ஆரோக்கியமான சமுதாயத்திற்கு பாலியல் அறிவு அவசியம்!

இன்றைக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பரவலாக எல்லோரிடமும் போய் சேர்ந்திருக்கிறது என்றாலும் 20 வருடங்களுக்கு முன்னால் இருந்த நிலை வேறு.

இன்றைக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பரவலாக எல்லோரிடமும் போய் சேர்ந்திருக்கிறது என்றாலும் 20 வருடங்களுக்கு முன்னால் இருந்த நிலை வேறு. அந்த காலகட்டத்தில் அன்றைய சமுதாய சூழ்நிலையில் மருத்துவர்களும் பயந்து ஒதுங்கியபோது தனது சக மருத்துவரான தோழியுடன் இணைந்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆலோசனைகள் சொல்லி மருத்துவ சிகிச்சைக்கு வழிகாட்டியது மிகப்பெரிய சவாலான விஷயம் என்கிறார் மகப்பேறு மருத்துவரான டாக்டர். அமுதா ஹரி.

ஒருமுறை என்னிடம் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த பெண், தன் குழந்தையை பெற்றுக் கொள்ளவே விருப்பினார். அவருக்கு தேவையான ஆலோசனைகள் மருத்துவ ரீதியான மருந்து மாத்திரைகள் போன்றவற்றை பரிந்துரை செய்தேன். குழந்தை நல்லபடியாக பிறந்தது. தீபாவளி அன்று அந்த குழந்தை பிறந்ததால் ஒவ்வொரு வருடமும் தீபாவளியின்போது அந்த பெண்மணி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார். தனது பெண் குழந்தையை படிக்க வைத்து நல்ல நிலையில் கொண்டு வர வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்பார். அவள் வளர்ந்து வருவதைப் பார்க்க பார்க்க தன்னுடைய நோயே தெரியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் சொல்வார். 

இன்றைக்கு பள்ளிக்குப் போகும் மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றி தெரிந்திருந்தாலும் பாலியல் கல்வி போதிப்பது எதிர்காலத்தில் பாலியல் ரீதியான விஷயங்களில் அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாகவும் அமையும். எய்ட்ஸ் போன்ற நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியமான சமுதாயம் உருவாக பாலியல் கல்வி அவசியம்.

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சில விஷயங்களை நாம் தெளிவு படுத்தி விட வேண்டும். குறிப்பாக, உடலில் எங்கு தொடலாம், தொடக்கூடாது என்பதை (குட் டச், பேட் டச்) அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். இதனால் குழந்தை எது சரி; சரியல்ல என்பதை புரிந்து கொள்ளும். இதனால் பல தவறுகள்கூட தடுக்கப்படலாம்.

மேலும் குழந்தை பருவத்திலிருந்து டீன் ஏஜ் பருவத்திற்கு வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளையும் உடலுறுப்புகளில் உண்டாகும் வளர்ச்சிகள் பற்றியும் அவர்களுக்கு தெளிவு படுத்துவது இன்றியமையாதது.

""நீ பெரியவளாக வளர்வதால் இப்படி மாற்றம் ஏற்படும். இது இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படும் சாதாரண உடல் மாற்றம்தான். இது ஒரு பெரிய விஷயமில்லை'' என்று அவர்களுக்கு புரிய வைக்கலாம். ஆண் குழந்தைகளுக்கும் இப்படியான உடல் மாற்றங்கள் குறித்து சொல்லி தர வேண்டும். அதன்பிறகு இன்டர்நெட்டிலோ அல்லது திரைப்படங்களிலோ உணர்வு ரீதியிலான சில காட்சிகளைப் பார்த்தாலும் அவர்களுக்கு வித்தியாசமான எண்ணங்கள் தோன்றாது.

முக்கியமாக, பெற்றோர் அல்லது ஆசிரியர்கள்தான் மாணவர்களின் பாலியல் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க கடமைப்பட்டவர்கள். ஆசிரியர்கள் எளிதாகவே சொல்லித்தரலாம். போர்டில் படம் வரைந்து "இவை இனப்பெருக்க உறுப்புகள். இதன் அத்தியாவசியம் இனப்பெருக்கம்தான். இது ஒரு சாதாரணமான விஷயம்' என்பதை புரியும்படி சொல்லித் தரலாம்.  

பெற்றோரும் கேள்வி கேட்கும் குழந்தைகளை, ""இப்படி பேசக்கூடாது, தப்பு'' என்று கூச்சப்பட்டு அடக்கினால், குழந்தையும் "ஏதோ தப்பான விஷயம்போல் இருக்கிறது' என்று பயந்து ஒதுங்கும். இதனால் உங்களது குழந்தையின் எதிர்காலம்தான் பிரச்னையாகும். குழந்தை கேட்கக் கூடாத கேள்வியை கேட்கவில்லை. அது சரியாகத்தான் கேட்கிறது என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ""அதுக்குன்னு வயசு வந்தா புரிஞ்சுக்கும்'' என்று தவிர்ப்பது சரியல்ல. இது வெட்கப்படவோ, தவிர்க்கப்படவோ வேண்டிய விஷயமுமில்லை. இது நம் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை குறித்த விஷயம். இந்த பாலியல் அறிவு எதிர்காலத்தில் பாலியல் ரீதியிலான நோய்களைத் தடுத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும்.

மாணவர்களுக்காக நாங்கள் எங்கள் அமைப்பின் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை நடத்த இருக்கிறோம். அதோடு இந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சிகிச்சை முதற்கொண்டு அனைத்தையும் இலவசமாக அளிக்க இருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com