எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்! - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பெருமைக்கு உரியவர் நிர்மலா சீதாராமன். அப்பா சீதாராமன் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர்.
எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்! - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பெருமைக்கு உரியவர் நிர்மலா சீதாராமன். அப்பா சீதாராமன் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். அம்மாவின் பூர்விகம் திருவெண்காடு. தந்தை ரயில்வே ஊழியர் என்பதால், 1959-ஆகஸ்ட் 18 தேதி பிறந்த நிர்மலா சீதாராமனின் பள்ளிப் படிப்பு விழுப்புரம், திருச்சி என்று தொடங்கி கல்லூரி படிப்பு திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியிலும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தன.
பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் நிர்மலாவின் கணவர், பரக்கலா பிரபாகர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 
பிரபாகரும், நிர்மலாவும் ஒன்றாகப் படித்தவர்கள். பிரபாகரின் தந்தையார் ஆந்திராவில் மிகவும் மதிக்கப்படும் சுதந்திர போராட்டத் தியாகி.
அரசியலுக்கு வருவதற்கு முன்னால் லண்டனில் வேலை பார்த்து வந்த நிர்மலா சீதாராமன், ஹைதராபாத்தில் குடியேறிய பிறகு "பிரணவா' என்கிற பள்ளிக்கூடத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். 2008 - இல் பா.ஜ.க.வில் இணைந்து அந்தக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரானார். 2014-இல் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, அமைச்சரவையில் முக்கியமாக வர்த்தகத் துறை அவருக்கு தரப்பட்டது. இப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர். 
சென்னைக்கு வந்திருந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அமைச்சர், அரசியல்வாதி என்பதைத் தாண்டி, சாதனைப் பெண்மணியான அவருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் சராசரிப் பெண்மணியுடன் சரளமாக ஒரு நேர்காணல் மேற்கொண்டோம். 
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய அனுபவங்களையும், எண்ணங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் :

அம்மா குறித்து மனதில் தோன்றும் பிம்பம்?
சின்ன வயதிலிருந்தே அம்மாவைப் பற்றிய ஓர் உருவம் மனதில் தோன்றுகிறது என்றால் அது, எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கும் அம்மா தான், நிறைய படிப்பார்கள். அவர்கள் படித்ததில் பத்தில் ஒன்று கூட நான் படித்ததில்லை. தமிழில்தான் படிப்பார்கள் ஆனால் நம் நாட்டில் எல்லா மொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு நூல்களாக அவை இருக்கும். 
பல தேசத் தலைவர்களின் கதைகள், சரத்சந்திரர் போன்றவர்களின் படைப்புகள் என்று அம்மா இந்திய அளவில் எல்லா மொழி இலக்கியங்களையும் தமிழில் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். அவர்கள் அறிமுகப்படுத்தித் தான் இந்தியாவின் அத்தனை மாநிலங்களில் உள்ள தலைவர்களைப் பற்றியும் இலக்கியங்களையும் பற்றி எனக்குத் தெரிந்தது. 

பள்ளி நாட்களும், சிறுவயது நினைவுகளும்?
சிறுவயது நினைவு என்றவுடன், விழுப்புரத்தில் நாங்கள் படித்த பள்ளிக்கூடம், ரெயில்வே காலனியில் நாங்கள் வசித்த போது அங்கே என்னுடைய நண்பர் நவநீதன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததும், சைக்கிள் ஓட்டி விளையாடியதும் தான் நினைவுக்கு வருகின்றன. 
பள்ளிக்கூடத்தில் ஒருமுறை தடுக்கி விழுந்ததில் கை முறிந்து போய் கட்டுப்போட்டு இருந்தேன். அந்த நாட்களிலும் கையிலே கட்டோடு கூட அந்த ரயில்வே காலனியில் விடாமல் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. 
என் தோழி அமுதாவின் வீட்டில் சென்று விளையாடியதும் பசுமையாக நினைவில் உள்ளது. 
என்னுடைய சகோதரி விழுப்புரத்தில்தான் படித்துக் கொண்டிருந்தார். நானும் அங்கேயே என்னுடைய பள்ளிப் படிப்பை ஆரம்பித்திருந்தேன். 
உடல்நலக் குறைபாடு உள்ள ஆரோக்கியமற்ற ஒரு குழந்தையாக நான் இருந்தேன். எப்போதும் மூக்கு வடிந்து கொண்டு, எதற்கெடுத்தாலும் தடுக்கி விழுந்து விடுவேன். 
டிப்தீரியா பாதிப்பினால் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் ரயில்வே மருத்துவமனைக்கு அம்மா தூக்கிக் கொண்டு போனதும் அங்கே படுக்கை வசதி கிடைக்காத நிலையில் மருத்துவமனை வராண்டாவில் அம்மா என்னை மடியில் வைத்துப் பார்த்துக் கொண்டதும் அப்படியே நினைவிருக்கிறது. 
அப்போது, அப்பா தன்னுடைய வேலை காரணமாக ராமேஸ்வரத்தில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்குத் தகவல் தெரிவிப்பதற்குக் கூட வழியில்லாமல் இருந்தது.

கல்லூரி கனவுகள்... லட்சியங்கள்...
திருச்சி ஏர்ப்ஹ் இழ்ர்ள்ள் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு வக்கீலாக வேண்டும் என்பது மட்டும்தான் லட்சியமாக இருந்தது. அங்கே என்னுடைய பள்ளி முதல்வர் சிஸ்டர் இம்மாக்குலின், "நல்ல வாதம் செய்யும் திறமை உனக்கு இருக்கிறது அதனால் உன் வீட்டில் அம்மாவிடம் சொல்லி வக்கீலுக்குப் படிக்க வைக்கச் சொல்லு,' என்று என்னிடம் அடிக்கடி சொல்வார். எனக்கும் அது தவிர வேறு யோசனைகள் இருக்கவில்லை. 
கல்லூரி நாட்களில் அரசியல் ஆர்வம் எல்லாம் இல்லை. பின்னாளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த போது தான் இயக்கம் சார்ந்த செயல்பாடுகளில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. 
அங்கே அரசியல் கட்சி தொடர்புடைய பல அமைப்புகள் இருந்தன. அதே நேரத்தில் அரசியல் சாராத இயக்கமும் இருந்தது. அந்த இயக்கத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். நடுநிலைச் சிந்தனையாளர்கள் என்ற நிலையில் எனக்கு அது பிடித்து இருந்தது. என்னையும் அறியாமல் அதுதான் என்னுடைய பொதுவாழ்க்கையின் சமூக செயல்பாட்டின் தொடக்கமாக அமைந்தது.

ரோல்மாடல் யார்?
எனக்கு முன்மாதிரி என்று ஒருவரும் இல்லை. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விஷயத்திலும் என பலர் இருக்கிறார்கள். குறிப்பிட்டு ஒருவரைச் சொல்வதற்கில்லை.

சமூக சிந்தனையில் குடும்பத்தின் பங்களிப்பு!
நிச்சயமாக 100 சதவிகிதம் எங்கள் குடும்பம்தான் இதற்குக் காரணம். எங்கள் அம்மா வழித் தாத்தா காலத்திலிருந்தே சுதந்திரப்போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்தது. எங்கள் தாத்தா என் தாய்மாமன்மார்களுக்கு தேசத்தலைவர்களின் பெயரையே வைத்திருந்தார். காந்தி மாமா, சத்தியமூர்த்தி, ராஜாஜி மாமா என்றுதான் பெயர். நாட்டு நலன், தேச சிந்தனை இவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக எங்கள் குடும்பத்தினர் இருந்த அந்தச் சூழல் எனக்கும் சமூகம் பற்றிய சிந்தனையை இயல்பிலேயே ஏற்படுத்தி இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 

குடும்பப் பின்னணி...
எங்கள் தந்தைவழிப் பாட்டனார் பெரிய இறை சிந்தனை கொண்டவர் இல்லை என்றாலும் அவர் நல்ல ஆன்மிகவாதி. ரயில்வே பாதைகள் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பணி நிமித்தமாக ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கும் போது அவருக்குக் கிடைத்த அனுமன் சிலையை வைத்து கல்லுக்குழி என்ற இடத்தில் ஓர் அனுமார் கோயிலை ஏற்படுத்தினார் அது இன்றளவும் பிரசித்தி பெற்றதாகவே இருந்து வருகிறது. எங்கள் அம்மா வழி தாத்தா குடும்பத்தில் எப்போதும் தேசம் பற்றிய சிந்தனை, அது பற்றிப் படிப்பது அதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது இந்த சூழ்நிலை தான் நிலவியது.

அரசியலில் பெண்களின் பங்கு!
அரசியல் கட்சிகள் தான் இதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும். பா.ஜ.கவைப் பொருத்தவரை பெண்களுக்கு கட்சிப் பொறுப்புகளிலும் சரி ஆட்சியிலும் சரி 33 சதவிகித இடம் தருகிறார்கள். அதன் பயனாளியாகத் தான் நானும் இருக்கிறேன். பஞ்சாயத்து முதல் எல்லா நிலைகளிலும் எங்கள் கட்சியில் பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் அரசியலில் பெரும் அளவில் பங்கேற்பதற்கு இதுதான் ஒரு சிறந்த வழி என்று எனக்குத் தோன்றுகிறது.

உயர் பதவிகளின் டென்சன்...
புது விதமாக சிந்திக்கக் கூடிய செயல்படக் கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும் பெண்கள் பயன்படுத்துகிறார்கள். ஒரு புதிய வழிமுறையை சட்டத்திற்கு உட்பட்டு பெண்கள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். எங்களுடைய அமைச்சரவையில் எல்லாப் பெண்களுமே நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி வேண்டுமென உத்வேகத்தோடு தன்னோடு இருப்பவர்களையும் அரவணைத்துக் கொண்டு அனைவரோடும் புதுமைக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பெண்கள் வளர்ச்சியும் கலாசார விழுமியங்களும்...
மதிப்பீடுகளை கட்டாயமாக முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. கலாசாரம் விழுமியங்கள் தொடர்பான விவாதமே கூடாது என்றும் சொல்லிவிட முடியாது. எங்கு தேவை இருக்கிறதோ, அங்கு அது பற்றிய ஆரோக்கியமான விவாதம் தேவை.

முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு...
எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையோ உயர்வு மனப்பான்மையோ வேண்டாம். எந்த விதத்திலும் நாம் யாரைவிடவும் குறைந்தவர்கள் இல்லை. அதற்காக நாம் எல்லோரையும் விடப் பெரியவர்களும் இல்லை. முயற்சி செய்து கொண்டே இருங்கள் உங்களுக்குள் இருக்கும் கனவு நிச்சயம் நனவாகும்.
- ஜோதிலட்சுமி
படங்கள்: பி.ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com