எனக்கு நான் அழகிதான்!

நிறம் பெண்களுக்கு மிக முக்கிய விஷயமாகக் கருதப்படும் இந்தியாவில், தமிழ்நாட்டில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரம்யாவுக்கு நடந்தது என்ன... என்று தெரிந்தால் பதறிப்போவார்கள்.
எனக்கு நான் அழகிதான்!

நிறம் பெண்களுக்கு மிக முக்கிய விஷயமாகக் கருதப்படும் இந்தியாவில், தமிழ்நாட்டில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரம்யாவுக்கு நடந்தது என்ன... என்று தெரிந்தால் பதறிப்போவார்கள். "விடில்கோ' என்பது உடலின் நிறம் ஒரே மாதிரியாக அமையாமல் இருப்பது. அந்த நிற வேற்றுமை, பலரையும் அந்நியப்படுத்தும். ரம்யாவைக் கண்டதும் பெண்கள் உட்பட, பலர் விலகிச் சென்றதற்கு காரணம் இந்த நிற வேற்றுமையைப் பரிசாகத் தந்த "விடில்கோ'. ரம்யா பிறக்கும் போது அவரது நிறம் ஒன்றுபோலத்தான் இருந்தது. மருத்துவரின் தவறான சிகிச்சையால், ரம்யாவின் வாழ்க்கை பகடைக்காயாக மாறிவிட்டது. தோலின் நிறம் ஆங்காங்கே மாறி பயமுறுத்தியது. இது குறித்து ரம்யா ஜே கிரிஸ்டினா விளக்குகிறார்:
 
 "உணவில் ஒவ்வாமை எனக்கு உண்டு. அசைவ உணவு எனக்கு ஒத்துக் கொள்ளாது. முட்டையை சாப்பிட்டால் கூட உடலில் கொப்புளங்கள் வரும். இந்த ஒவ்வாமைப் பிரச்னையால் அவதிப்படும் என்னைப் பார்த்துப் பரிதவித்துப் போன அம்மா எனது மூன்றாவது வயதில் பிரபல மருத்துவர் ஒருவரிடம் கொண்டு சென்றார். அவர் மூத்த மருத்துவர். அவர் தந்த மருந்தினால் கொப்புளங்கள் வருவது நின்றுவிட்டது. ஆனால் பிரச்னையே அந்த மருந்து எடுத்துக் கொண்ட பிறகுதான் தொடங்கியது. தொடக்கத்தில் கண்களை சுற்றி வெண்ணிற படலங்கள் தோன்றின. டாக்டர் அளித்த மருந்தின் அளவு கூடிப் போனதால், தோலின் இயற்கையான நிறம் பாதிக்கப்பட்டு தோலின் நிறத்தில் மாற்றங்கள் தலை தூக்கின. சில ஆண்டுகளில் நிற மாற்றங்கள் உடல் முழுவதும் பரவிவிட்டன.
 இதனால் எனது குழந்தைப் பருவம் பள்ளி, கல்லூரி, காலங்கள் மிகவும் கசப்பாக அமைந்தன. எனக்கு தோழி என்றோ, நண்பன் என்றோ சொல்லிக் கொள்ள யாரும் அமையவில்லை. வகுப்பில் எனது அருகில் யாரும் அமரவே மாட்டார்கள். நரகத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன்.
 எனக்கு மட்டுமல்ல.. என்னுடன் பிறந்த இருவருக்கும் அம்மாதான் எல்லாம். அப்பா எனது சிறு வயதிலேயே பிரிந்து போய் விட்டார். ஒரு அம்மாவாக எனது தோல் பிரச்னைக்கு அனைத்து வகை மருத்துவமும் செலவைப் பார்க்காமல் செய்து பார்த்தார். கை மருந்து, நாட்டு மருந்து, களிம்பு இத்யாதி என்று உடலில் தேய்த்துக் கொண்டு மணிக்கணக்கில் நிற்க வேண்டும். இத்தனை மருந்துகள் உட்கொண்டும், எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
 எனக்கு இருபது வயதானபோது ஒரு முடிவெடுத்தேன். "இனி எந்த சிகிச்சையும் வேண்டாம்' என்று உறுதியாக அம்மாவிடம் சொன்னேன். பலவகை மருந்துகளை உட்கொண்டதால் பின்விளைவுகள் தோன்றி உடல் நலத்தைச் சிதைத்தன. உண்ட உணவை செரிக்கும் திறனை உள்ளுறுப்புகள் இழந்தன. வயிற்று வலியும் வர ஆரம்பித்தன. உணவு என்றாலே அச்சப்பட வேண்டிவந்தது. பசியென்று சாப்பிட்டு வைத்தால் அதற்குப் பின் வரும் அவஸ்தைகளையும் நான் அனுபவிக்க வேண்டிவந்தது.
 உறவினர்கள் கூட என்னை வர வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். நானும் அம்மாவும் சோகத்தை துயரத்தை வேதனையை அழுது அழுது தீர்ப்போம்... பஸ்ஸில் பயணிக்கும் போதும், யாரும் அருகில் அமர மாட்டார்கள். இந்த உதாசீனங்கள் என்னை அணுஅணுவாக சித்திரவதை செய்தன. இவற்றை சகித்துக் கொண்டு, வாழத்தான் வேண்டுமா என்று கூட நினைத்திருக்கிறேன். திடீரென்று எண்ணத்தில் ஒரு திருப்பம் மின்னலாகத் தோன்றி வழி காட்டியது. அவர்கள் முன் வாழ்ந்து காட்டுவோம் என்று தீர்மானித்தேன். அதன்படி எனது பாதையை மாற்றிக்கொண்டேன். "நான் இப்படித்தான்' என்று நிச்சயித்துக் கொண்டேன். எனக்காகவும், என்னைப் போல் ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் வாழ தீர்மானித்தேன். நம்பிக்கை தரும் பேச்சாளராக மாறியுள்ளேன். பலருக்கு உந்துதல் தரும், நம்பிக்கை தரும் சக்தியாக உருவெடுத்துள்ளேன். ஒப்பனை செய்து எனது நிற மாற்றத்தை மறைக்க விரும்பவில்லை. நிற வேறுபாடுகள் இருந்தாலும் எனக்கு நான் அழகிதான். விஷூவல் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பினை முடித்து விட்டு அந்தத் துறையில் உதவி இயக்குநராக மாறியிருக்கிறேன். நிச்சயம் இயக்குநராகிக் காட்டுவேன். சமூகம் என்னை வெறுக்கட்டும்... விலக்கட்டும். பதிலுக்கு நான் சமூகத்தை நேசிக்கிறேன். எல்லாவற்றையும் விட என்னை நான் அதிகமாக நேசிக்கிறேன்'' என்கிறார் ரம்யா ஜே கிரிஸ்டினா.
 - கண்ணம்மா பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com