சாதனை படைக்கும் சாரதா ஆசிரமம்!

நம்மைச் சுற்றிலும் நிறைய ஆன்மிக மையங்கள், ஆசிரமங்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒருவித நோக்கம் மற்றும் செயல்பாடுகள். ஆனால்,  விழுப்புரம் மாவட்டம்,
சாதனை படைக்கும் சாரதா ஆசிரமம்!

நம்மைச் சுற்றிலும் நிறைய ஆன்மிக மையங்கள், ஆசிரமங்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒருவித நோக்கம் மற்றும் செயல்பாடுகள். ஆனால்,  விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இயங்கி வரும் "சாரதா ஆசிரமம்' ஒரு மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது. சுவாமி விவேகானந்தர் நமது நாட்டில் ஏழ்மையும், அறியாமையும் சூழ்ந்த மக்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார்.  அவர்களுக்கு செய்யும் சேவையே மிகச் சிறந்த ஆன்மிகப் பணி என்று சொல்லியிருக்கிறார். அவரது கருத்தைப்  பூரணமாக உள்வாங்கிக் கொண்டு இயங்கி வருகிறது சாரதா ஆசிரமம்.  

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுபத்தைந்தே ரூபாயுடன் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம் ஆலவிருட்சமாக இன்று பரந்து விரிந்திருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் வெண் உடை தரித்த இளம் பெண் துறவிகளும், காவியுடை அணிந்த மூத்த துறவிகளும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே படித்த பட்டதாரிகள். இங்கே எத்தனை துறைகள் இருக்கின்றனவோ அவை ஒவ்வொன்றிலும் சுழற்சி முறையில் இளம் சந்நியாசிகள் சேவையாற்றுகிறார்கள். அப்போதுதான் பயிற்சி முழுமை பெறுகிறது. ஆசிரமச் செயல்பாடுகளின் முழு பரிமாணமும் அவர்களுக்குப் பரிச்சயமாகும் என்பதால் இந்த ஏற்பாடு.

அப்படி எந்தெந்தத் துறைகள் இங்கே இயங்குகின்றன என்று சுற்றிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. சேவாலயாவில் சுமார் 150 ஆதரவற்ற பெண் குழந்தைகள் அடைக்கலமாக வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் முகத்திலும் கோடி சூரியப் பிரகாசம் ஆரோக்கியமான வாழ்வுச் சூழல் துறவிகள் நடத்துவதால் கண்டிப்பும், கறாருமாக இருக்குமென்று நினைத்தால் ஏமாந்து போவோம். ஆரோக்கியமான வேடிக்கைக்கும், கேளிக்கைக்கும் இங்கே பஞ்சமேயில்லை. பிறந்ததிலிருந்து நிராகரிப்புக்கு ஆளான சில சிறுமிகளின் முகத்தில் ஆழமாகப் படிந்துவிட்ட இறுக்க ரேகைகளை அழித்தொழித்து இன்று புதிதாய்ப் பிறந்தவர்களைப் போல் குதூகலிக்க வைத்திருக்கும் துறவியரின் சேவைக்கு முன்பாக நம்முடைய இருத்தல் தூசுபோல் தோன்றியது.

முதியோர் இல்லமும், முதுமையைக் கொண்டாடும் இடமாக பளிச்சென்று துலங்குகிறது. விரக்தியின் சாயல் படியாத, புலம்பல் குரல் ஒலிக்காத ஒரு மாறுபட்ட முதியோர் இல்லம் அவர்களுக்கும் தினசரி கடமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறுமியர்கள் அவர்களுக்குச் சேவையாற்றுவதும், முதியோர்கள் சிறுமியர்களுடன் அன்பு பகிர்ந்து கொள்வதும் சிறந்த ஒரு ஏற்பாடு.

தர்ம மருத்துவமனை ஊருக்கே சேவகம் புரிகிறது. சத்துமாவு, மருந்துகள் என்று இலவசமாக விநியோகிக்கிறார்கள். இஸ்லாமிய சமூகத்தினர் கணிசமாக வாழும் ஊர் என்பதால் பர்தா அணிந்த பெண்கள் பலரை சிகிச்சைப் பிரிவில் பார்க்க முடிந்தது.

உளுந்தூர்பேட்டை தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் இல்லாத ஓர் ஊர். மழையும் குறைவு. மக்கள் உழைப்பையே மறந்து கொண்டிருக்கும் நிலைதான் இங்கும்.  மதுவின் கொடூர ஆதிக்கம் வேறு. ஆனாலும் சோர்ந்து போகவில்லை இந்தப் பெண் துறவிகள். பல கிராமங்களில் தூர்ந்துப் போன ஏரிகளை தங்களது சேவையாலும், கிராம மக்களின் ஒத்துழைப்பாலும் தூர்வாரி இன்று நீர் நிறைந்த ஏரிகளாக மாற்றியிருக்கின்றனர்.

மதுவின் தீமைகளை விளக்கும் பாடல் ஒன்றை மெட்டமைத்து வீடுகளில் ஒலிக்கச் செய்கிறார்கள். கவுன்சிலிங் செய்தும் சிலரை மீட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஓரிரு நாட்களில் ஏற்பட்ட மாயமில்லை. ஒரு தொடர் முயற்சியின், தவத்தின், இறுதியில் கிடைக்கும் அரிய வெற்றி.

நம் மண்ணுக்கே உரிய மரபு விதைகளை மீட்டெடுக்கும் வேலையும் நடக்கிறது. அரிய வகை நெல் வகைகளைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலுப்பை சம்பா, மாப்பிள்ளை சம்பா என்று நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய வகை நெல்மணிகளை பார்க்க முடிகிறது. இவற்றின் பயனை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லி விதை நெல்லும் விநியோகிக்கிறார்கள். சத்தமில்லாமல் ஒரு விவசாயப் புரட்சி  அதுவும் ஒரு வறண்ட பூமியில்.

ஆசிரமத்தில் ஹைலைட்டாக எல்லோரும் குறிப்பிடுவது நவராத்திரி விழா.  இவர்கள் வைக்கும் கொலுவைச் சுற்றிப் பார்ப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகிறது.  ஆறு மாதத்திற்கு முன்பாகவே கொலு தயாரிப்புக்கென்று ஒரு குழு நியமிக்கப்படும். குழுவினர் ஒரு புராணக் கதையை தேர்வு செய்வார்கள். அதில் காலத்திற்கு ஏற்ற சிந்தனை இருக்க வேண்டும். இன்றைய நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். பிறகு அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யப்படும். பொம்மைக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்குக் கதையை விளக்குவார்கள். எந்தெந்த பொம்மை எந்தெந்த முகபாவத்திலிருக்க வேண்டும் என்றும் விளக்குவார்கள்.  கொலுவை விவரித்துச் சொல்லுவதற்கு மாணவர்களை தயார் செய்வது அடுத்த கட்டம். இவ்வருடம் கொலுவைப் பார்ப்பதற்கு  வந்த கிராமவாசிகள் சுமார் 30,000 பேருக்கு மேல்.  அத்தனை பேருக்கும் உணவளித்து உபசரிக்கிறார்கள்.

மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றும் எவருக்குமே அவ்வளவு சுலபமாக அங்கீகாரம் கிடைப்பதில்லை. சாரதா இல்லத் துறவியரும் பல சவால்களைச் சந்தித்திருக்கிறார்கள். கிராம மக்கள் எப்படி இருக்கிறார்களோ, அதனைக் குற்றம் குறை காணாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தம் அன்பால் அவர்களை நனைத்திருக்கிறார்கள். நட்புணர்வுடன் அணுகியிருக்கிறார்கள்.  இதற்கெல்லாம் மிகப் பெரிய சகிப்புத்தன்மையும், பக்குவமும் வேண்டும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களின் வாழ்க்கையில் ஊடுருவி நிற்பதுதான் இந்த ஆசிரமத்தின் வெற்றி ரகசியமாக இருக்க வேண்டும். இந்தச் சாதனையின்  மையப்புள்ளியாக இருப்பவர் ஆசிரமத்தின் தலைவரான யதீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியாம்பா என்ற மூத்தத் துறவி. ஆனாலும் இது ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆற்றும் சேவை, இங்கே எல்லாவற்றையும் அன்னை சாரதாதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரே குரலில் சொல்லி தனிப்பட்ட அடையாளத்தை தவிர்க்கிறார்கள் துறவிகள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com