கவனிக்கப்படாத ஆறு பெண்கள்!

சென்ற நூற்றாண்டில், தமிழ் வாசகர் கூட்டத்தைப் பெருமளவு அதிகரிக்க வைத்த பெருமை கல்கி என்கிற மாபெரும் எழுத்தாளரையே சாரும். குறிப்பாக, வரலாற்றுப் புதினங்களுக்குப் புத்துயிர் தந்தவர் கல்கி.
கவனிக்கப்படாத ஆறு பெண்கள்!

சென்ற நூற்றாண்டில், தமிழ் வாசகர் கூட்டத்தைப் பெருமளவு அதிகரிக்க வைத்த பெருமை கல்கி என்கிற மாபெரும் எழுத்தாளரையே சாரும். குறிப்பாக, வரலாற்றுப் புதினங்களுக்குப் புத்துயிர் தந்தவர் கல்கி. வீரமும், ஹாஸ்யமும், நட்பும், பாசமும் சரியான விகிதத்தில் கலந்து, படிப்பவர்களை அந்தக் காலகட்டத்திற்கே அழைத்துச் சென்று உலாவிடும் பேராற்றல் படைத்தவர்.
 அவரது மகள் ஆனந்தியும் சிறந்த கலாரசிகர் மற்றும் எழுத்தாளர். கல்கியின் மறைவுக்குப்பின், அவரது புதினங்களை மகள் ஆனந்தி எழுதி முடித்தார். இவரது மகள் கெளரி ராம் நாராயணன் பதினாறடி பாயும் கலைப்புலியாக, ஆற்றல் நிறைந்தவராய், பல ஆண்டுகளாக ஒரு சிறந்த எழுத்தாளராக வலம் வருகிறார்.
 தான் எடுத்துக் கொண்ட கருத்தை, அதன் ஆழம் வரை சென்று அலசி, அதன் முழுவீச்சும் வெளிப்படும் வகையில், எளிமையும், கருத்தாழமும் ஒருங்கே கைகோர்க்க, பல முன்னணி பத்திரிகைகளுக்கும் தினசரிக்கும் எழுதி வருகிறார்.
 சிறந்த இசைஞானமும், ஆங்கிலப் புலமையும், எழுத்தாற்றலும் நிறைந்த இவர், ஆராய்ச்சியின் அடிப்படையில் வெளியிடும் படைப்புகள், படித்து ரசித்து பாதுகாக்கப்பட வேண்டியவை.
 இவர் பன்முக ஆற்றல் நிறைந்தவர். இந்தியாவின் இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் நிழலாக, பல இசைக் கச்சேரிகளில் அவருடன் அமர்ந்து பாடும் பேறு பெற்றவர். இசையும், எழுத்தும் தன் இரு கண்களாகக் கருதி இயங்கிவந்த இவரது தெளிந்த நீரோடை போன்ற வாழ்வில், மற்றொரு பரிமாணம் பற்றிக்கொண்டது.
 ஆம் ! 1999}ஆம் ஆண்டு, கல்கியின் நூற்றாண்டு விழா, கெளரியின் மற்றொரு திறமை வெளிப்பட அடித்தளம் அமைத்தது. "காற்றினிலே வரும் கீதம்' என்ற பெயரில் ஒரு இசை நாடகத்தைத் தயாரித்து, மிகுந்த பாராட்டும் வெற்றியும் பெற்று, ஒரு நாடக இயக்குநராக உருவானார்.
 கடந்த சில ஆண்டுகளாக, பல ஒப்பற்ற தமிழ், ஆங்கில நாடகங்களை, புதுமையான கோணத்தில் சிந்தித்து, இசைக்கும் ஒரு முக்கிய இடம் கொடுத்து உருவாக்கி வருகிறார். பத்திரிகைக்காக எழுதும் பணியின்போது இந்தியாவின் பற்பல கிராம, நகர்ப்புறங்களுக்கு உதாரணமாக பிஹார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மற்றும் தென்னிந்தியாவின் பல நகரங்கள் என பயணிக்க நேர்ந்தது. இந்த அரிய வாய்ப்பினால் இவரது எண்ணங்களும், கலாசாரம், வாழ்க்கைமுறை இவை பற்றிய பார்வையும் விரிவடைந்தது. இதன் தாக்கங்கள் இவரது நாடகங்களில் வெளிப்படத் தொடங்கியது.
 "கறுப்பு குதிரை'" என்னும் நாடகத்தில், ஒரு மராட்டிய கவிஞரும், ஒரு தமிழ்ப்பெண் பத்திரிகையாளரும் அளவளாவுவது போன்று அமைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
 "இரவுகளின் முடிவு'" என்கிற நாடகத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த பழங்குடி மக்களின் பிரச்னைகளை கதகளி கலை மூலமாக வெளிப்படுத்தியிருந்தார். இசையின் மீது உள்ள தீராக் காதலினால், இசைக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பல நாடகங்கள் தயாரித்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கது "கதையோடு பாட்டு" என்ற நாடக வடிவம்.
 எம்.எஸ். ஸின் வாழ்க்கை சம்பவங்களை இடையிடையே சொல்லி, இசையோடு கதையை நகர்த்திச் செல்வது என்கிற கன்னி முயற்சிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. எனவே, தொடர்ந்து செம்மங்குடி சீனிவாஸய்யர், டி.கே.பட்டம்மாள் ஆகிய இசை விற்பன்னர்களின் வாழ்க்கை வரலாற்றையும் "கதையோடு பாட்டாக" வடிவமைத்தார். இதற்கான இசையமைப்பும் தானே செய்கிறார் கெளரி. பரதத்தின் மீது கொண்ட பற்றினால், பல நாடகங்களை நாட்டியம் கலந்தும் அமைத்திருக்கிறார்.

 புத்தரின் மனைவி யசோதரையைப் பற்றிய நாட்டிய நாடகமும் உருவாக்கினார். தவிர, நமது இதிகாசமான, ராமாயணம், மகாபாரதம் இரண்டும் இவரைப் பெரிதும் கவர்ந்தவை என்பதால், அவற்றை ஆழ்ந்து படித்து தெளிந்து அதில் தோன்றும் கதாபாத்திரங்களைப் பற்றி பல புதிய கண்ணோட்டங்கள் கிடைக்கப்பெற்றார். இதன் அடிப்படையில் பல ஆங்கில மற்றும் தமிழ் நாடகங்கள் அரங்கேற்றியிருக்கிறார்.
 துரோணர் மற்றும் அவர் மகன் அசுவத்தாமாவின் பார்வையில் குருஷேத்திரப்போர் என்னும் மையக் கருத்தில் உருவான நாடகம்தான் "ரட்ங்ழ்ங் ற்ட்ண்ய்ஞ்ள் ச்ஹப்ப் ஹல்ஹழ்ற்" என்கிற ஆங்கில நாடகம். ராமாயணத்தில் சீதையின் கதையை அவளின் ஒன்றுமறியாத குழந்தை பருவம் முதல், தானே வீராங்கனையாக அவள் மாறும் பரிணாம வளர்ச்சியை ஒரு நாட்டிய நாடகமாக "அவளும் நோக்கினாள்'" என்னும் தலைப்பில் உருவாக்கினார். இதில் கவியரசு கம்பன் உட்பட ஐந்து மொழிகளிலிருந்து பல கவிஞர்களின் படைப்புகளை பயன்படுத்தினார். இந்த படைப்புக்களினால் இயக்குநருக்கு கிடைப்பது என்ன? என்று கேட்டதும் கூறினார். "
 "நமது எண்ணத்தில் உருவான கரு, சிறந்த நடிகர்கள், பாடகர்கள், நடனமணிகள் மூலமாக உருபெறும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தம்பூராவின் சுருதியை நன்கு மீட்டி, அதனோடு இழைந்து பாடும் சுத்தமான இசை போன்ற அனுபவம் அது'' என்று மெய் மறந்து சொல்கிறார் கெளரி.
 இன்றைய இளம் கலைஞர்கள், நடிப்பவர்கள், இசை கலைஞர்கள், பாடகர்கள் இவர்கள் தன்னை வெகுவாக ஆதரிப்பது தான் தனது பலம் என்று சிலாகிக்கிறார். இந்த பன்முகத்திறமை கொண்ட கெளரி ராம்நாராயணனின் இயக்கத்தில் ஒரு புதிய படைப்பு வரும் டிசம்பர் 8}ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சென்னை கலாஷேத்திரா வளாகத்தில் அரங்கேறவிருக்கிறது. இதில், ராமாயணத்தில் வெகுவாக கவனிக்கப்படாத ஆறு பெண்கள் மந்தரை, ஊர்மிளா, சூர்ப்பனகை, மண்டோதரி, சாந்தா ( தத்துக்கொடுக்கப்பட்ட ராமரின் சகோதரி), தாரை ஆகியோரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக "ரட்ஹற் ள்ட்ங் ள்ஹண்க்’’, ("அவளது கூற்று') என்ற தலைப்பில் நடைபெறவிருக்கிறது. இந்த ஆங்கில நாடகத்தில் சுனந்தா ரகுநாதன், அகிலா ராம் நாராயண், ஆரபி வீர ராகவன் ஆகியோர் நடிக்க, அற்புதமான இசையை காட்சிகளுக்கேற்ற வகையில் இசையமைத்திருக்கின்றனர். வயலின் கலைஞர் சரேயா தேவ்நாத் மற்றும் மிருதங்கக்கலைஞர் ப்ரவீண் ஸ்பார்ஷ். இயக்குநர் கெளரியின் ஒவ்வொரு நாடகமும் ஒரு மைல் கல். ஓர் இனிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவல்லவை ! தரம் நிறைந்தவை !
 -சந்திரிகா ராஜாராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com