அழகல்ல... அறிவுதான் முக்கியம்!

தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கே. ராமாத்தாள். அவர் பணியில் இருந்த காலத்தில் பல பெண்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைத்திருக்கிறார்.

தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கே. ராமாத்தாள். அவர் பணியில் இருந்த காலத்தில் பல பெண்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைத்திருக்கிறார். இன்று பெண்களின் நிலை எப்படி உள்ளது? வேலைக்குப் போகும் பெண்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில் பெண்களின் நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகளை அடுக்கினோம்:

பெண்களின் முக்கியப் பிரச்னை?

பெண்களைப் பொருத்தவரை இன்றைக்கும் முக்கிய பிரச்னையாக நிற்பது வரதட்சணை கொடுமை. சுமார் 75 விழுக்காடு வரை பெண்கள் இதனால்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக்

காரணம், திருமணம்தான் பெண்ணின் வாழ்க்கையின் இறுதி முடிவு என்று நினைப்பதுதான்.  அதையும் தாண்டி சிந்திக்க வேண்டும். திருமணம் செய்யாமல் எத்தனையோ பெண்கள் வாழவில்லையா?

திருமணம் செய்யாமல் இருக்க விரும்பினாலும் எந்தப் பெற்றோரும் ஒத்துக் கொள்வதில்லை. சமுதாயத்துக்காகத்தான் பயப்படுகிறார்கள். வரதட்சணை கொடுமையை ஒழிப்பதற்கு சாதி மறுப்புத்  திருமணங்கள் ஓரளவுக்கு உதவக் கூடும்.

ஆண்களின் குடிப்பழக்கத்தால் பாதிப்பு?...

பெண்கள் தைரியமாக நடமாட முடிவதில்லை. கால் பவுன், அரை பவுன் நகைக்கெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள். கொலையும் செய்கிறார்கள். குடிகாரர்கள் அதிகமாகிவிட்டதே அதற்குக் காரணம்.

குடிகாரர்களுக்கு குடித்தே தீரணும். அதற்காகக்  கொள்ளையடிக்கிறார்கள்.

குடியினால் பெண்கள் அதிகம்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறையப் பெண் குழந்தைகள் படிக்க முடியாமல் போய்விடுகிறது.  சிலர் தங்கள் கழுத்தில் இருக்கும் தாலியைக் கூட அடமானம் வைத்துக் கணவன் குடிப்பதற்கு கொடுக்கிறார்கள். குறிப்பாக கணவன் என்ன அடித்தாலும் உதைத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதல்ல வாழ்க்கை என்பதைப் பெண்கள் உணர வேண்டும்.

கணவனை இழந்துவிட்டால்?

 மனைவியை இழந்த ஆண் மறுமணம் செய்து கொண்டால் யாரும் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் கணவனை இழந்த பெண்  காலம் முழுக்கத் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும்

என்பது என்ன நியாயம்? நம் நாட்டில் பெண்களை நிறையவே கொடுமைப்படுத்தியிருக்கிறோம். கொடுமைப்படுத்துகிறோம். சாதி, சமயம், சம்பிரதாயங்கள் என்று நிறையச் சொல்வோம். ஆனால், அஞ்சாதே,

பொய் சொல்லாதே, துணிந்து செல் என்று சொல்லிக் கொடுப்பதில்லை.

பாலியல் வன்கொடுமை பற்றி?

பாலியல் வன்கொடுமை இப்போது அதிகமாக இருக்கிறது. பெண்களின் ஆடை அணியும் முறையே பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆண்களின் மனதில் தவறை

வைத்துக் கொண்டு பெண்ணைக் குறை சொல்வது என்ன நியாயம்?

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, அறியாத பெண் குழந்தைகளுக்கு, மற்றவர்கள் எங்கு தொடலாம், எங்கு தொடக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

காதலிக்கும் பெண்கள் ஆண்களுடன் சினிமா, பீச் என்று எங்கு சென்றாலும் ஒரு கட்டத்திற்கு மேல் "நோ' என்று சொல்ல வேண்டும். எனென்றால் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

அழகுதான் வாழ்க்கையா?

பெண்கள் அழகு என்ற வார்த்தையில் அடங்கிப் போகிறார்கள். பெண்கள் அறிவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றதும் குளிர்ந்து போகிறார்கள். தினமும்

கண்ணாடியைப் பார்க்கிறோம். எப்படி இருக்கிறோம் என்று தெரியாதா? நம் சீதோஷ்ண நிலைக்கு நமது நிறம் கறுப்பாகத்தான் இருக்கும். அதுதான் அழகு. அதனால் அறிவே ஆயுதம். அறிவு சார்ந்து செயல்பட்டால் நம்மை அனைத்திலும் நிலை நிறுத்திக் கொள்ளலாம்.

வேலைக்குப் போகும் பெண்கள் பற்றி?

நிறையப் பெண்கள் வேலைக்குப் போனாலும் அவர்கள் சுயமாக இருக்க முடியாத நிலையே இப்போதும்  இருக்கிறது. அவள் தனது சம்பளத்தையும் கணவனிடம்தான் தரவேண்டும் என்ற நிலை இருக்கிறது.  விரும்பிய புடவையைக் கூட கணவனை கேட்டுத்தான் வாங்க வேண்டும் என்ற நிலை. வேலைக்குப் போகும் பெண்கள், வீட்டு வேலையும் பார்க்க வேண்டும். வேலைக்குப் போகிறாளே, உதவி செய்யலாமே என்று கணவனோ மாமியாரோ யாரும் உதவுவதில்லை. அவர்கள் சம்பாதித்தாலும் அவர்களுக்குத் தேவையானதை அவர்களாக வாங்கிக் கொள்ள முடியாத சூழலே இருக்கிறது.

உங்களுடைய பணிக்காலத்தில்?

நான் எனது பணிக்காலத்தில் நிறையப் பிரச்னைகளைத் தீர்த்து வைத்திருக்கிறேன். ஆந்திராவில் இருந்து திருமணமாகி வந்த இளம் தம்பதிகள். கணவன் மனைவியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு

வேலைக்குப் போய்விடுவான். கேஸ் ரெகுலேட்டரையும் அவிழ்த்து வெளியில் வைத்து விடுவான். இதனால் அவளுக்குச் சமைத்துச் சாப்பிடவும் முடியாது. பின்னர் இந்த கொடுமையிலிருந்து எப்படியோ

தப்பித்து மகளிர் ஆணையத்தில் என்னைவந்து பார்த்து விவரங்களைச் சொன்னாள். கணவனிடம் மீண்டும் செல்லவே அவள் விரும்பவில்லை. அவர்களது பெற்றோர்களை அழைத்துப் பேசினோம். பின்னர் முறையாக விவாகரத்தாகி, அதற்குப் பிறகு அவள் நன்கு படித்து மறுமணம் செய்து நல்ல பணியிலும் இருக்கிறாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com