இரத்தப் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை! சொல்கிறார் : ப்ரியா ராமச்சந்திரன்

இப்போது செய்தியில் அதிகமாக அடிபடுகிற மருத்துவர் ஒருவர் உண்டு என்றால், அவர் டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன்தான்.
இரத்தப் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை! சொல்கிறார் : ப்ரியா ராமச்சந்திரன்

இப்போது செய்தியில் அதிகமாக அடிபடுகிற மருத்துவர் ஒருவர் உண்டு என்றால், அவர் டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன்தான். சென்னையில் குளோபல் மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை நிபுணராகப் பணியாற்றியவர் இவர்.  தற்போது, சென்னை காஞ்சி காமகோடி சைல்ட் ட்ரஸ்ட் மருத்துவ மனையில் பணி புரிந்து வரும் இவர், இரத்தப் புற்று நோய் எனப்படும் லுகீமியா நோய்க்கு ஆளாகும் குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளித்துக் காப்பாற்றி வருகிறார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் டாக்டராக இருப்பது அபூர்வம்தான்.  டாக்டர் ப்ரியா ராமச்சந்திரனின் தாயார் புகழ் பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன்.  (மேடைகளில் பக்தி சங்கீதமும் பாடுவார்)  தந்தை டாக்டர் எம்.எஸ்.ராமகிருஷ்ணன் அறுவைச் சிகிச்சை நிபுணர்.  இவர்களின் புதல்விதான். டாக்டர் பிரியா ராமச்சந்திரன். குழந்தைகள் நல மருத்துவத்தில் பதினைந்து ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறார். இவருடைய கணவர் ராமச்சந்திரனும் ஒரு டாக்டர்.

டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன் மெட்ராஸ் மெடிகல் காலேஜில் எம்.பி.பி.எஸ். படித்து, சிறந்த மாணவியாகப் பதக்கம் பெற்றவர்.  இங்கிலாந்து செயின்ட் தாமஸ் மருத்துவமனையிலும், ஈஸ்ட்போர்ன் மருத்துவமனையிலும் பயிற்சி பெற்று எப்.ஆர்.சி.எஸ். பட்டம் பெற்றவர். தொடர்ந்து இங்கிலாந்தில் ராயல் மான்செஸ்டர் ஹாஸ்பிடலில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. 

திருமணம் ஆனதும் கணவருடன் அமெரிக்க செல்ல வேண்டி வந்ததாம். ஆனால், எல்லா மருத்துவர்களையும் போல அங்கேயே தங்கிவிடாமல், இந்தியாவுக்கு வந்துவிட்டார். இப்போது டாக்டர் ப்ரியா ராமச்சந்திரனின் மருத்துவ சேவை சென்னையில் தொடர்கிறது.  அங்கே அமெரிக்காவில் ரத்தப் புற்று நோய் தாக்கிய குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதைப் பார்த்தவுடன், இங்கே வந்த பிறகு, ரத்தப் புற்று நோய் எனப்படும் லுகீமியா பாதித்த குழந்தைகளுக்குத் தம் அறக்கட்டளையின் மூலம் இலவச சிகிச்சை அளிக்க முன் வந்திருக்கிறார்.

நம் நாட்டில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் குழந்தைகள் இரத்தப் புற்று நோயால் தாக்கப்படுகின்றனர்.  இதற்கு சிகிச்சைக்கு ஏராளமாகச் செலவு ஆகும் என்பதால், அப்படிச் செலவழிக்க முடியாத குழந்தைகளின் பெற்றோர், தம் குழந்தைகளை இழக்கின்றனர்.  ஏனென்றால் இந்த நோய்க்கு சிகிச்சைக்கு ஆகும் செலவு சில லட்சங்கள் தேவைப்படும் எனவே இலவச சிகிச்சை அளிக்கிறோம்.

இந்த இலவச சிகிச்சையை எத்தனை வருடங்களாகச் செய்து வருகிறீர்கள்? 
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், ரே ஆப் லைட் அறக்கட்டளை ஆரம்பித்து, லுகீமியா தாக்கிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினோம். இரண்டு குழந்தைகளில் தொடங்கி, இதுவரை 124 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறோம்.  85 சதவிகிதக் குழந்தைகள் பிழைத்திருக்கின்றன.  இந்தச் சிகிச்சையை இலவசமாக அளிக்கிறோம்.

இரத்தப் புற்று நோய்க்கு இப்போது மருந்துகள் கிடைக்கின்றனவா?
கிடைக்கிறது.  ஆனால் கூடவே கீமோ தெரபியும், ரேடியோ தெரபியும் செய்தாக வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 40,000 முதல் 60,000 குழந்தைகள் வரை இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தந்தார் டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன். 

இந்த இலவச சிகிச்சைக்கு உதவ விரும்புபவர்கள், ழ்ஹஹ்ர்ச்ப்ண்ஞ்ட்ற்ண்ய்க்ண்ஹ ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவியை அளிக்கலாம் என்கிறார் டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன். 

இரத்தப் புற்று நோய் சிகிச்சைக்கு மூன்று ஆண்டுகள் சிகிச்சை அளித்தால், முற்றிலுமாகக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள்.  ஆனால் பணம் இல்லாமல் சிகிச்சை பெற முடியாத ஆயிரக் கணக்கான குழந்தைகள், ப்ரியா ராமச்சந்திரன் தொடங்கியிருக்கும் அறக்கட்டளை மூலம் இலவச சிகிச்சை பெற்று உயிர் வாழ முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தி.  இந்தப் பதினைந்து ஆண்டுகளாகத் தமக்குக் கிடைத்த நன்கொடைகளை வைத்துத்தான் இந்த இலவச சிகிச்சையை அளிக்க முடிகிறது என்கிறார் டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன்.  தம்மிடம் சிகிச்சைக்கு வந்த 124 குழந்தைகளில் 100 குழந்தைகள் பூரண குணம் அடைந்ததாகச் சொல்கிறார்.

இந்த ஆண்டு உங்களுக்கு நன்கொடைகள் கிடைத்தனவா?
இந்த ஆண்டு அறுபது குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப் போகிறோம்.  அந்த அளவுக்கு நன்கொடைகள் கிடைத்திருக்கின்றன. ஒரு விஷயத்தை இங்கே சொல்ல வேண்டும்.  தமிழகத்தில் ரத்தப் புற்று நோய் எனப்படும் லுகீமியா பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. ஆனால் ஆந்திராவில் அப்படி அல்ல. 

அதனால் அங்கிருந்து நிறையக் குழந்தைகள் இங்கே சிகிச்சைக்காக வருகின்றன.

தமிழ் நாட்டில் இது குறித்த விழிப்புணர்வு மேலும் வரவேண்டும்.  அப்படி வரும்பட்சத்தில் எங்கள் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க முடியும்.

சமீபத்தில் காஞ்சி காமகோடி சைல்ட் ட்ரஸ்ட் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கலந்துகொண்டார். மருத்துவம் செய்தால் குணப்படுத்த முடியும் என்ற வசதி இருக்கும்போது, குறுக்கே தடையாக இருப்பது நிதி ஒன்றுதான்.  ரே ஆப் லைட் இந்தியா அறக்கட்டளைக்கு நன்கொடைகள் அளிப்பதன் மூலம் புண்ணியம் சம்பாதித்துக் கொள்ளலாம்.
- சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com