சமையல்... சமையல்!

 பாலை நன்கு காய்ச்சி வைக்கவும்.  அரிசி  மாவுடன்   தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பும் சேர்த்து நன்கு  பிசைந்து  ஒரு மணி நேரம் வைக்கவும்.
சமையல்... சமையல்!

பால் கொழுக்கட்டை!

தேவையானவை:
அரிசி மாவு - 300  கிராம்
பசும்பால்  - 150 மி.கி.
தேங்காய்த் துருவல்  -  அரை கிண்ணம்
உப்பு -  தேவைக்கேற்ப
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 தேக்கரண்டி


செய்முறை:  பாலை நன்கு காய்ச்சி வைக்கவும்.  அரிசி  மாவுடன்   தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பும் சேர்த்து நன்கு  பிசைந்து  ஒரு மணி நேரம் வைக்கவும். பின்னர், அதில்  நெய்விட்டு  பிசைந்து கொள்ளவும். கலவையை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும். பின்னர் காய்ச்சியப் பாலில் கொழுக்கட்டைகளை சேர்க்கவும் கமகம நெய் வாசனையுடன் பால் கொழுக்கட்டை தயார். சூப்பர் சுவையுடன்  இருக்கும்.  குழந்தைகள்  முதல் பெரியவர்  வரை விரும்பி சாப்பிடுவர்,  பால் சேருவதால்  சத்துள்ள  கொழுக்கட்டை இது.


சிறுதானிய கொழுக்கட்டை

தேவையானவை:  
தினைமாவு  - கால் கிலோ
கேழ்வரகு மாவு -  50 கிராம்
சாமை மாவு -  50 கிராம்
தேங்காய்த் துருவல்  -  அரை கிண்ணம்
உப்பு -  தேவையான அளவு


செய்முறை:  மூன்று  மாவுகளையும் வெறும் வாணலியில்  இட்டு லேசாக வறுக்கவும். நன்கு ஆறினதும் தேங்காய்த் துருவல்,  உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து, ஒருமணி நேரம் வைக்கவும். பின்னர், நடுத்தர அளவு உருண்டைகளாகப் பிடித்து,  இட்லித் தட்டில்  வைத்து நன்கு வேக  வைத்து எடுக்கவும்.  சிறுதானிய கொழுக்கட்டை தயார். மிகவும் சுவையாக இருக்கும். சிறுதானியங்களில் தாதுப் பொருள்களும்,  வைட்டமின்களும் உள்ளதால், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை:
அரிசி மாவு  - கால் கிலோ
கேரட் - 200 கிராம்
பீன்ஸ் -25 கிராம்
தேங்காய்த் துருவல்  - கால் கிண்ணம்
மிளகுத்தூள் -  கால் தேக்கரண்டி
உப்பு -  தேவைக்கேற்ப 


செய்முறை: கேரட்டை  மெல்லிதாக துருவிக் கொள்ளவும்.  பீன்ûஸப் பொடியாக நறுக்கவும். இரண்டையும்  சேர்த்து பாதி பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும். அரிசி மாவுடன் காய்கறி கலவை, தேங்காய்த்துருவல், மிளகுத்தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து, போதிய அளவு நீர் தெளித்து, நன்கு பிசைந்து கொள்ளவும். கலவையை  எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகப்  பிடித்து வைக்கவும். பின்னர், இவைகளை இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும். வெஜிடபிள் கொழுக்கட்டை தயார்.  சுவையும்  சத்தும் மிக்கது இந்த கொழுக்கட்டை. குழந்தைகள்  மிகவும் விரும்பி தின்பர்.


கோதுமை கொழுக்கட்டை

தேவையானவை
கோதுமை மாவு -  200 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
தேங்காய்த் துருவல்  - அரை கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப 
வெல்லம் - அரைகிண்ணம்


செய்முறை:  கோதுமை மாவு,  அரிசி மாவு இரண்டையும்  நன்கு கலந்து கொள்ளவும்.  இத்துடன் உப்பு சேர்த்து, போதிய  அளவு  தண்ணீர் தெளித்து  ஒரு மணி நேரம் வைக்கவும். பின்னர், மாவு கலவையை நடுத்தர அளவு உருண்டைகளாகப் பிடித்து, அதன் உள்ளே பொடித்த வெல்லம் கலந்து தேங்காய்த் துருவலை வைத்து மூடி இட்லி தட்டில்வைத்து நன்கு வெந்ததும் எடுக்கவும். கோதுமை கொழுக்கட்டை  தயார். மிதமான  மணத்துடன்  மிகவும் சுவையானது  இந்த கொழுக்கட்டை  ஆரோக்கியத்திற்கு  ஏற்றது.


மசாலா  கொழுக்கட்டை

தேவையானவை
அரிசி மாவு - அரை  கிலோ
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு -  கால் தேக்கரண்டி
வெந்தயம் -  1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்  - அரை டம்ளர்
உப்பு -  தேவைக்கு


செய்முறை:  சீரகம், மிளகு, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக  கலந்து வெறும் வாணலியில் இட்டு லேசாக  வறுத்து  எடுத்து,  ஆறினதும் மிக்ஸியில்  இட்டு கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.  அரிசி மாவுடன்,  தேங்காய்த் துருவல், மசாலா  பொடி கலவை,  உப்பு இவைகளைச்  சேர்த்து தண்ணீர்  தெளித்துப் பிசைந்து,  இரண்டு மணி நேரம்  வைக்கவும்.  பின்னர், எலுமிச்சம் பழம்  அளவு உருண்டைகளாக  உருட்டி, இட்லி பாத்திரத்தில்  வேக வைத்து எடுக்கவும். மசாலா கொழுக்கட்டைத் தயார்.சூடாகச் சாப்பிட சுவையாக  இருக்கும். சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியன சேருவதால் இதை மூலிகைக் கொழுக்கட்டை என்றும் சொல்லலாம்.  அக உறுப்புகளை சீராக இயங்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com