சாதனைகள் நிகழ்த்திய சரித்திரப் பெண்டிர் - தாயம்மாள் அறவாணன்

பெண்களுக்குக் கல்வியே வேண்டாம் என்று எண்ணியிருந்த காலம் ஒன்று இருந்தது. "பெண்ணறிவு என்பது பேதைமைத்தே' என்ற தொடரும் தமிழில் வழங்கியிருந்தது. இதனால்

பெண்களுக்குக் கல்வியே வேண்டாம் என்று எண்ணியிருந்த காலம் ஒன்று இருந்தது. "பெண்ணறிவு என்பது பேதைமைத்தே' என்ற தொடரும் தமிழில் வழங்கியிருந்தது. இதனால் "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு' என்ற பெண்மொழியும் வழங்கியது. ஒரு காலத்தில் பெண்களைப் பள்ளியில் சேர்க்காதிருந்தனர். முதன்முதலில் பெண்களுக்கு எனத் தனிப் பள்ளி, புதுச்சேரியில் தோற்றுவித்தபோது பெரும் எதிர்ப்பு இருந்தது.  தமிழ்நாட்டில் தற்போது வந்த 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றோருள் பெண்கள் முன்னிடம் வகிப்பது வியப்பாக இருக்கிறது.

தமிழ், வங்காளம் நாட்டைப் பொறுத்த வரை நெடுங்காலமாக மாபெரும் சரித்திரச் சாதனையாக ஜெ. ஜெயலலிதாவும், மம்தா பானர்ஜியும் முதலமைச்சராக இருந்து வருகிறார்கள். பெண்களின் காலம் என்று சொல்லும் அளவுக்குப் பெண்கள் முன்னேறி வருகின்றனர்.

பெண்கள் முன்னிலை வகிப்பதற்கு உரிய காரணங்களாகக் கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.

பெண்களுக்குக் கல்வியில் முழுக் கவனம்.

விளையாட்டு, வெளியே சுற்றுதல், பொழுதுபோக்கு ஆகியன பெண் குழந்தைகளுக்கு மிக மிகக் குறைவு.

பொதுவாகத் தமிழ்நாட்டில் பெண் கல்விக் கூடங்களில் ஆடவர் கல்விக் கூடங்களைப் போல, போராட்டம், வேலை நிறுத்தம் போன்றவை நிகழ்வது இல்லை.

ஆண்கள் அளவுக்கு மனச்சிதைவு பிறழ்வு பெண்களுக்கு இருப்பதில்லை.

பெற்றோர், அதிகாரி, ஆசிரியர் ஆகியோர்க்குப் பயந்து பயந்து பெண்கள் நடப்பார்கள்.

திரையரங்கு, நாடக அரங்கு, கூட்ட அரங்கு போன்றவற்றில் பெண்கள் கலந்து கொண்டு தம் நேரத்தை வீணாக்குவதில்லை.

ஆண்களின் நேரத்தை வீணாக்கும் கிரிக்கெட் முதலான விளையாட்டுகளைப் பெண்கள் விளையாடுவதில்லை.

பெண் குழந்தைகளை இரவு நேரங்களில் வெளியில் செல்ல பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. அந்த நேரம் பெண்களுக்கு மிச்சமாகும்.

ஓட்டல் போன்ற உணவு உண்ணும் கடைகளிலும் பெண்களின் வருகை மிகக் குறைவு.

அப்பா அம்மா பேச்சை ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகள் கேட்பர்.

வஞ்சினம் எடுத்தல், மன உறுதிப்பாடு இவை பெண்களுக்கு அடித்தளமாக இருக்கின்றன.

பெற்றோர் அச்சமும் சமுதாய அச்சமும் இருப்பதால் பெண்கள் பொதுவாக ஒழுக்கக் கேடாக இருப்பதில்லை.

அப்பா, அம்மாவிடம் பெண் குழந்தைகள் காட்டும் பாசம் மிகுதி.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒளவையார் உள்ளிட்ட 45 பெண் புலவர்கள் கவிதை பாடினர். காரைக்கால் அம்மையாரும் ஆண்டாளும் ஆன்மீகப் பாதையில் தாமும் சென்று உயர்ந்தனர். காக்கை பாடினியார் என்பவர் இலக்கண நூலாம் காக்கைபாடினியத்தை எழுதியவர். அரசனை அறநெறியில் ஆள ஆணையிட்டவள் ஒரு பெண். இன்று பெண்கள் வளர்ந்து உயர்ந்து சாதனை செய்து வருகிறார்கள். நாட்டு விடுதலையில் நீதிமன்றத்தில் , அரசியலில் சமூகத் தொண்டில்,  ஆட்சியில், கல்வியில் விளையாட்டுத் துறையில், இசை முதலாய கலைத்துறைகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங்காப்பியங்கள் பெண்களை மையப்படுத்தியே எழுதப்பெற்றுள்ளன.

தனக்குத் தீங்கு செய்த நாடாளும் இராணியின் மனம் மாற்றி அறிவுரை வழங்கி, சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கி நாட்டு மக்களின் பசியையும் வறுமையையும் போக்கி , ஞானம் மொழிந்து தன்னை மறந்து பொதுத் தொண்டாக மாற்றியவர் மணிமேகலை.

சமயப் பிடிப்பை ஏற்படுத்த திலகவதியாரும், மங்கையர்க்கரசியாரும் அரும்பாடுபட்டனர். முன்னவர் தன் உடன் பிறந்தானுக்காக, பின்னவர் தன் கணவனுக்காகத் தம்மைத் தியாகம்செய்தார்கள்.

இராசராச சோழனுக்கு எல்லா வகையிலும் அறிவுறுத்தியவர் அக்கையார் குந்தவை நாச்சியார்.

நீதி வழுவாது அரசாட்சி செய்தவர் மதுரை ராணி மங்கம்மாள்.

வெள்ளையரை வீரத்தோடு விரட்டிய வீரமகள், வரலாற்றுமகள் வேலுநாச்சியார்.

காந்தி உடலைத் தன்னுடலால் மறைத்துத் தன் மீது குண்டு ஏந்தி, காந்தியைக் காத்த வீர மங்கை வள்ளியம்மை.

விடுதலைப் போரில் கவிக்குயில் ஆனவர் சரோஜினி தேவியார்.

தேவதாசி  முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர். பெண்ணுக்குச் சம வாய்ப்பு அன்றே கோரியவர் முத்துலட்சுமி அம்மையார்.

பெண்ணுரிமைப் போரின் தளபதியாக அமைந்தவர் மணியம்மையார்.

இன்னிசையால் இசை மழை பொழிந்தவர் நாட்டின் உயரிய விருதுகளையெல்லாம் பெற்றவர் எம்.எஸ். சுப்புலட்சுமி.

பின்னும் கான மழை தந்த காரிகைகள், டி.கே. பட்டம்மாள்,  எம்.எல். வசந்தகுமாரி, கே.பி. சுந்தராம்பாள், பி. சுசீலா, எஸ். ஜானகி.

நடனம் பெண்களுக்கே உரிய கலை. அரசனால் தலைக்கோல் என்ற பட்டமும் பெற்றவர் மாதவி. நடனக்கலைஞர்கள்  வரிசையில்  அடையாறு கலாசேத்திரத்து ருக்மணி, பாலசரசுவதி, கமலா, பத்மினி, வைஜயந்திமாலா, சுதாராணி ரகுபதி, பத்மா சுப்பிரமணியம் முதலானோர்.

ஆண்களையே அசர வைக்கும் தவில். வாசித்துச் சாதனை செய்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சாந்தகுமாரி.

கிரண்பேடி ஐ.பி.எஸ். சிறையில் எவ்வளவோ புதுமைகள் புரிந்தார்.இன்று புதுவை ஆளுநர் ஆகச் செயல்படுகிறார்.

மகளிரால் நீதிபதி ஆகிவிடமுடியும்,  நேர்மையுடன் நீதி வழங்கிட முடியும் என்று பெருமை சேர்த்தவர் இந்தியாவின் முதல் நீதிபதி அன்னா சாண்டி. பெண்களால் மாநிலத்தின் ஆளுநராக உயர்ந்திட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் பாத்திமா பீவி,  கேரள

ஆளுநராக  ஜோதி வெங்கடாச்சலம்.

முன்பொரு காலத்தில் பொறியியலில், மருத்துவத்தில் வேளாண் கல்வியில் பெண்கள் பயிலுவதில்லை. வேளாண் கல்வியில் பெண் மாணவியர் இன்று பயிலுகின்றனர்.

நாவலாசிரியராக எத்தனையோ பெண்கள். கோதை நாயகி அம்மையார் முதல், இலட்சுமி, இராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, அனுராதா ரமணன், தமயந்தி, வாசந்தி, சிவகாமி என்று பட்டாளம் நீளுகிறது.

கடலில் கப்பல் அரிப்பைத் தடுக்க ஒருவகை அமிலத்தைக் கண்டுபிடித்தவர் தூத்துக்குடி புனித மரியன்னைக் கல்லூரி முதல்வர் சகோதரி ஏவ்லின் மேரி.

விண்வெளிப் பயணத்துக்கும் நாங்கள் தயார் என்று உறுதி படைத்து விண்ணுக்குச் சென்று சந்திர மண்டலத்து வானியல் கண்டு தெளிந்தவர் கல்பனா சாவ்லா.

விளையாட்டிலும் பெருமை சேர்த்த வீர மங்கையர்கள், பி.டி. உஷா, ஷைனி வில்சன், பிலோமினா, ரோசாகுட்டி, ஜோதிர்மாய் சக்தர்.

கணக்கியல் அறிவும் உடையவர் மகளிர். சகுந்தலா தேவி என்பவர் கணக்குத் திறமை உடையவர். மனதால் கணக்குப் போட்டு கணினியைப் போல் விடை சொல்லும் ஆற்றல் உடையவர்.

பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே பெண்மணி கர்ணம் மல்லேசுவரி.

மேற்கண்ட பெண்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். முயன்று வரலாற்றைப் படித்தவர்கள், வரலாற்றைப் படைத்தார்கள். வரலாறாகவே வாழ்ந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com