பரதக் கலையில் அறிவியல்! சொல்கிறார் : டிம்பிள் கௌர்

கலையையும், அறிவியலையும் பரத நாட்டியம் மூலம் ஒன்றிணைக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார் பஞ்சாபி கலைஞர் டிம்பிள் கெüர் (எ) சிவகாமி (41). பூர்விகம் பஞ்சாப் என்ற போதிலும் தில்லியில் குடியேறி தலைநகரவாசியாகவும் உளவியல் நிபுணராகவும் பணியாற்றி வருகிறார்.

கலையையும், அறிவியலையும் பரத நாட்டியம் மூலம் ஒன்றிணைக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார் பஞ்சாபி கலைஞர் டிம்பிள் கெüர் (எ) சிவகாமி (41). பூர்விகம் பஞ்சாப் என்ற போதிலும் தில்லியில் குடியேறி தலைநகரவாசியாகவும் உளவியல் நிபுணராகவும் பணியாற்றி வருகிறார்.

பரதக் கலை, சமூகத்தில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயன் தரும் எனக் கூறும் டிம்பிள் கௌர், மேலும் பகிர்ந்து கொண்டவை:

பஞ்சாபியரான உங்களுக்கு "பரதக் கலை' மீது ஆர்வம் வந்தது எப்படி?

 தில்லியில் எங்கள் குடும்பம் குடியேறிய பிறகு சிறு வயதில் "மீரா' திரைப்படம் பார்த்தேன். அதில் இடம்பெற்ற பரத நாட்டியத்தைப் பார்த்து எனக்கும் பரதம் பயில வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் "தூர்தர்ஷன்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளைக் காண்பேன். எனது ஆர்வத்தை தாய் ஊக்குவித்தார். அவர், எனது 14-ஆவது வயதில் குருநாதர் மகேஷ் ஜார்ஜ், சோனல் மான்சிங் ஆகியோரிடம் முறைப்படி சேர்த்து பரதம் கற்க வைத்தார். "விலாசினி நாட்டியத்தால் ஈர்க்கப்பட்ட நான், நடனக் கலைஞரும் குருநாதருமான ஸ்வப்ன சுந்தரியிடம் அவற்றைக் கற்றுக் கொண்டேன்.

 இதையடுத்து, "நட்டுவாங்க'த்தை குரு வி.கிருஷ்ணமூர்த்தியிடம் பயின்றேன். தற்போது "நாட்டிய சாஸ்திர'த்தை மூத்த நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்திடம் கற்று வருகிறேன்.

 "சிவகாமி' புனைப்பெயர் வரக் காரணம் யார்?

 என் குருநாதர் வி.கிருஷ்ணமூர்த்தியிடம் நடனப் பயிற்சி மேற்கொண்ட போது, என் முகபாவங்கள், நடன அசைவுகளைக் கண்ட அவர், "சிவகாமி' (பார்வதி தேவி) அம்சங்கள் போல் இருப்பதாகக் கூறி, அவ்வாறே அழைக்கத் தொடங்கி விட்டார். அதுவே எனது புனைப்பெயர் ஆகிவிட்டது.

 மருத்துவத் துறையில் எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

 நாட்டியம் பயின்று வந்தாலும், மறுபுறம் அறிவியல் மீதும் எனக்கு கூடுதல் ஆர்வம்  இருந்தது. இதன் காரணமாக கல்லூரியில் நான் உளவியல் மருத்துவம் பயின்றேன். அப்போது கை, கால் செயலற்ற நிலையில் உள்ளவர்களுக்கு நடனப் பயிற்சி அளித்தால் அக்குறைகளை குணப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, "டான்ஸ் மூவ்மென்ட் தெரபி'யை (நடன மருத்துவப் பயிற்சி) இந்திய நடனங்களில் பயன்படுத்தப்படும் அசைவுகளை கொண்டு ஆய்வு செய்தேன்.

 முதற்கட்டமாக தேசிய பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து 10 முதல் 17 வயதுக்கு உள்பட்ட சுமார் 40 பார்வையற்ற மாணவர்களுக்கு சிறு பயிற்சிகள் அளித்து ஆய்வு செய்தேன். இதில் அந்த மாணவர்களின் செயல்பாடுகளில் மட்டுமின்றி மன, உளவியல் ரீதியிலும் நல்ல முன்னேற்றம் அடைந்ததைக் கண்டோம்.  இதில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன். இந்த நடன மருத்துவப் பயிற்சியை, பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு சென்று பயிலரங்குகள் நடத்தியும் பயிற்சி அளித்தும் வருகிறேன். வருங்காலத்தில் நடனத்தையும், அறிவியல் படிப்புகளுடன் இணைக்க வழிவகை செய்ய வேண்டும்.

 உத்வேகம் அளிப்பவர் யார்?

 பரதநாட்டியக் கலைஞரும் திரைப்பட நடிகையுமான சுதா சந்திரன்தான் எனக்கு ஒவ்வொரு முறையும் உத்வேகம் அளித்து வருகிறார்.

 "தமிழ்' மொழி மீது ஆர்வம் உள்ளதா?

 தமிழ்நாடும், தமிழ் மொழியும் என்னை வெகுவாக ஈர்த்து வருகிறது. குறிப்பாக இலக்கியத்தில் "பாரதியார் கவிதைகள்'. தேசப்பக்தி பாடல்களும், பெண்களுக்கு சம உரிமை அளிப்பது போன்ற கருத்துகள் நிறைந்த அவரது வரிகள் எனக்கு தமிழ் மொழி மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது. இலக்கியங்களுக்காகவே "தமிழ்' மொழியை கற்க விரும்புகிறேன்.

 குடும்பத்தைப் பற்றி?

 என் கணவர் குர்முக் சிங். அனைத்து வகையிலும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். என் மகள், தில்லியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயோ டெக்னாலஜியும், மகன் 12-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

அடுத்த தலைமுறைக்கு?

 இளம் தலைமுறையினர் நடனத்தை  பொழுதுபோக்காக கற்றுக் கொள்ளாமல், வாழ்வின் லட்சியமாக கருதி கற்க முற்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com