நன்காட்டு நாயகிகள்!

தொல்காப்பியர் "இடக்கரடக்கல்' என்ற இலக்கணக் கோட்பாட்டின்படி சுடுகாட்டை - நன்காடு, இடுகாடு என்றுதான் கூறவேண்டும் என்பார்.
நன்காட்டு நாயகிகள்!

தொல்காப்பியர் "இடக்கரடக்கல்' என்ற இலக்கணக் கோட்பாட்டின்படி சுடுகாட்டை - நன்காடு, இடுகாடு என்றுதான் கூறவேண்டும் என்பார். தாய்-தந்தை இறந்தால்கூட இடுகாடு வரை பெண்கள் செல்லும் வழக்கம் இல்லை; அது சமுதாயக் கட்டுப்பாடாகவும் மரபாகவும் இருக்கிறது. அப்படிப் போவது இன்றுவரை நடைமுறையிலும் இல்லை. அந்த மரபையும் உடைத்தெறிந்து பெண்கள் நினைத்தால் எதையும் சாதித்துக் காட்டமுடியும் என்று புதுமைப் பெண்கள் இருவர் புறப்பட்டுள்ளனர் என்றால்  வியப்பாகத்தானே இருக்கிறது!÷

ஆண்டுக்கு ஆண்டு ஏதாவது ஓர் இடத்தில் பெண்களின் சாதனைப் பட்டியல் வெளிவந்த வண்ணமாகவே உள்ளன. அந்த வகையில், எந்தப் பெண்களும் இதுவரை செய்யத் துணியாத ஒரு தொழிலில் இறங்கியிருக்கிறார்கள் இரு பெண்கள். "பயம் என்றால் என்ன விலை?' என்று கேட்கும் எஸ்தர் சாந்தியும், பிரவீணா சாலமனும் சென்னை அண்ணாநகர், நியூ ஆவடி சாலையில் இருக்கும் வேலங்காடு மாநகராட்சி மயானத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். அங்கு வரும் பிணங்களுக்கு ஈமச்சடங்குகள் செய்து வைக்கின்றனர். இவர்கள் ஏற்கெனவே இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மயானத்தின் மேற்பார்வையாளராக வேலை செய்யும் எஸ்தர் சாந்தி, ""மயானத்தில் வேலை செய்யப் போகிறேன் என்றவுடன் என் வீட்டில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முதலில் எனக்கு மட்டும் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் போகப்போக பயம் போய்விட்டது. அதன் பிறகு பிணங்களை எரிக்கும் இடத்திற்குச் சென்று அங்குள்ள வேலைகளையும் கவனித்தோம். அதன்பிறகு எல்லா வேலைகளையும் நாங்களே கற்றுக்கொண்டோம். என்னதான் வாழும்போது சுகங்களை அனுபவித்து சாதி, பணம் என பாகுபாடு பார்த்திருந்தாலும், இங்கு வந்து சிலமணி நேரங்களில் எல்லோரும் சாம்பலாகி விடுகின்றனர். இதையெல்லாம் பார்த்து, கோபப்படுவதை நிறுத்திக்கொண்டேன். மேலும் இப்பணியை மிக உன்னத மாகவும் நினைக்கிறேன்'' என்கிறார்.

""ஆதரவில்லாத அநாதைப் பிணங்களுக்கு நாங்களே மாலைகள் வாங்கிப் போட்டு, எரிந்து முடியும் வரை அங்கேயே நிற்போம். எங்களால் முடிந்த வரை ஒவ்வொரு மாதமும் இங்கு கொண்டு வரப்படும் இரு அநாதைப் பிணங்களுக்கு எங்கள் சொந்த செலவில் ஈமச் சடங்குகளை நடத்தி வைக்கிறோம்'' என்றார் பிரவீணா சாலமென்.

அடேயப்பா.... இப்படித்தான் பெண்கள் தைரியசாலியாக, மனதளவில் பலசாலியாக, எதையும் தாங்கும் இதயத்தோடும், சகிப்புத்தன்மையோடும் இருக்க வேண்டும் என்று பாரதி கண்ட கனவு இவ்விருவரால் நனவாகிவிட்டது!

""கோயில் சுடுகாடு, கொல்புலித்தோல் நல்லாடை''  என்று உயிர்களை அமைதிபடுத்தும் பொருட்டு சிவபெருமான் நடனமாடிக் கொண்டிருக்கும் இடம் சுடுகாடுதான் என்றும்,  அவனது கோயில் சுடுகாடே' என்றும் உறுதியாகக் கூறுவார் மாணிக்கவாசகர். இராமகிருஷ்ண பரமஹம்சர், சேஷாத்ரி சுவாமிகள், சித்தர்கள் போன்ற எண்ணற்ற ஞானிகள் சுடுகாட்டில்தான் தியானம் மேற்கொள்வார்களாம். காரணம், அங்கேதான் ஈஸ்வரனின் சாந்தித்யம் நிறைந்து இருக்குமாம், தியானமும் கைகூடுமாம்.

காஞ்சி மகாப் பெரியவர், ""உறவு என்று யாருமில்லாத,  ஓர் அநாதைப் பிணத்திற்கு ஈமச்சடங்குகள் நடத்தி வையுங்கள், அநாதைப் பிணங்களுக்கு உதவுங்கள் அதுவே ஆயிரம் அஸ்வமேதயாகம் செய்த பலனைக் கொடுத்துவிடும்'' என்பார்.

கலிகாலத்தில் இவ்விரு பெண்களும் அஸ்வமேதயாகம் செய்து கொண்டே, மனதளவில் தியானமும் பழகுகிறார்கள் என்றுதான் கூறத் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com