9 வயதில் 75 நாடுகளின் நாணயம் சேகரித்த சிறுமி!

9 வயதில் 75 நாடுகளின் நாணயம் சேகரித்த சிறுமி!

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பர் சான்றோர். இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டம், கடற்கரை கிராமமான சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வின்னி.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பர் சான்றோர். இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டம், கடற்கரை கிராமமான சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வின்னி.
 குறுகிய காலத்திலேயே உலகிலுள்ள அனைத்து நாட்டு நாணயங்கள், கரன்சிகளை சேகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 3 ஆண்டுகளாக வெளிநாட்டு நாணய சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் வின்னி. இவரது தந்தை ஜஸ்டின் ஆன்டணி 3 ஆண்டுகளுக்கு முன்னர் சவுதி அரேபிய நாட்டுக்குச் சென்று வந்தபோது, அங்கிருந்து கொண்டு வந்த அந்நாட்டு நாணயத்தை மகள் வின்னிக்கு காட்டி, உலக நாடுகள் குறித்தும், அந்த நாடுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயரிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது குறித்தும் விளக்கி கூறியுள்ளார். இதைக் கேட்டதிலிருந்து வின்னிக்கு உலகிலுள்ள அனைத்து நாடுகளின் நாணயங்கள், கரன்சிகளை சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உலக நாடுகளின் நாணயங்கள், கரன்சிகளை சேகரிக்க தொடங்கியுள்ளார்.
 வெளிநாட்டு நாணயம் சேகரிப்பதில் ஏற்பட்ட ஆர்வம் குறித்து சிறுமி வின்னி கூறும்போது, "3 ஆண்டுகளுக்கு முன் வளைகுடா நாட்டிலிருந்து வந்த எனது தந்தை மூலம் வெளிநாட்டு நாணயங்கள் குறித்த தகவலை தெரிந்து கொண்டேன். அதிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் எனது தந்தையின் நண்பர்கள் மற்றும் எனது தாய், தந்தையரின் உறவினர்கள் என்ன பொருள் வாங்கி வர வேண்டும் என என்னிடம் கேட்கும்போது, நான் அவர்களிடம் விளையாட்டுப் பொருள்களோ, துணிகள் மற்றும் வாசனை திரவியங்களோ கேட்பதில்லை. அதற்குப் பதிலாக அவர்களிடம் வெளிநாட்டு நாணயங்களை மட்டுமே பரிசாக கேட்பதை வழக்கமாக வைத்துள்ளேன்'' என்கிறார்.
 மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், துருக்கி, செக்கோஸ்லோவேகியா மற்றும் சவுதி அரேபியா, குவைத், பக்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் உள்பட 75 நாட்டு நாணயங்கள், கரன்சிகளை சேகரித்துள்ளதாக கூறும் வின்னி, தான் சேகரித்த அனைத்து நாணயங்களும் குறைந்த மதிப்பிலானது. குறிப்பாக அவை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1 முதல் ரூ. 10 வரையிலான மதிப்பு கொண்டவை என்றும் கூறுகிறார். இச் சிறுமி தற்போது குழித்துறை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
 -சி. சுரேஷ்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com