வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்!

வயது வித்தியாசமின்றி தாம் அணிந்து கொள்ளும் ஆடைகளில் புதுமையை விரும்பாதவர் யாரும் இல்லை. அதிலும், பெண்கள்  ஒருபடி மேலே, விதவிதமான வித்தியாசமான ஆடைகள் அணிந்து கொள்வதையே பெரிதும் விரும்புவார்கள்.

வயது வித்தியாசமின்றி தாம் அணிந்து கொள்ளும் ஆடைகளில் புதுமையை விரும்பாதவர் யாரும் இல்லை. அதிலும், பெண்கள்  ஒருபடி மேலே, விதவிதமான வித்தியாசமான ஆடைகள் அணிந்து கொள்வதையே பெரிதும் விரும்புவார்கள். திருமணம், வீட்டு விசேஷம் போன்ற வைபவங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.  தங்களுக்குப் பிடித்த ஆடை வடிவமைப்பிற்காக என்ன விலையும் கொடுக்க தயாராக இருப்பார்கள். அந்த வகையில் பெண்களின் பல்ûஸ பிடித்து பர்சை எகிற வைக்கிறார் ப்ரியா சுப்பிரமணியன்.  அடிப்படையில் ஓவியரான இவர் வீட்டில் இருந்தபடியே தற்போது செய்து வருவது டிசைனர் பிளவுஸ் தொழில். கண்ணைக் கவரும் புதுபுது வடிவமைப்புகளே இவருக்கு ப்ளஸ். இவரை சந்தித்தோம்:

""எனக்கு சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைதலில் ஆர்வம் அதனால் முறையாக ஓவியம் வரைய கற்றுக் கொள்ள ஆசை. இந்த ஆசை, திருமணத்திற்குப் பிறகுதான் நிறைவேறியது.  தஞ்சாவூர் ஓவியங்கள், கிளாஸ் ஓவியம் போன்றவற்றை கற்றுக் கொண்டேன். அதன்பிறகு நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்குச்  செல்லும்போது ஓவியங்கள் வரைந்து பரிசளித்து வந்தேன். அது எல்லாருக்கும் பிடித்துப் போக நிறைய பாராட்டுகள்.  தோழிகள் சிலர் கற்றுக் கொடுக்கும்படி கேட்டார்கள். ஆர்வம் தொற்றிக் கொள்ள என் கணவரிடம் கூறினேன். குழந்தைகள் நல மருத்துவராக இருக்கும் அவர் ஆரம்பத்தில், இதெல்லாம் உனக்கு சரியாக வருமா?  வீட்டையும், குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, கிளாஸ் எடுப்பதற்கு உன்னால முடியுமா என்று கேட்டார். ஆனால், எனக்குள் இருந்த ஆசையைப் பார்த்துவிட்டு முயற்சி செய்துபார் என்றார். அதன்பிறகு மூன்றாண்டுகள் தஞ்சாவூர் பெயிண்டிங்ஸ், கிளாஸ் பெயிண்டிங்ஸ் எல்லாம் செய்ய பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்தேன்.

இதற்கிடையில் சேலைகளில் ஆர்.இ. ஒர்க்  (சேலைகளில் கைவேலைகள் செய்வது) செய்வது பிரபலமாகி வந்தது. அந்த டிசைன்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் என் சேலைகளில் ஆர்.இ.ஒர்க் செய்ய எடுத்துச் சென்றேன். அவர்கள் சொன்ன விலையைக் கேட்டதும் மலைத்துவிட்டேன். அவர்களிடம் இவ்வளவு பணத்தை கொடுத்து செய்து கொள்வதைவிட நாமே கற்றுக் கொண்டால் என்ன என்று தோன்றியது. மேலும் நம் விருப்பப்படி போட்டுக் கொள்ளலாமே என்று நினைத்து ஆர்.இ.ஒர்க் கற்றுக் கொண்டேன். அதன்பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக சேலைகளில் டிசைன் செய்து வந்தேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், அவர்களுக்கும் அழகழகாக ஆடைகளில் டிசைன் செய்து கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு அவர்களது தோழிகளும் அதுபோல் செய்து தரும்படி கேட்டனர். அவர்களுக்கும் வீட்டிலிருந்தபடியே செய்து கொடுத்துவந்தேன்.

 இந்நிலையில் டிசைனர் பிளவுஸ்கள் வரத் தொடங்கின. தோழிகள் சிலர் டிசைனர் பிளவுஸ் செய்து தரும்படி கேட்டனர், முயற்சி செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. மேலும், கல்லூரியில் படிக்கும் எனது மகள் நெட்டில் இருந்து  இந்த டிரண்டுக்கு ஏற்றாற்போல் புதுப்புது டிசைன்களை  எடுத்துக் கொடுத்தாள்.  அந்த டிசைன்களை கொண்டு நிறைய புதுப்புது மாடல்களை உருவாக்கினேன். அத்துடன் பிரைடல் பிளவுஸ்களையும் தயார் செய்து கொடுக்க ஆரம்பித்தேன்.  இதில் முக்கியமான ஒன்று டிசைனர் பிளவுஸ்களுக்கு குறைந்தபட்சமாக 800 ரூபாயிலிருந்து செய்து கொடுத்தேன். ஹெவி ஒர்க் கேட்பவர்களுக்கு அதற்கு ஏற்றாற்போல் விலை அதிகமாக, குறைய இருக்கும்.

பொதுவாக சிம்பிள் டிசைன் என்றால் ஒன்று, இரண்டு நாட்களில் முடித்து விடுவேன். அதுவே ஹெவி ஒர்க்காக இருந்தால் ஒரு வாரம்வரை கூட ஆகும். ஏனென்றால் அதிக வேலைப்பாடு உள்ள பிளவுஸ்களில் அதிக அளவில் நுணுக்கமான வேலைகள் இருக்கும். மேலும் ஃபினிஷிங் சரியாக இருந்தால்தான் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.

பொதுவாக  டிசைன் பிளவுஸ்கள் செய்யும்போது நான் தைத்த பிளவுஸ்களில் செய்வதில்லை. எனென்றால் "காட்' போட்டு அதில் பிளவுஸ் துணிகளை அசையாதபடி மாட்டிவிட்டு பிறகுதான் டிசைன்களை இறக்குகிறேன். தைக்காத மெட்டிரியலில்தான் ஃபினிஷிங் நன்றாக இருக்கும்.   குறைந்த விலையில் நல்ல அழகான டிசைன்கள் செய்து கொடுப்பதால் செவிவழிச் செய்தியாகக் கேள்விப்பட்டு நிறையபேர் தற்போது தேடி வந்து டிசைன் செய்து கொண்டு போகிறார்கள். அதனால்  தற்போது உதவிக்கு 3 பேரை வைத்திருக்கிறேன். மேலும் டிசைனர் பிளவுஸ் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை ஓய்வு நேரங்களை வீணாடிக்காமல் பெண்கள் இதுபோன்ற கைத்தொழில்களில் ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டு வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com