எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை... 

"தற்போது பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், வீட்டில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நேரமில்லாமல், டியூசனில் சேர்த்து விடுகிறார்கள்.
எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை... 

"தற்போது பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், வீட்டில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நேரமில்லாமல், டியூசனில் சேர்த்து விடுகிறார்கள். இதற்காக மாதம்தோறும் ஒரு தொகையும் செலவிடுகிறார்கள். இது ஒருபுறம் என்றால், பள்ளி குழந்தைகள் அதிக அளவில் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. காரணம், சிபிஎஸ்சி, மெட்ரிக்குலேஷன், சமச்சீர் என ஏகப்பட்ட கல்விமுறைகள் வந்துவிட்டன. அதனை உள் வாங்கி படிப்பது என்பது தற்போது உள்ள குழந்தைகளுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தாலும், குழந்தைகள் ஒரு மணி நேரம் கூட ஓய்வு எடுத்துக் கொள்ள அவகாசம் இல்லாமல் உடனடியாக டியூசனுக்கு கிளம்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த நிலைமாற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் "பெப்பல்ஸ்' ஆன் லைன் கல்வி பயிற்சி.
யூ டியூப் பக்கத்திற்கு சென்று பெப்பல்ஸ் இங்கிலீஷ், தமிழ், மேக்ஸ், சயின்ஸ் என்று பதிவிட்டால், ஒரு டீச்சர் வந்து நீங்கள் விரும்பும் பாடத்தை சொல்லிக் கொடுப்பார்'' என்கிறார் பெப்பல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுதா. இவரை, கோபி சுதா என்றால் யூடியூப் பார்வையாளர்களுக்கு மிகவும் பரிச்சயம். காரணம், சுதா ஆன் லைன் சமையல் கலையிலும் வல்லவர். இது குறித்து மேலும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெப்பல்ஸ் சிடி நிறுவனத்தைத் தொடங்கினோம். இந்நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டிலிருந்து குழந்தைகளுக்கான கேம்ஸ் சிடிகளை வரவழைத்து விற்று வந்தோம். இதற்கிடையில், நமது தமிழில் குழந்தைகளுக்கான ஏராளமான கதைகள் இருக்கிறதே அதை அனிமேஷன் கலந்து சிடி வடிவில் கொடுத்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் தெனாலிராமன், பஞ்சதந்திரா, ஃபேரி டெல்ஸ் கதைகளை 2 டி அனிமேஷன் மூலம் சிடியாக உருவாக்கினோம். அந்த சிடிகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அந்த வரவேற்பு கிடைத்த உந்துதலில் சிறார்களுக்கான "ஜானி ஜானி யெஸ் பாப்பா' போன்ற ரைம்ஸ் பாடல்களை சிடியில் 3 டி வடிவமாக்கினோம். பின்னர், 1-3 வது வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கான பாடங்களை அனிமேஷன் மூலம் சிடியாக உருவாக்கினோம். இவற்றிற்கு எல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கவே, அதைத் தொடர்ந்து 12- ஆவது வகுப்பு வரை உள்ள பாடங்கள் முழுவதையும் சிடியாக்கினோம். இந்நிலையில் இணையத்தின் வளர்ச்சி அபரிமிதமானதால், தற்போது, யூடியூப்பில் சேனல் தொடங்கி அதன் மூலம் லைவ் டீச்சிங் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் ஒரு குழந்தை டியூசன் சென்று படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே அவர்கள் ஆன் லைன் மூலம் பாடத்தைப் புரிந்து கொள்ள முடியும். யூடியூப் சென்று நீங்கள் விரும்பும் பாடத்தை தேர்வு செய்து கிளிக் செய்தால் ஆசிரியர் வந்து உங்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்துவார். உங்களுக்குப் புரியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் ரீ ப்ளே செய்து பார்த்து புரிந்து கொள்ளலாம். இதனை சிடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
1- 3 வது வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டும் லைவ் டீச்சிங் கிடையாது. அதை அவர்கள் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு அவர்களுக்கு பொறுமை இருக்காது. எனவே 1- 3 வது வகுப்பு வரை உள்ள பாடங்கள் அனைத்து அனிமேஷன் கம் ப்ளே டீச்சிங் மூலமாக இருக்கும். இதனால் குழந்தைகள் மனதில் அந்த பாடம் எளிதில் பதிந்துவிடும்.
இதைத் தவிர, குழந்தைகளுக்காக "சுட்டி பையன் ராஜுவுடன் ஒருநாள்' என்று ஒரு அனிமேஷன் கதை இருக்கிறது. இதில் ராஜு என்ற அந்த குழந்தை பெற்றோருடன் விமான நிலையம் செல்வான், அவன் வழியில் பார்க்கும் அத்தனைக்கும் விளக்கம் கேட்பது போன்றும், அதற்கு அவனது அப்பா பதில் சொல்வதும் போலவும் இருக்கும். இதில், சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் பற்றிய விளக்கம் போன்றவையும் இருக்கும். இப்படி விஷுவலாகப் பார்க்கும் போது, சொல்லி கொடுப்பதைவிட குழந்தைகளின் மனதில் இவை எளிதில் பதிந்துவிடும்.
இதுபோன்று ஸ்போக்கன் இங்கிலீஷ், ஆங்கில உச்சரிப்பை அழகாக சொல்லித் தரும் ஃபோனிக்ஸ், ஸ்போக்கன் இந்தி, வெளிமாநிலத்தவர்களுக்காக ஸ்போக்கன் தமிழ், ஸ்போக்கன் சான்ஸ்கிரிட், ஸ்போக்கன் ஜெர்மன், ஸ்போக்கன் மராத்தி, ஸ்போக்கன் குஜராத்தி, ஸ்போக்கன் மலையாளம் என பல மொழிகளையும் சிடியாகவும், யூடியூபிலும் பதிவிட்டிருக்கிறோம்.
மேலும், ஐஐடி, நீட் தேர்வுக்கான பாடங்களையும் சிடியாக உருவாக்கியுள்ளோம். ரூ, 2000 மதிப்புள்ள இந்த சிடிக்களை இன்னும் 2 வாரங்களில் யூடியூப் மூலம் இலவசமாக வழங்க முயற்சி எடுத்து வருகிறோம். முதலில் பயோலஜி, கெமிஸ்ட்ரி பாடங்களை மட்டும் பதிவிடுகிறோம். மற்ற பாடங்களுக்கான வேலை நடந்து வருகிறது. விரைவில் அதையும் பதிவிட்டு விடுவோம். நீட் தேர்வுக்கான ஆன் லைன் வகுப்புகளை கல்லூரி பேராசிரியர்களை வைத்து கொடுக்க உள்ளோம்.
கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கும் இந்த சிடி போய் சென்றடைய வேண்டும் என்பதால் இதன் விலை ரூ.200- 500 க்குள் வைத்திருக்கிறோம் '' என்றார்.
- ஸ்ரீதேவி குமரேசன்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com