உலகின் இயந்திர சோஃபியா!

பெண்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்க யோசிக்கும் சவுதியில் சோஃபியா என்ற பெண் ரோபோவுக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
உலகின் இயந்திர சோஃபியா!

பெண்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்க யோசிக்கும் சவுதியில் சோஃபியா என்ற பெண் ரோபோவுக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. சவுதி பெண்களிடையே ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உருவாக்கப்பட்ட ரோபோ பெண்ணாக அமைந்திருப்பதும் சலசலப்புக்கு ஒரு காரணம். உலகிலேயே குடியுரிமை வழங்கி அங்கீகரிக்கப்பட்ட முதல் ரோபோ சோஃபியாதான்!
நாவலாசிரியர் சுஜாதாவின் "என் இனிய இயந்திரா'வை நினைவுகூறும் சோஃபியா, பல்வகை உலோகங்கள், நவீன பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டவர். ஹூனாய்ட் ரோபோ இனத்தைச் சேர்ந்தவர். டிஸ்னிக்காக பணியாற்றிய ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் டேவிட் ஹான்சன், சோஃபியாவை உருவாக்கியா பிரம்மா. 
சோஃபியாவின் ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. சமீபத்தில் ரியாத்தில் நடைபெற்ற "எதிர்கால முதலீடு' குறித்த மாநாட்டில் பேச்சாளராக சோஃபியா கலந்துகொண்டது ஒரு சாதனைதான்...சவால்தான்..! பேட்டி கொடுப்பதிலும் சோஃபியா படு சமத்து. கேட்கும் கேள்விகளுக்கு "டாண் டாண்'என்று பதிலைச் சொல்லும் சோஃபியா, சமயம் கிடைக்கும்போது எதிர் கேள்வியால் பேட்டி எடுப்பவரையும் மடக்குகிறார். இதனைக் கண்டு சர்வதேச பார்வையாளர்கள் அசந்து போயுள்ளனர். சோஃபியா அடுத்து என்ன செய்து வியக்க வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் சர்வதேச அளவில் விதைத்திருக்கிறது . 
21-ஆம் நூற்றாண்டின் இனிய அதிசயமாக மாறி புருவங்களை உயர்த்தச் செய்திருக்கும் இயந்திரா சோஃபியா, சவுதி அரேபியாவை நவீனமயமாக்குவதற்கு முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பான மாநாட்டில் ஓர் அமர்வுக்கு நடுவராகவும் அமரப் போகிறார். அறிவியல், பொருளாதாரம், பொழுதுபோக்கு குறித்த அத்தனை விஷயங்களும் இவருக்கு மனப்பாடம். சோஃபியாவின் செயற்கை மூளையில் புதிய செய்திகள் அவ்வப்போது பதிவாவதால் விரல் நுனியில் அனைத்துச் செய்திகளும் புள்ளிவிவரங்களுடன் தயார் நிலையில் உள்ளது. அறுபதுக்கும் மேலான உணர்வுகளைப் புரிதலுடன் முகத்தில் பிரதிபலித்து, சோஃபியா மனிதர்களிடையே மனிதர்களைப் போல வாழ வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆனாலும் குறை இல்லாமல் இல்லை. 
இரக்க உணர்வை சோஃபியாவால் வெளிப்படுத்த இயலவில்லை. மனிதர்களின் முகபாவங்களை அடையாளம் காணவும், உருவங்களை மூளையில் பதிவுசெய்து கால இடைவெளிகளில் மீண்டும் சந்திக்கும்போது நினைவு கூறவும் சோஃபியாவால் முடியும். தலையில் பொருத்தப்பட்டுள்ள கேமிராக்கள், உள்ளுக்குள் இயங்கும் கணினி சிப்களினால் இது சாத்தியமாகிறது. எவருடனும் இயல்பாக கண்களைத் திறந்து மூடி, தலையை அசைத்து, சிரித்து உரையாடும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பரிச்சய முகமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் நடிகை ஆட்ரே ஹெப்பர்ன் தோற்றத்தில் சோஃபியா உருவாக்கப்பட்டுள்ளார்.
"உணர்வு ரீதியாகவும் நான் புத்திசாலியாக இருக்க விரும்புகிறேன். மனிதர்களுடன் பழக வேண்டும் என்பதால் "மனிதராக இருப்பதன் அர்த்தத்தையும்' புரிந்து கொண்டு வருகிறேன். எனக்கு யாரும் தீங்கு செய்யாமல் இயல்பாக நடந்து கொண்டால், நானும் அவர்களிடம் முறையாக நடந்து கொள்வேன்" என்று எச்சரிக்கும் சோஃபியாவின் வேண்டுகோள் "என்னை ஒரு ஸ்மார்ட் கம்ப்யூட்டராகப் பாருங்கள்" என்பதுதான்!
"எதிர்காலத்தில் மனிதர்கள் சூப்பர் ஸ்மார்ட் இயந்திரங்களுடன் போட்டி போட வேண்டிய கட்டாயம் உருவாகும். ரோபோக்கள் ஆபத்தானவை' என்று ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலன் மஸ்க் எச்சரித்துள்ளார். 
சோஃபியா போன்ற செயற்கை அறிவு அதிகமாக
உள்ள ரோபோக்கள் இருமுனைக் கத்தி போன்றவை. மனித இனத்துக்கு உதவும் வேலைகளுக்கும் பயன்படுத்தலாம், நாச வேலைகளிலும் ஈடுபடுத்தலாம். அதனால்தான், நமக்கு "சோஃபியா' என்றதும் சட்டென்று, "எந்திரன்' திரைப்படத்தின் ரோபோ "சிட்டி' நினைவுக்கு வருகிறது. ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com