படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டவேண்டும்!

சுமார் 1000 விளம்பரங்களுக்கு மேல் நடித்திருப்பவர் மணிஷா ஸ்ரீ. பெற்றோரின் ஆசைக்காக பட்டப்படிப்பு படித்துவிட்டு, தனது  நடிப்புக்கு

சுமார் 1000 விளம்பரங்களுக்கு மேல் நடித்திருப்பவர் மணிஷா ஸ்ரீ. பெற்றோரின் ஆசைக்காக பட்டப்படிப்பு படித்துவிட்டு, தனது  நடிப்புக்கு விரும்பி வந்திருப்பவர். இவருக்கு பூர்வீகம் ஜெய்ப்பூராக இருந்தாலும் தமிழை அவ்வளவு அழகாகப் பேசுகிறார். "எப்படி?' என்றால், "என்ன சார், படித்து, வளர்ந்தது எல்லாம் சென்னைதான், அப்படியிருக்கும்போது தமிழ் பேசமாட்டேனா... அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் பி.ஏ., ஆங்கில இலக்கியம், லயோலாவில் எம்.பி.ஏ., படித்தேன். நல்லா தமிழ் பேசுவேன். அதுதான் என் நடிப்பு வாழ்க்கைக்கு பிளஸ்' என்கிறார்.

"இருக்கு ஆனா இல்ல' படத்தில் அறிமுகமாகி, இப்போது  "வீர சிவாஜி', "ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பெற்றோரின் விருப்பம் படிப்பு, உங்களின் விருப்பம் நடிப்பு... எப்படி 1000 விளம்பரங்களில் நடிக்க முடிந்தது?

நான் என்னுடைய அம்மாவுக்குத் தெளிவாக ஒன்றை விளக்கிவிட்டேன். படிப்பதை எந்தக் காலத்திலும் விட்டுவிடமாட்டேன். நீங்கள் நினைப்பதை சாதித்துக்காட்டுவேன். படிப்புக்குத் தொல்லை இல்லாமல் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று சொன்னேன். அவரும் அதற்குச் சம்மதித்தார். சிறுவயதில் பள்ளியில் நிறைய நாடகங்களில் நடித்தேன். வயது கூடக்கூட போட்டோ ஷுட், கமர்ஷியல் விளம்பர படங்கள் என்று ஆர்வம் அதிகரித்தது. இருப்பினும் என் குடும்பத்தில் யாரும் சினிமா பின்புலம் கொண்டவர்கள் இல்லை. அதனால், நிறைய போராடவேண்டும் என்று எனக்குத் தெரியும். மாடல், விளம்பரம் என்று தொடங்கினால், நடிப்பது சுலபமாக இருக்கும் என்று என் தோழிகள் சொன்னார்கள். அதனால் படிக்கும் காலத்தில் எனக்குக் கிடைத்த விளம்பர வாய்ப்புகளைப் பயன்படுத்திக்

கொண்டேன்.

என்னென்ன விளம்பரப் படத்தில் நடித்திருக்கிறீர்கள்?

ரிலையன்ஸ், ஆர்எம்கேவி, சரவணா ஸ்டோர், குமரன் சில்க்ஸ் இப்படி ஏராளமான விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் 20, 25 நாட்கள் தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் நடித்தேன்.

"இருக்கு ஆனா இல்ல' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி வந்தது?

இதுவும் என் தோழி மூலம்தான் கிடைத்தது. அவள்தான் இந்தப் படத்துக்கு ஆடிஷன் நடப்பதைச் சொன்னாள். போய் கலந்துகொண்டேன். போட்டோ ஷூட் எடுத்தார்கள். ஓகே ஆனது. உடனே வாய்ப்பு கிடைத்துவிட்டது.

அந்தப் படத்தில் நன்றாக நடித்திருந்தும், படவாய்ப்புகள் அதிகம் இல்லையே?

உண்மைதான். என்னைப் பார்ப்பவர்களும் ""அந்தப் படத்தில் நன்றாக நடித்திருந்தாய், ஆனால், படம் வெளியான நேரம்தான் சரியில்லை. அதனால் உன்னைப் பற்றித் தெரியாமல் போய்விட்டது'' என்றார்கள். அந்தப் படம் வெளியான நேரத்தில்தான், தனுஷ் நடிப்பில் "வேலையில்லா பட்டதாரி' படம் வெளியானது. ஆனால், அதற்காக ஓய்ந்திருக்க முடியுமா? தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

ஹிந்தியில் நடிக்கிறீர்களாமே?

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ஹீரோவாக நடித்த சந்தோஷ் பிரதாப்புடன் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அந்தப்படம் தமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிகளிலும் உருவாகியுள்ளது. ஜனவரியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

"ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்' படத்தில் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறீர்கள்? 

நான் வீட்டில் இருக்கும்போது எப்படி ஜாலியாக, எந்தவித உணர்ச்சிக்கும் தடையில்லாமல் இயல்பாக இருப்பேனோ அப்படி இருக்கக்கூடிய பாத்திரம். ரொம்பவும் சந்தோஷமாக நடித்தேன். இந்தப் படத்தின் இயக்குநர்  ராஜ ராஜன், தன் படத்தின் ஹீரோயின் நன்றாக தமிழ் பேசக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும் தேடி

யிருக்கிறார். அவர் கண்ணில் நான் சிக்கிவிட்டேன். உடனே ஒப்பந்தம் போட்டுவிட்டார். இருப்பினும் கதையைக் கேட்டுத்தான் நடித்திருக்கிறேன்.

"வீர சிவாஜி' படத்தில் ஷாம்லிதான் ஹீரோயின்... நீங்கள்?

அந்தப் படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே இந்த பயம் எனக்கும் இருந்தது. ஏனென்றால், நான் இப்போதுதான் முன்னேறிக்கொண்டிருக்கிறேன். இப்போதுபோய் ஏதாவது கேரக்டர் ரோலில் நடித்தால் சரியாக இருக்குமா என்று யோசித்தேன். படத்தின் இயக்குநர் கதையைச் சொன்னபோது, அந்தப் பயம் நீங்கிவிட்டது. படத்தில் நானும் ஒரு ஹீரோயின்தான். எனக்கும் பாடல் உண்டு. அதிலும் ஒரு முக்கியமான ரோல். "சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் ஜெனிலியா மாதிரியான ரோலில் நடித்திருக்கிறேன்.

எந்தமாதிரியான வேடங்களில் நடிக்க ஆசை?

எனக்கு இருக்கும் ஒரே ஆசை ஒரு படத்தில் நடித்தது மாதிரி இன்னொரு படத்தில் நடிக்கக்கூடாது. இன்றைய சூழலில் அப்படி நடித்தால் இரண்டு படங்களிலேயே காணாமல் போய்விடுவோம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடிக்கவே ஆசை. கேரக்டர் ரோல் பண்ணினால்கூட இப்படித்தான் இருக்கவேண்டும். "அருந்ததி' அனுஷ்கா, "சந்திரமுகி' ஜோதிகா மாதிரி சில படங்கள் பண்ணினால்கூட போதும். சும்மா பொம்மை மாதிரி வந்துபோகவா அம்மாவிடம் சபதம் போட்டுவிட்டு, சினிமாவில் நடிக்க வந்தேன்? அதனால், ரசிகர்கள் மனதில் என்றைக்கும் பெயர் இருக்கும்படி ஒரு படத்தில் நடித்தாலும் போதும். நான் அப்படித்தான் நடிக்க விரும்புகிறேன். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது படிப்பு. வேறு வேலை பார்க்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com