இணைய வெளியினிலே...

இணைய வெளியினிலே...

அன்று வயதைப் பார்த்து வந்த மரியாதை,இன்று வசதியைப் பார்த்து மட்டுமே வருகிறது


முக நூலிலிருந்து....

வெளியிலிருந்து வந்த கிளியை வீட்டுக்குள்
வளர்க்கத் தொடங்கினோம்.
அது எங்கள் மொழியைப் பேசுவது
இனிமையாக இருந்தாலும்,
வருத்தம்தான்... அது
தாய்மொழியை மறந்தது.

பழநி பாரதி

சீரியசா பதிவு போட்டா சிரிச்சு வைக்கறது,
காமெடியா எழுதினா அழுது வைக்கிறது,
தத்துவப் பதிவுல வந்து தண்ட "லைக்' போடறது,
வயிறு வலின்னு சொன்னா "வாவ்' பட்டனை அழுத்துறது,
எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்...
சாக்ரதை...

பெ. கருணாகரன்

மரத்திற்கு
நீர் வார்க்கும் சிறுமியோ,
அதிலொரு தளிராகிறாள்.

ஆசு சுப்பிரமணியன்

நம் கஷ்டங்களுக்கெல்லாம் ஒரே காரணம்,
" உலகத்துலேயே நம்மள மாதிரி யாரும் கஷ்டப்படல' என்று
நினைத்து நினைத்து கஷ்டப்படுவதுதான் !

செல்லி ஸ்ரீனிவாசன்

சுட்டுரையிலிருந்து...

ஒரு குழந்தையிடம் போய்,
""உனக்கு அம்மா பிடிக்குமா?
அப்பா பிடிக்குமா?'' என்று
கேட்க ஆரம்பிப்பதில்
தொடங்குகிறது
குடும்ப அரசியல்.

சாமுவேல் ராஜா


இவங்க தான்
நல்ல உறவு என்று
நம்பும் நேரத்தில்
நாங்கள் தான்
நல்ல நடிகர்கள் என்று
நிரூபித்து விடுகின்றனர் சிலர்.

ஸ்வீட் கிரேஸி கேர்ள்

தேவை இதுவென
அறிந்தவர்களின்
முயற்சிகளில்
ஒரு தெளிவு இருக்கும்...
நாலா பக்கமும்
கால் வைக்க மாட்டார்கள் ;

நவ்யா


அன்று வயதைப் பார்த்து வந்த மரியாதை,
இன்று வசதியைப் பார்த்து மட்டுமே வருகிறது

அன்லக்கி நைன்ட்டீஸ் பாய்

வலைதளத்திலிருந்து...

போதும். நிறுத்துங்கள்.

எதோ ஒரு வகையில் உங்களின் அதீத ஆசை, திடீர்னு கிடைக்கும் புகழ், நாய்களுக்குப் போடுகின்ற எலும்புத்துண்டுகள் மாதிரி உங்களுக்கு வீசி எறியப்படும் சில பொன்னாடைகள், ஊடக வெளிச்சங்கள், காமிரா "பளீச்', "பளீச்' மின்னல்கள்... இந்த வலையில் விழுந்துவிட நீங்கள் என்ன விட்டில் பூச்சிகளா?

புகழும் அதனால் கிடைக்கும் அடையாளமும் உங்களைத் தேடி வரவேண்டும். நீங்கள் அவற்றைத் தேடிச் செல்லும்போது அறிந்தே தான் அதன் முகவர்களின் வலைக்குள் சிக்கிக் கொள்கின்றீர்கள்.

உழைப்பும் தகுதியும் இன்றி கிடைக்கும் எதுவும் இங்கே காலத்தின் முன்னால் தகுதி இழந்துவிடும்.

இது என்னவோ பொன்மொழி அல்ல.

சில பெரிய விருதுகள் பட்டியலில் போய் (பெயர் சொல்ல விரும்பவில்லை) அவர்களின் படைப்புகளை எடுத்து வாசித்துப் பாருங்கள். இன்று அவர்களின் படைப்புகளை இனாமாகக் கொடுத்தாலும் வாசிக்க ஆளில்லை. ஏன்?

காலத்தின் முன்னால் அவை நிற்கவில்லை.

அவர்களுக்கு அப்போது கிடைத்த அந்த அங்கீகாரமும் கூட, அவர்களுக்கு எதனால் கிடைத்திருக்கிறது என்பதையும் சேர்த்து யோசிக்கும்போது உங்களுக்கு நான் சொல்ல வருவது புரியும்!

தகுதியும் உழைப்புமில்லாமல் கிடைக்கும் எதுவுமே கோமாளிக்கு மாட்டிவைத்த கிரீடம் போலத்தான் இருக்கும்; இருக்கிறது.

ஒவ்வோர் உழைப்புக்கும் பின்னால் கிடைக்கும் சின்ன சின்ன பாராட்டுதல்கள், நமக்கு கிடைக்கும் அங்கீகாரத்தின் வரைபடம் மெல்ல மெல்ல தனக்கான இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும்.

சரி... அப்படித்தான் எதுவும் நடக்கவில்லை என்றாலும், ஒன்றும் குடிமுழுகிவிடாது. உங்கள் சுயம், கடைசிவரை உங்களுடன் நிற்கும். அது ரொம்பவும் முக்கியம்.

http://puthiyamaadhavi.blogspot.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com