இளம் தொழில்முனைவோர்... கவனிக்க வேண்டியவை!

பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் அதிகரித்து வருகிறது.  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.
இளம் தொழில்முனைவோர்... கவனிக்க வேண்டியவை!

பொருளாதார வளர்ச்சி இந்தியாவில் அதிகரித்து வருகிறது.  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியானது மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து எளிமைப்படுத்த முயன்று வருகிறது.

அதன் காரணமாக புதிதாக பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன.  இளைஞர்கள்  தொடங்கும் சிறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மக்களின் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக அந்நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. உலக அளவில் இளம் தொழில்முனைவோர் பலரின் வளர்ச்சியைக் கண்கூடாகக் கண்டு, தொழில் தொடங்க வேண்டும் என்ற வேட்கை நமது இளைஞர்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

அத்தகைய விருப்பத்தில் தொழில் தொடங்கும் இளைஞர்கள் பலரும் சில ஆண்டுகளில் காணாமல் போகின்றனர். போதிய ஆய்வுகள் இன்றி தொழில் களத்துக்குள் இறங்குவதே அதற்கு முக்கியக் காரணம். தெளிவாக ஆராய்ந்து தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். சில விஷயங்களில் நாம் கெட்டிக்காரர்களாக இருப்போம். அந்த விஷயத்தைச் செய்வதில் நமக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும். அதைத் தொழிலாக மாற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புவது தவறானதாகும். நமக்கு மகிழ்ச்சி தரும் எந்த விஷயமும் லாபகரமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய விரும்பும் இளைஞர்கள், அப்பொருளுக்கான சந்தையை சரியாக மதிப்பிட வேண்டும்.  மக்களுக்கு மிகவும் அத்தியாவசியப் பொருளை நிறுவனத்தின் மூலமாக நீங்கள் அளித்தாலும், அதன் விலை பிற நிறுவனங்களின் உற்பத்திப் பொருளின் விலையை விட அதிகமாக இருந்தால் மக்கள் வாங்குவது கடினம். 

எனவே சந்தை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியது கட்டாயம். நீங்கள் எந்த மாதிரியான பொருளை அல்லது சேவையை மக்களுக்கு வழங்கப் போகிறீர்கள்? உங்கள் வாடிக்கையாளர்கள் யார்? உங்கள் பொருள்அல்லது சேவை வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? எவ்வளவு விலைக்கு அதை வழங்கவுள்ளீர்கள்? அந்த விலைக்குக் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் அதை வாங்குவார்களா? 

உங்கள் விலை அதிகமென மக்கள் கருதினால், எவ்வளவு விலைக்குக் கொடுத்தால் மக்கள் வாங்குவார்கள்? உங்களுடைய போட்டியாளர்கள் யார்? அவர்கள் என்ன விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள்? எந்த இடத்தில் தொழில் நிறுவனத்தைத் தொடங்கப் போகிறீர்கள்? போட்டியாளர்களைச் சமாளிக்க வாடிக்கையாளர்களுக்கு என்ன மாதிரியான சலுகைகளை வழங்கப் போகிறீர்கள்? இவை மட்டுமல்லாமல் இன்னும் பல கேள்விகளுக்கான விடைகளைத் தொழில் தொடங்க விரும்புபவர்கள்  கண்டறிய வேண்டும். 

இதற்கு வாடிக்கையாளர்களிடமே நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தி அவர்களது மனநிலையைக் கண்டறிவது அவசியம். இத்தகைய நடவடிக்கைகளின்போது உங்கள் உறவினர்கள், நண்பர்களை மட்டுமே சந்தித்து கருத்துகளை அறியக் கூடாது. அவர்கள் உங்களது நிறுவனம் குறித்து விமர்சனங்களை வழங்கத்  தயங்குவார்கள். அது உண்மையான ஆய்வாக இருக்காது. 

எனவே, உங்களுக்கு யார் என்றே தெரியாத நபர்களிடமும் சென்று ஆய்வு நடத்த வேண்டும். உங்கள் பொருள் அல்லது சேவை குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் திட்டமிடலும் சரியாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். 

போட்டியாளர்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் என்ன மாதிரியான தொழில் உத்திகளைக் கையாள்கிறார்கள் என்பதையும், அவர்களிடமிருந்து வாடிக்கையாளர்களை ஈர்க்க என்னென்ன சலுகைகளை நாம் வழங்க வேண்டும் என்பதையும் தீர முடிவு செய்து கொள்ள வேண்டும். 

சந்தைச் சூழலை முழுமையாகக் கண்காணித்த பிறகு தொழிலில் இறங்குவது பெரும் பலனையும் நம்பிக்கையையும் தரும். 

எவ்வளவு ஆராய்ந்து இறங்கினாலும், ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். இன்று பிரபலமாக இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஆரம்பத்தில் தோல்விகளைச் சந்தித்தவைதான். ஆகவே ஆரம்பநிலையில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு அச்சப்படக் கூடாது. உங்கள் முயற்சியே தவறு என்று கருதிவிடக் கூடாது. 

உங்கள் உழைப்பைத் தொடர்ந்து செலுத்துங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் சரியானதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கடந்த கால தோல்விகளைப் பற்றியோ எதிர்கால வெற்றிகளைப் பற்றியோ கனவுகள் வேண்டாம். நிகழ்காலத்தில் 100 சதவீத ஈடுபாட்டுடன் செயல்பாடுங்கள். உழைப்பு என்றுமே வீண்போகாது; நிச்சயம் பலன் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com