உயர் பதவி பெண்களுக்கு!

இன்போஸிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது.  அவருடைய அலுவலக அறையில் இரண்டு புகைப்படங்கள் மாட்டி வைத்திருக்கிறார். 

இன்போஸிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது.  அவருடைய அலுவலக அறையில் இரண்டு புகைப்படங்கள் மாட்டி வைத்திருக்கிறார்.  தினமும் அலுவலக அறைக்குள் நுழைந்ததும் பணிகளைத் துவக்குவதற்கு முன்னால் அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பார்.  ஒரு புகைப்படம் நீல சூட் அணிந்த கண்ணியமான மனிதர்.  மற்றது கறுப்பு-வெள்ளை புகைப்படம்.  வெள்ளைத் தாடியோடு கண்களில் கனிவு தெரிய இருப்பவர்.  பலரும் இவர்கள் இருவரும் சுதாவின் உறவினரா? என்று கேட்பதுண்டு.  தாடியோடு இருப்பவர் மதத் தலைவரா? என்றுகூடக் கேட்டதுண்டு.  அவர்களது புகைப் படங்களை ஏன் தினசரி பணி துவங்கு முன் மரியாதையோடு  சுதா பார்க்க வேண்டும்?  இவர்கள் இருவரும் என் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை உண்டாக்கினார்கள்.  நீல உடையில் இருப்பவர் பாரத ரத்னா ஜே.ஆர்.டி. டாடா, முதியவர் சர் ஜேம்ஷட்ஜி டாடா.  சரி, அவர்கள் படங்களை அறையில் மாட்டி வைப்பானேன்.  நன்றியின் அடையாளமாக என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று பதில் சொல்லிவிடுவார் சுதா மூர்த்தி. இதை அவரே தம் "உள்ளங்கையில் உலகம்' என்ற நூலில்  "எங்கள் ஜே.ஆர்.டி.' என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

இன்போஸிஸ் நிறுவனத்தைத் தம் கணவர் நாராயண மூர்த்தியுடன் இணைந்துதான் தொடங்கினார்.   பெங்களூர் "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்ஸில்' கம்ப்யூட்டர் இஞ்சினீயரிங் கல்வி படித்துவிட்டு, அவர் டாடா நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த போது, டாடா நிறுவனத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்று பதில் அளித்து, அவரது விண்ணப்பத்தை டாடா நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது.

சுதா மூர்த்தி சும்மா இருந்துவிடவில்லை.  ஒரு தபால் கார்டில், நானும் இஞ்சினீயரிங் கல்வியை முறையாகக் கற்றவள்.  ஆண்களுக்கு இணையாக எங்களாலும் பணி செய்ய முடியும். அப்படி இருக்க, என் விண்ணப்பத்தை நீங்கள் எப்படி ஏற்க மறுக்கலாம் என்று டாடா நிறுவனத்தின்   தலைமை நிர்வாகியாக இருந்த ஜே.ஆர்.டி. டாடா அவர்களுக்கு எழுதி, அதை அனுப்பி வைத்தார். 

ஜே.ஆர்.டி. டாடா அவருடைய கார்டைப் படித்துவிட்டு, அவரைப் பேட்டிக்கு வருமாறு அழைத்துக் கடிதம் அனுப்பினார்.  சுதா மூர்த்தி பேட்டியில் வெற்றி பெற்று, மும்பை டாடா நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார்.

ஒரு நாள் பணி முடித்துவிட்டு, அலுவலகத்தின் கட்டட வாயிலில் தன் கணவருக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சுதா மூர்த்தி.  அப்போது ஜே.ஆர்.டி. டாடாவும் அங்கே வந்து சேர்ந்துவிடுகிறார்.   சுதா மூர்த்திக்கு ஒரே தர்ம சங்கடமாகப் போய்விட்டது.  தாம் தான் அவருக்குக் கடிதம் எழுதிய பெண்மணி என்று தெரிந்துவிட்டால் என்ன பதில் சொல்வது என்று கொஞ்சம் நடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்.  அதற்குள் நாராயணமூர்த்தி  அங்கே வந்து சேர்ந்துவிட்டார், மனைவியை அழைத்துப் போக.

ஜே.ஆர்.டி. டாடா அவரிடம் சென்று, உங்கள் மனைவியை இப்படியா காத்திருக்க வைப்பது  வேளா வேளைக்கு வந்து கூட்டிக்கொண்டு போக வேண்டாமா என்று சிரித்தபடியே கண்டிப்புடன் கேட்டார்.

இதை சுதா மூர்த்தியே தம் கட்டுரை ஒன்றில் விவரமாகக் குறிப்பிட்டிருக்கிறார். 

இப்போது இதைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம்.  அவசியம் இருக்கிறது.

இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமமான டாடா குழுமத்தில், தங்கள் பல்வேறு நிறுவனங்களில் மிகத் திறமை வாய்ந்த 300 பெண் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து, 215 உயர் அதிகாரிகளைக் கொண்டு அவர்கள் திறனை மேம்படுத்த "மென்டரிங்'  திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பெண் அதிகாரி, தான் பணி செய்யும் நிறுவனத்திலிருந்து மட்டுமே தன் மென்டார் அதிகாரியின் கீழ் பணியாற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை.  இது நிர்வாக இயலில் புதிய உத்தி. டாடா குழுமத்தில் இப்போது பணி புரிகிற பெண்கள் சுமார் 1.5 லட்சம் பேரில் மிகச் சிலரே மிக உயர் பதவியில் இருக்கிறார்கள்.  நூற்றுச் சொச்சம் டாடா நிறுவனங்களில் எந்தப் பெண்மணியும் மிக மிக உயர் பதவி வகிக்கவில்லை. 

சென்ற 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைமைப் பொறுப்பு ஏற்ற சைரஸ் மிஸ்தி, இதற்குப் பிள்ளையார் சுழி போட்டார். இந்தப் பத்தாண்டு முடிவதற்குள் ஆயிரம் பெண் உயர் அதிகாரிகளாவது தம் குழுமத்தில் இருக்க வேண்டும் என்ற தம் நோக்கத்தை வெளியிட்டிருக்கிறார்.  அது மட்டுமல்ல, இப்போதுள்ள பெண் ஊழியர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர வேண்டும் என்றும் விரும்புகிறார்.

இப்போது மென்டார்களைத் தேர்வு செய்வதும், அவர்களின் கீழ் பணியாற்ற பெண் நிர்வாக அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதுமாக பணி தொடங்கியிருக்கிறார்கள்.  அனுபவம் மிக்க ஒரு வழிகாட்டி இருந்துவிட்டால், வளர்ச்சி நிச்சயம் என்பது இவரது கருத்து.  கீழ் நிலையில் பெண் ஊழியர்களை நியமிப்பது வழக்கமாக இருந்தாலும், மேல் மட்டத்தில் பதவி வகிக்கத் தேவையான தலைமைத் திறன் வாய்ந்த பெண்மணிகளைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கிறதாம்.  பல காரணங்களுக்காக, பதவி உயர்வு பெறும் நிலையில் இருக்கும் பெண்கள் திடீரென்று தாங்களாகவே பதவியைவிட்டு விலகிவிடுகிறார்கள் என்பதே அவர்கள் கூறும் காரணம்.  இந்தப் புதிய மென்டரிங் திட்டத்தின் மூலம் அதைத் தடுக்க முடியும் என்பதோடு, பெண் அதிகாரிகள் பெருகுவதற்கும் இது உதவும் என்கிறார்கள்.  இந்தியாவில் மட்டுமல்ல.  உலகம் முழுவதுமுள்ள டாடா நிறுவனங்களிலும் இது செயல்படுத்தப்படுமாம்.

இப்போது சொல்லுங்கள், சுதா மூர்த்தியின் தபால் கார்டு சாதாரண கார்டுதானா?  டாடா குழுமத்தில் எத்தனை பெண் நிர்வாகிகளை உருவாக்கி உயரே அமரச் செய்ய அது ஒரு கருவியாக

இருந்திருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com