காமிராவே வாழ்க்கையாய்.....

கையில் காமிரா - கண்களில் ஆர்வம் - காற்று நுழையாத இடத்திலும் உள்ளே புகுந்து தான் எண்ணிய புகைப்படத்தை எடுத்து வரும் திறன் பெற்றவர் -

ஷிப்ரா தாஸ்
பெண் புகைப்படக்கலைஞர்!

கையில் காமிரா - கண்களில் ஆர்வம் - காற்று நுழையாத இடத்திலும் உள்ளே புகுந்து தான் எண்ணிய புகைப்படத்தை எடுத்து வரும் திறன் பெற்றவர் - பெண் புகைப்படக்கலைஞர் ஷிப்ரா தாஸ்.  நாள்தோறும் சவால்களை சந்திக்கும் பணி, ஊடகத்துறை. அதிலும், தலைநகர் தில்லியில் 58 வயதிலும் பாய்ந்து, பாய்ந்து சென்று புகைப்படம் எடுத்து தனது திறமையை உலகுக்கு பறைச்சாற்றி வருகிறார், ஷிப்ரா தாஸ். கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்டவர், "டெலிகிராஃப்', "இந்தியா டுடே' போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய இவர், தற்போது ஃப்ரீலேன்ஸ்

 (சுதந்திரமாக செயல்படுபவர்) பெண் புகைப்படக்கலைஞராகப் பணிபுரிந்து வருகிறார்.  ஷிப்ராதாஸ் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

 ""சிறுவயதிலேயே எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. இதனால் கொல்கத்தாவில் வெளியாகும் சிறு பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுதி வந்தேன். இதன்மூலம் எனக்கு ஊடகத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, அகில இந்திய வானொலியில், நிகழ்ச்சித் தயாரிப்பாளராக என் பணியைத் தொடங்கினேன்.

  அகில இந்திய வானொலியில் பணியாற்றிய பின், கொல்கத்தாவில் வெளியாகும் "ஆனந்த் பஜார்' எனும் பத்திரிகையில் நிருபராக பணியாற்றினேன்.

 அச்சமயத்தில் நான் எழுதும் கட்டுரைகளுக்கு புகைப்படம் தேவைப்பட்டது. என் அலுவலகத்தில் பணியாற்றிய புகைப்படக் கலைஞர்களிடம் கேட்டதற்கு, பெண் நிருபர் என்பதால் என்னை உதாசீனப்படுத்தினர். இது என் மனதில் புதிய வைராக்கியத்தை உண்டாக்கியது. என் கட்டுரைக்கு, நாமே ஏன் புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அதுவரை எனக்கு புகைப்படம் எவ்வாறு எடுப்பது என்றும் தெரியாது.

என் உடன் படித்த நண்பரின் காமிராவை கடன் வாங்கி, ஆர்வத்தால் சிறிது, சிறிதாக புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்டேன்.

 முதல் முறையாக என் காமிராவுடன் மேற்குவங்க மாநில முதல்வராக ஜோதிபாசு பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு சென்றேன். அங்கு ஒரு சிலர் புகைப்படக் கலைஞரைத் தாக்கிய சம்பவம் நடைபெற்றது. அதை என் காமிராவில் பதிவு செய்தேன். இத்தருணத்தை வேறு யாரும் புகைப்படம் எடுக்கவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. அப்புகைப்படத்தை எடுத்த நானோ புதியவள். இது மற்ற புகைப்படக்கலைஞர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மறுநாள் என் புகைப்படம், அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது.

அந்த தருணத்தில் இருந்து நிருபராக இருந்து, "டெலிகிராஃப்' நாளிதழின் புகைப்படக்கலைஞராக பணியாற்ற தொடங்கினேன். இதன்பின் "ஹிந்துஸ்தான் டைம்ஸ்', "இந்தியா டுடே' போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினேன்.  பாபர் மசூதி இடிப்பு சம்பவம், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்களை நேரில் சென்று படம் பிடித்துள்ளேன். இவை என் மன தைரியத்தைப்  பன்மடங்கு அதிகரித்த சம்பவங்கள். இதுபோன்ற சவால் நிறைந்த பணிகளை மேற்கொள்ளவே விரும்புகிறேன்.

 நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், நான் கணவராக நினைப்பது காமிராவை தான். எனவே, காமிராவை மணந்து கொண்டதாக எண்ணியே வாழ்ந்து வருகிறேன்''.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com