பேரிடர்களை ஆய்வு செய்யும் சாதனை பெண்மணி!

""நான் உயர்கல்வி முடித்தபின் அயராது அத்துறையில் உழைத்தால் மேலோங்கிச் சிறக்க முடியும் என்பது யாரும் கூறும் அறிவுரைதான்.
பேரிடர்களை ஆய்வு செய்யும் சாதனை பெண்மணி!

""நான் உயர்கல்வி முடித்தபின் அயராது அத்துறையில் உழைத்தால் மேலோங்கிச் சிறக்க முடியும் என்பது யாரும் கூறும் அறிவுரைதான். அஞ்சா நெஞ்சம் வேண்டும் என்றாரே வழிகாட்டி ஆசிரியர்! அதற்கு என்ன பொருள்? இது ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட  நிகழ்ச்சி. அப்போதெல்லாம் பட்டம் பயின்ற பின் பெண்களுக்குத் திருமணம் செய்து விடுவதே வழக்கம். அதைமீறித் தன் சொந்த மாநிலத்தை விட்டு விலகி வெகுதூரம் வந்து உயர்கல்வி பயில்வது என்பதைப் பொதுவாகப் பெற்றோர் அனுமதிக்காத காலமது. அதிலும் நான் தேர்ந்தெடுத்த துறையும் பிரபலமானதல்ல. மேலும், வகுப்பில் பயின்ற அறுவரில் நான் மட்டுமே பெண். பாடப் பிரிவு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாதது என்பதால் அச்சிடப்பட்ட பாடநூல்கள் கிடையாது. இன்றுள்ளது போல் பாடப்பொருளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளத் தக்க கணினிப் பயன்பாடும் அக்காலத்தில் கிடையாது. ஆகவே ஆசிரியர் புகட்டும் பாடங்களை அப்படியே குறிப்பெடுத்து வந்து வீட்டில் அது குறித்துச் சிந்தித்துத் தாமாகவே தெளிவு பெற வேண்டும்.

பாடப் பொருள் நில அதிர்வு, எரிமலை வெடிப்பு, சுனாமி போன்றவை தொடர்பானது என்பதால் அந்நிகழ்வுகள் பற்றித் தெளிவுற அவை நிகழ்ந்த இடங்களை ஆபத்துக் காலங்களில் பார்வையிட வேண்டும். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு ஓர் இளம்பெண் மேலோங்குவது என்பது வெகுசிலருக்கே சாத்தியம் என்பதால்தான் அஞ்சாநெஞ்சம் தேவை என்றிருக்கிறார் அந்த வழிகாட்டி ஆசிரியர்.

வாழ்வில் சாதனைகளை நினைத்துத் துணிந்து களமிறங்கிய நான் 1979 - ஆம் ஆண்டில் எம். டெக் முடித்தபின் திருவனந்தபரம் புவிசார் மையத்தில் சில காலம் பணிபுரிந்தேன். பின் முனைவர் பட்ட  ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்கா சென்று அங்குள்ள வடகரோலினா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அங்கு  எனக்கு கிடைத்த அனுபவங்களும், சிறந்த பயிற்சியும் அத்துறையில் மேலும் ஆர்வம் கொள்ளச் செய்தன. ஆய்வுக் கல்வி முடிந்து இந்தியா திரும்பி திருவனந்தபுரம் நிறுவனத்தில்  மீண்டும் பணியமர்ந்தேன். பேரிடர் காலங்களில் பணிகள் ஏராளமாகக் குவிந்துவிடும். 1993 -ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் "கில்லாரி' என்ற இடத்திலும், 1999 - ஆம் ஆண்டு இமயமலை அடிவாரத்திலுள்ள "சமோலி'யிலும், 2001 -ஆம் ஆண்டு குஜராத்திலுள்ள பூஜ் மாவட்டத்திலும் நில அதிர்வுகள் நிகழ்ந்தபோது அக்காலங்களில் அங்கே நேரில் சென்று இடிபாடுகளுக்கிடையே நுழைந்து கள ஆய்வுகளில் அச்சமின்றி ஈடுபட்டேன். அத்தகைய துறைசார் உழைப்பு எனக்குப் பெயரையும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தன. 

அதன்பிறகு, நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் வருமுன் அவை குறித்து முன்னறிவிக்க முயல்வதிலும், மக்களை விழிப்புணர்வு பெறவைப்பதிலும் நாட்டம் கொண்டேன்.  புவிசார் அறிவியலில் தேசிய விருது பெற்றவராகிய சி.பி. இராஜேந்திரனை கணவராகப் பெற்றதை  நான் பெற்ற பேறுகளில் ஒன்றாக நினைக்கிறேன். 

கணவருடன் இணைந்து பலப்பல ஆய்வுகளை நிகழ்த்தி நாற்பதுக்கும் மேற்பட்ட  ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். களப் பயணங்களையும் இருவரும் இணைந்தே மேற்கொள்வதுண்டு. நாட்டிலுள்ள பேரிடர் மையங்களின் நில அமைப்பு,  மண்ணின் தன்மை மற்றும் இயற்கைச் சூழலை ஆய்ந்து பேரிடர் நிகழ்வுக்கான காரணங்களை அறிவதும், சோதனைச் சாலையில் மாதிரி வடிவம் அமைத்து மேலாய்வில் ஈடுபடுவதும் எனது வழக்கமான பணி.   அதே போன்று  என் முடிவுகளுக்கான சான்றுகளைக் கண்டுபிடிக்காமல் ஆய்வை முடித்துக் கொள்வதில்லை. 

பேரிடர் மையங்களில் அதற்கு முன் அத்தகைய பேரிடர் நிகழ்ந்திருப்பின் இரண்டையும் ஒப்பிட்டுக் காண்பதும் ஆய்வின் ஒரு பகுதியாக இருந்தது. அப்படித்தான்  2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது தமிழகம் வந்து மாதக்கணக்கில் தங்கி ஆய்வில் ஈடுபட்டேன். ஆய்விற்காக தேர்ந்தெடுத்த இடம் நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியாகும். 

பண்டைக் காலத்தில் இப்பகுதி சோழர்களின் துறைமுகமாகச் சிறந்து நின்றதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. கடலில் வழிதவறிச் சென்ற தன் மகனைத் தேடும் முயற்சியில் தீவிர ஈடுபாடு காட்டிய சோழன், அதனால் இந்திரவிழா நடத்த மறந்ததைத் தொடர்ந்து பூம்புகார் கடல் கொள்ளப்பட்டதாக மணிமேகலை அறிவிக்கிறது. இவ்வாறு பண்டைக் காலத்தில் கடலில் மூழ்கிய துறைமுகமாக இருந்துள்ள பூம்புகார், தற்காலத்திலும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பண்டைக் கால அழிவின் சான்றுகள் கிடைத்தால் அவை எனது ஆய்வுமுடிவுகளுக்கு வலு சேர்க்கும் எனக் கருதி பூம்புகாரில் கள ஆய்வு செய்தேன்.  அதற்குக் கணவரும் துணைநின்றார்.

2004 -இல் சுனாமியின்போது எழுந்த பேரலைகள் பூம்புகார் கடற்கரையிலிருந்த ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு மணலை கடத்தி வந்து கரையில் குவித்திருந்ததை  கண்டோம். அதே வகையிலான மணல், கடற்கரைப் பகுதியின் அடி ஆழத்தில் எங்கேனும் புதையுண்டு கிடக்கிறதா என அறியப் பல இடங்களில் அகழாய்வு நடத்தினோம். சுனாமி காலப் பேரலைகள் மட்டுமே அதிக அளவில் மணலைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து நிலப்பரப்பை உயர்த்துகின்றன என்பதால் அடியில் அவ்வகை மண் படிந்திருக்கும் ஆழத்தைக் கொண்டு இதற்கு முன் சுனாமி நிகழ்ந்த காலத்தை ஒருவாறு யூகிக்கலாம் என்ற எண்ணம் காரணமாக   அவ்வகை அகழ்வில் ஆர்வம் செலுத்தினோம். அவ்வாறு ஆராய்ந்தபோது அங்கே ஒரு குறிப்பட்ட  ஆழத்தில் அவ்வகை மண் பரவி நிற்பதும் அத்துடன் சிலவகைப் பானைஓடுகள் கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பானை ஓடுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட  கால ஆராய்ச்சியின் விளைவாக ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூம்புகார் பகுதி ஆழிப் பேரலையின் தாக்கத்திற்கு ஆளாகியிருக்க முடியும் என்று கணித்துள்ளனர்.

தற்போது, இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவில் இயங்கும் ஒருசில அறிவியல் கழகங்களிலும், தொழில்சார் அமைப்புகளிலும் இணைந்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன். கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் வானிலை அறிவியல் ஆகிய துறைகளில் எனது  பங்களிப்பைப் பாராட்டி இந்த ஆண்டுக்குரிய சிறந்த இந்தியப் பெண் விஞ்ஞானி விருது  வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. 

நிலம்சார் இயற்பியல் துறையில் செய்த பெரும்பணிகள் இதற்கு முன்  இரு விருதுகளைக் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. ஆங்கிலத்தில் வெளியாகும், "அவுட்லுக்' இதழ் நாட்டின் தலைசிறந்த பத்து இளம் அறிஞர்களில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்து சிறப்பு செய்திருக்கிறது. 
என்னுடைய கணவர் ராஜேந்திரன் பிரபல மலையாள எழுத்தாளர் பாவாணனின் மகன்.   எனது மகன் ராகுல் பாவாணன் நடிகை அபிராமியை மணந்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com