சமையல்... சமையல்!

நிலக்கடலை சட்னி, சேனை மசாலா, வெங்காயச் சட்னி, ராகி சேமியா வெஜிடபிள் அடை

நிலக்கடலை சட்னி

தேவையான பெருள்கள்

நிலக்கடலை பருப்பு ( வறுத்தது) - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - கால் கிண்ணம்
தக்காளி - 3
வெங்காயம் - 2
மிளகாய் வற்றல் - 3
வெள்ளைப் பூண்டு - 8 பற்கள்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
உளுந்தம் பருப்பு, கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை

தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் நிலக் கடலைபருப்பு, தேங்காய்த்துருவல், மிளகாய் வற்றல், வெள்ளைப் பூண்டு சேர்த்து மிக்ஸியிலிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, பின்னர் அரைத்த விழுதையிட்டு, உப்பும் சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். நன்கு கொதித்து கமகம வாசனை வந்ததும் இறக்கவும். நிலக்கடலை சட்னி தயார். இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம் இவைகளுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். நிலக்கடலையில் புரதம், தாதுப் பொருள்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

*

சேனை மசாலா

தேவையான பொருள்கள்

சேனை - கால் கிலோ
மஞ்சள் தூள் - சிறிது
தனியாத் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வெள்ளைப் பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

சேனையை நடுத்தரமான அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நறுக்கியவைகளை இட்டு, போதிய அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பதத்திற்கு வெந்ததும் எல்லா மசாலாத் தூள்கள், பூண்டு இஞ்சி விழுது சேர்த்து, உப்பிட்டு நன்கு கலந்து தொடர்ந்து வேக வைக்கவும். நீர் முழுதும் வற்றி மசாலா கலவை நன்கு சுருண்டு கமகம என வாசனை வந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்துவிட்டு இறக்கவும். சேனை மசாலா தயார். பருப்பு, சாம்பார், ரசம், தயிர் என எல்லா சாதங்களுடனும் வைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- உத்ரா ஆனந்த், பெரும்பாக்கம்.

*

வெங்காயச் சட்னி

தேவையான பொருள்கள்

பெரிய வெங்காயம் - ஒன்று
கடலைப் பருப்பு - அரை மேசைக்கரண்டி
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - குண்டு மணி அளவு
தனியா - அரை மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருங்காயத் துண்டைப் போட்டு பொரித்து அதில் கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுத்து எடுக்கவும். பிறகு அதில் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் வதக்கியவற்றை போட்டு புளி, உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும். சுவையான வெங்காய சட்னி தயார். 

*

ராகி சேமியா வெஜிடபிள் அடை!

தேவையான பொருள்கள்

ராகி சேமியா - 100 கிராம் 
நறுக்கிய கேரட், கோஸ், குடை மிளகாய் - அரை கிண்ணம் 
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் - சிறிது
அரைக்க
பச்சரிசி - 100 கிராம், 
துவரம்பருப்பு - 50 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 8

செய்முறை

சுடுநீரில் உப்பு, எண்ணெய், ராகி சேமியாவை சேர்த்து வடித்து உதிர்க்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைமணி நேரம் ஊறவிட்டு கரகரவென அரைத்து, ராகி சேமியா, நறுக்கிய காய்கறிகள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து, சூடான தோசைக்கல்லில் கனமான அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். சுவையான ராகி சேமியா வெஜிடபிள் அடை தயார்.
- எஸ். சரோஜா, திருவண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com