குற்றங்களைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு வரவேண்டும்! சொல்கிறார் : முதல் பெண் சைபர் கிரைம் துப்பறிவாளர் தன்யாமேனன்

"12 -ஆம் வகுப்பு படிக்கும் அதிதியின் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். அவள் விரும்பிய எல்லாமே கேட்காமலேயே கிடைத்தன.
குற்றங்களைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு வரவேண்டும்! சொல்கிறார் : முதல் பெண் சைபர் கிரைம் துப்பறிவாளர் தன்யாமேனன்

"12 -ஆம் வகுப்பு படிக்கும் அதிதியின் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். அவள் விரும்பிய எல்லாமே கேட்காமலேயே கிடைத்தன. திடீரென்று ஒரு நாள் அதிதி தன் அறையில் இறந்து கிடந்தாள். பிரேதப் பரிசோதனையில் அவள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி இருப்பதை உறுதி செய்தது.

மகளின் திடீர் மரணத்திற்குக் காரணம் தெரியாமல் தவித்தனர் பெற்றோர்.  விசாரணை செய்த காவல்துறை அதிதியின் வேறொரு ரகசிய பரிமாணத்தைக் காட்டியபொழுது அது அவளது இழப்பைவிட பேரதிர்ச்சியைத் தந்தது. அவளது லாப்டாப் மற்றும் செல்போனில் அவளது நிர்வாணப் படங்கள் மெயில் செய்யப்பட்டிருந்தன. சாட்டிங் மூலம் அறிமுகமான பெங்களூர் இளைஞன் ஒருவன்,  அதிதியின் புகைப்படங்களை வற்புறுத்திக் கேட்டு வாங்கி இருக்கிறான்.

அவற்றை மார்ஃபிங் செய்து அவளது மெயில் முகவரிக்கே அனுப்பி மிரட்டி இருக்கிறான். வெளியே சொல்ல முடியாத அதிதி மரணத்தைத் தழுவினாள்'.

 "மஞ்சுளா ஒரு இல்லத்தரசி. இரு சிறு குழந்தைகளுக்குத் தாய். கோழிக்கோட்டில் வசித்து வந்தார். வீட்டில் இருந்த தொலைபேசியில் ஒரு நாள் மதியம் 11 மணிக்கு ஒரு நபர் போன் செய்தார். அது ஒரு ராங் கால். "உங்க குரல் இறந்துபோன என் சகோதரியை நினைவுபடுத்துகிறது!' என்று கூறி கட் செய்தார். மறுநாள் சரியாக அதே 11 மணிக்கு அந்த நபரிடமிருந்து போன் வந்தது. "உங்க குரலைக் கேட்டா மனசுக்கு ஆறுதலா இருக்கு சகோதரி!' என்று கூறி தொடர்பைத் துண்டித்தார்.

இப்படியாக தினமும் பகல் 11 மணிக்கு "கால்' வந்துகொண்டே இருந்தது. அவன் மிகவும் மரியாதையாகத்தான் பேசுவான். ஏதாவது ஒரு சுவையான விஷயத்தைப் பற்றிப் பேசுவான். யோகா, தியானம், கோயில் என்று ஆன்மிக சம்பந்தப்பட்ட விஷயங்களையே அதிகம் பேசுவான். மஞ்சுளாவிற்கு அவனது அறிவைக் கண்டு பிரமிப்பாக இருந்தது. விடுமுறை நாள்களில் வீட்டில் இருக்கும் அவள் கணவர் ஏதோ தோழியிடம் பேசுகிறாள் என எண்ணுமளவு அவனது அணுகுமுறை அத்தனை கச்சிதமாக இருக்கும். அவன் போன் செய்தாலே அது சரியாக 11 மணி என்று கடிகாரத்தைப் பார்க்காமலேயே அவள் சொல்லும் அளவுக்கு நேரம் தவறாமையைக் கடைப்பிடித்தான். ஆனால் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே "சட்'டென்று "கட்' செய்து விடுவான்.  திடீரென்று நான்கு நாள்கள் அவன் போன் பேசவே இல்லை. "போன் வரவில்லையே?' என்று ஏங்கத் தொடங்கினார் மஞ்சுளா. 

அடுத்தநாள் அவன் தொடர்புகொண்ட போது "ஏன் நாலு நாளா பேசவே இல்லை?' என்று தன்னை அறியாமலேயே கேட்டு விட்டார் மஞ்சுளா.

தூண்டிலில் மீன் சிக்கிவிட்டதை அறிந்த அவன் தனது வேறு முகத்தைக் காட்டத் தொடங்கினான். ஆபாசமாகப் பேசத் தொடங்கினான். "போலீசுக்குப் போவேன்!' என்று குமுறிய மஞ்சுளாவிடம் "நீ என்கிட்ட பேசினதை எல்லாம் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன்! ராங் நம்பர் ஆள்கிட்ட எதுக்கு தினமும் பேசினீங்க?ன்னு போலீஸ் கேட்டா என்ன சொல்லுவ?'
என்று திரும்ப மடக்கினான். மன உளைச்சல் தாளாத மஞ்சுளா மரணத்தைத் தேர்ந்தெடுத்தார். மேற்கண்ட இரு சம்பவங்களிலும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இவ்விரு சம்பவங்களும் "சைபர் கிரைம்' என்ற கரை காண முடியாத கடலின் இரு துளிகள் மட்டுமே.

சமையலறையில் நுழையும் குழந்தைகளை ஆபத்துகளில் இருந்து தீவிரமாகக் கண்காணிக்கிறோம். ஆனால், நமது குழந்தைகளுக்கு நாம் ஆசையாய் வாங்கிக் கொடுக்கும் ஆன்ராய்டு போன்கள், டேப்லட், லாப் டாப், ஐபாட் போன்றவை மிகவும் ஆபத்தானவை என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்கிறார் தன்யா மேனன்.

இவர்தான் இந்தியாவின் முதல் பெண் சைபர் கிரைம் துப்பறிவாளர் (Cyber Crime Investigator).  திருச்சூரைச் சேர்ந்த தன்யா, கணினி அறிவியலில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தவர்.

இவரது தாத்தா P.B. மேனன் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் ஆவார். அவர்தான் சைபர் கிரைம் குறித்து நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொள்ளுமாறு தன்யாவை வற்புறுத்தினார்.  அதில் கலந்துகொண்ட பின்னர்தான் "சைபர் கிரைம்' என்ற உலகளாவிய பிரச்னையின் தீவிரத்தை அவர் உணர்ந்து கொண்டார். எனவே முதுகலை பட்டயச் சான்றிதழ் (Certified Post graduate diploma course in cyber crime and Intellectual property rights in cyber space) படிப்பை முடித்தார். புனேவில் உள்ள "ஏசியன் ஸ்கூல் ஆஃப் சைபர் ஸ்பேஸ்' நிறுவனத்தில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

2005-ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகள், காவல்துறை மற்றும் பொது நிறுவனங்கள் போன்றவற்றுக்கு சைபர் கிரைம் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்த ஆரம்பித்தார். "சைபர் கிரைம் என்பதில் தொலைபேசியை முறைகேடாகப் பயன்படுத்துதல், மார்ஃபிங் முறையில் ஆபாசப் படங்களை உருவாக்குதல், தவறான முகவரித் தளங்களை உருவாக்குதல், பிறருக்குத் தெரியாமல் அவர்களது ரகசியத் தகவல்களை வெளிப்படுத்துதல், அறிவுசார் உடைமைகளை (Intellectual Property) பிறர் அறியாமல் திருடுதல் அல்லது விற்றல் போன்றவை அடங்கும்!
 2006-ஆம் ஆண்டு கேரளாவில் மூன்று பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். கேரள காவல்துறை தன்யாவின் உதவியை நாடியது. இவ்வழக்கைத் துப்பறிந்த இவர் பள்ளி மாணவர்கள் சிலர் அம்மாணவிகளின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருப்பதைக் கண்டறிந்தார்.

 "சைபர் கிரைம் துப்பறிதல் என்பது இறந்த பின்பு பிரேதப் பரிசோதனை செய்வதற்குச் சமமாகும். இறப்பிற்கான காரணத்தை மட்டுமே நாம் கண்டறிய முடியும். இறப்பிற்குக் காரணமானவரை அல்ல! கேரளத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சி என் மனதை மிகவும் பாதித்துவிட்டது. 2008-ஆம் ஆண்டு சைபர் குற்றங்களைத் தடுக்கும் முதல் முயற்சியாக Avanzo Cyber Security Solutions என்ற நிறுவனத்தை  தொடங்கியுள்ளேன்.   என் அடுத்த இலக்கு பள்ளி, கல்லூரி மாணவ / மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது 
மட்டுமே'' என்கிறார் தன்யா மேனன்.
 - என். லக்ஷ்மி பாலசுப்ரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com