வாள் வீச்சு... என் உயிர் மூச்சு!

பவானிதேவி வாள் வீச்சு வீராங்கனை! வட சென்னையைச் சேர்ந்த இவர், விளையாட்டு உலகில் தங்கத்தாரகையாய் மின்னி வருகிறார். தமிழகத்துக்கு தனிப்பெருமையைத் தேடித்தந்த பவானிதேவி முதுநிலை வேளாண்மை நிர்வாகப்
வாள் வீச்சு... என் உயிர் மூச்சு!

பவானிதேவி வாள் வீச்சு வீராங்கனை! வட சென்னையைச் சேர்ந்த இவர், விளையாட்டு உலகில் தங்கத்தாரகையாய் மின்னி வருகிறார். தமிழகத்துக்கு தனிப்பெருமையைத் தேடித்தந்த பவானிதேவி முதுநிலை வேளாண்மை நிர்வாகப் படிப்பில் சேர்ந்திருப்பதுடன் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதும் தம் விருப்பம் என்கிறார்.

வாள் சண்டையைப் பொருத்தமட்டில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவேண்டும் என்பதுதான் இவரது இலக்கு!

வடசென்னையில் வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் அருகில் இருக்கிறது இவரது வீடு. அப்பா ஆனந்த சுந்தர்ராமன், அம்மா ரமணி. அண்ணன்கள் இருவர், இரண்டு அக்காக்கள். சகோதர சகோதரிகளுக்குத் திருமணமாகி விட்டது.

எளிமையான அவரது வீட்டை அவரது விருதுகளும் பதக்கங்களும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. எளிய குடும்பத்தில் பிறந்த பவானிதேவி, இன்று பல நாடுகளுக்கும் பறந்து சென்று வாள் வீசிக்கொண்டிருக்கும் அதிசயம் நிகழ்த்துவதற்கு வித்தூன்றியது அவர் படித்த பள்ளிதான்.

அவர் படித்த பள்ளியில் ஃபென்சிங், குவாஷ்  விளையாட்டுகளில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். இவர், ஃபென்சிங்கைத் தேர்ந்தெடுத்திருந்தார். அதற்குக் காரணம் முதலில் இருந்தே ஃபென்சிங் என்ற இந்த வாள் சண்டை மீது ஒரு தாகம் ஏற்பட்டதுதான். சிறுவயது முதலே நேரம் காலம் பார்க்காமல் பயிற்சி எடுத்துக் கொண்டதால்தான், இன்று இத்தனை சாதனைகளைச் செய்ய முடிந்திருக்கிறது என்கின்றனர் அவரது பெற்றோர். விளையாட்டில் மட்டுமல்லாது படிப்பிலும் அவரது வீச்சும் அபாரமே.

இந்த விளையாட்டில் எலெக்ட்ரிக் வாள், அணியும் உடைகள் என அனைத்துமே கொஞ்சம் விலை அதிகம்தான். செலவுகளைச் சமாளிக்க நல்ல ஸ்பான்சர்களும் தேவைப்படுகிறார்கள். ஸ்பான்சர் மூலமாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று நிறையப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டது இந்த விளையாட்டில் தாம் முன்னேற மிகவும் உறுதுணையாக இருந்ததாகச் சொல்கிறார்.  

2012 இல் காமன்வெல்த் ஜூனியர் வாள் சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றதுதான் மிகவும் சந்தோஷமான விஷயம் என்று சொல்லும் இவர், இதுவரை 150க்கும் மேலான பதக்கங்களைப் பெற்று வெற்றியை குவித்துக் கொண்டிருக்கிறார். வாள் வீச்சில் சுழலும் இந்த மங்கை, இதில் நிறைய நுணுக்கங்களையும் எதிராளியை எப்படிச் சாதுர்யமாகக் கையாள வேண்டும் என்ற தந்திரத்தையும் கற்று வைத்திருப்பதாகச் சொல்கிறார்.

2016 இல் நடக்கும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்க வேண்டும் என்பதுதான் இப்போது இவரது முக்கிய இலக்காக இருக்கிறது.

உலகத் தரவரிசையில் தற்போது 52 வது இடத்தில் இருக்கும் பவானி தேவி, மேலும் முன்னேறி 32வது இடத்திற்கு வரும் பட்சத்தில் நேரடியாகவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிடுவார். ""வாள் சண்டையில் இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளே முன்னணியில் இருப்பதால் அங்குள்ள வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வது எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கும். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது என்ற என்னுடைய கனவும் மிக எளிதாகவே நனவாகிவிடும்'' என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார்.

ஒவ்வோராண்டும் நடைபெறும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய வாள் சண்டை போட்டி கடந்த வருடம் பிலிப்பைன்ஸில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ள பவானி, தற்போது மங்கோலியாவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

2016 இல் ரியோடிஜெனிரோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் வாள் சண்டைப்போட்டி தனிப்பிரிவில் கலந்துகொள்ளும் முதல் இந்தியராகவும் }பெண்ணாகவும் தான் இருப்பதைப் பெருமையோடு சொல்லும் பவானி, அதற்காக அமெரிக்காவிலும் பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். வைரம் பாய்ந்த கரங்களுக்குச் சொந்தக்காரரான வாள் வீச்சு வீராங்கனை பவானிதேவி ஒலிம்பிக்கில் வெற்றிக் கொடி நாட்ட நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com