தமிழ் படிக்கும் சீனத்துப் பெண் நிலானி

நிலானி, 26 வயது சீனத்துப் பெண் சீன வானொலியில் பணிபுரிகிறார். தமிழைக் கற்க வேண்டும் என்று தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்.
தமிழ் படிக்கும் சீனத்துப் பெண் நிலானி

நிலானி, 26 வயது சீனத்துப் பெண் சீன வானொலியில் பணிபுரிகிறார். தமிழைக் கற்க வேண்டும் என்று தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியில் டிப்ளமோ படித்துக் கொண்டிருக்கிறார். இவரது சீனப்பெயர் ஹே லியுஆன். தமிழுக்காக நிலானி ஆகி இருக்கிறார்.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள சீன வானொலி நிலையத்தின் தமிழ் பிரிவில் பணியாற்றி வருகிறார். சீன பல்கலைக் கழகமொன்றில் தமிழ் படித்திருந்தாலும் தமிழை முறையாகக் கற்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.

நிலானி சொல்கிறார்...

தமிழ் மொழியிலுள்ள "ற'கரத்தை உச்சரிப்பது கடினமாக இருக்கிறது. பேச்சுத் தமிழை இன்னும் பழகவில்லை, சாதாரணமாக இங்கு பேசப்படும் பேச்சுத் தமிழைப் புரிந்து கொள்வதும் சிரமமாக இருக்கிறது. எந்த மொழியையும் உண்மையாக விரும்பினால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அதற்கு முழுமையான விருப்பம்தான் தேவை. நான் தமிழை இலக்கியம் என்ற அளவிற்கு எல்லாம் இன்னும் கற்கவில்லை. அதற்கு போதுமான கால அவகாசம் இப்போது இல்லை. திருக்குறளைப் படித்திருக்கிறேன். குறளின் பொருளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுபடி சொல்லிக் கொடுக்கிறார்கள். "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு' (திருக்குறளை அந்த சீனத்துப் பெண் கிள்ளைமொழியோடு உச்சரிக்கிறார்) தமிழ் மக்கள் அன்போடு பழகுகிறார்கள். தேவையான உதவிகளையும் செய்கிறார்கள்.  நல்ல நண்பர்களும் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். இங்கு பெண்கள் சேலை அணிகிறார்கள். இது எனக்குப் பிடித்திருக்கிறது. சேலையில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்.  அதனால் தமிழகப் பெண்கள் என்னை மிகவும் கவர்கிறார்கள். 

இங்கு உணவில் அதிக காரம் இருக்கிறது. நாங்கள் அந்த அளவிற்குக் காரம் சேர்த்துக் கொள்வதில்லை. எனக்கு சாம்பார் வடை, கல்தோசை மிகவும் பிடித்தமானவை.  இப்போது எனக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமான ஒன்று, தமிழ்ப் படங்கள். தமிழ்த் திரைப்படங்கள் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சமீபத்தில் "பாகுபலி' பார்த்தேன். என்னைக் கவர்ந்த படம் அது. இதே போன்று "ஐ' படத்தையும் நான் ரசித்தேன். சீனாவிலும் இப்போது தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

தமிழ் நாட்டில் கோயம்புத்தூர் தவிர வேறெங்கும் சுற்றிப் பார்க்கவில்லை. மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோயிலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை.

இதுதவிர, ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்தேன். காசியில் கங்கை நதி எங்களது மஞ்சள் நதியை நினைவு படுத்துவதுபோல் தண்ணீர் மஞ்சள் நிறமாக இருக்கிறது (சிரிக்கிறார்). காதலின் நினைவுச் சின்னமான தாஜ்மஹாலைப் பார்த்தது மிகவும் இனிமையான தருணம் என்றே சொல்ல வேண்டும். அதன் அழகைக் கண்டு பிரமித்துப் போய் விட்டேன்.

என் படிப்பு முடிந்து சீனா சென்றாலும் மீண்டும் இந்தியாவிற்கு வருவேன்'' என்றார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com