம். இவை அனைத்திற்கும் மேலாக நேரமேலாண்மை தெரிந்தவராக அலுவலக மேலாளர் இருப்பது சிறப்பான பலனைத் தரும்.

அத்துடன் அலுவலக மேலாளர்கள் எப்போதும் அலுவலகம் தொடர்பான பணிகளுக்கு தேவையான விஷயங்களில் அப்டேட் ஆக இருப்பது அவசியம். ஓர் அலுவலகத்தில் புதிதாக ஒரு மென்பொருளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றால் அந்த மென்பொருள் குறித்த அறிவைப் பெறவேண்டியது அவருக்கு அவசியம். அத்துடன் தங்களின் வாடிக்கையாளர்கள் எந்த வழிமுறையைப் பின்பற்றி ஆவணங்களைப் பார்க்க விரும்புகிறார்கள் அல்லது நிறுவன பொருட்களை வாங்க விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற புதிய தொழில்நுட்பத்தை அலுவலகத்தில் புகுத்துவதுடன் அது குறித்த தெளிவான அறிவையும் அவர் பெற வேண்டியது அவசியம்.

அலுவலக மேலாளர்கள் இத்தகைய திறன்களை வளர்த்துக் கொள்வதுடன், அவ்வப்பொழுது அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணியையும், ஊழியர்களுக்கு புத்துணர்வு, புத்தாக்க பயிற்சிகளையும் வழங்கி, உலக சூழலுக்கு ஏற்ப தங்களின் நிறுவனத்தையும் தயார்படுத்த வேண்டிய கடமையும் ,பொறுப்பும் உள்ளவராக இருந்தால் மட்டுமே காலத்திற்கேற்ற வேகத்துடன் செயல்பட்டு நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com