என் பிருந்தாவனம்! 25 - பாரததேவி

காட்டில் மிளகாய்ப் பழம் ஓய்ந்துவிட்டது. ஒரு வாரத்திற்கு ஒரு தடவை ஆட்களை கூட்டிப்போய் பத்து மூட்டைப் பழம் எடுத்து களத்தில் முழுவதும் சிவப்பு கம்பளமாக விரித்து,
என் பிருந்தாவனம்! 25 - பாரததேவி

காட்டில் மிளகாய்ப் பழம் ஓய்ந்துவிட்டது. ஒரு வாரத்திற்கு ஒரு தடவை ஆட்களை கூட்டிப்போய் பத்து மூட்டைப் பழம் எடுத்து களத்தில் முழுவதும் சிவப்பு கம்பளமாக விரித்து, விரித்து காயப் போட்டதில் நல்ல லாபம்தான்.
 வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம்.
 "ஏய்யா, தங்கராசு வத்தலு போட்ட ரூவாயில உன் பொண்டாட்டிக்கு ஒரு மூனு பவுனும், தங்கச்சிக்கு ஆறு பவுனும் நக செஞ்சிருவோமய்யா, நீ போயி ஆசாரிய கூட்டிட்டுவா. இன்னைக்கு கடைசிப் பழம் ஒரு மூட்டை இருக்கும். அத களத்தில் போட்டமின்னா ஆடு, மாடு வாய வச்சிரும். ஆளுகளும் சத்த மில்லாம அள்ளிட்டுப் போயிருவாக'' என்றாள் சங்கரி.
 "எப்பவும் கடைசிப்பழத்த வாசல்ல காயப் போடுறதுதானம்மா வழக்கம். அப்படியே போட்டுடு'' என்றான் பாண்டி. ஒரு மூட்டை சேரும் என்று நினைத்தப் பழம் அரைமூட்டைதான் இருந்தது. மத்தியானம், பழத்தின் தலைச் சுமையோடு வந்த கமலா, வாசலில் கொண்டு வந்து தட்டினாள். பச்சை காம்புடன் துணுக்கு, துணுக்காக சிவப்பு கலரோடு பார்க்கவே அழகாகவும் , கண்ணுக்கு நிறைவாகவும் இருந்த மிளகாய் பழம், அந்த வாசலுக்கே புதிய நகை ஒன்றை வாங்கி மாட்டியது போன்று அவ்வளவு அழகாக இருந்தது.
 "ம் களத்தில பத்து மூட்டை பழம் வரைக்கும் காயப்போட்டோம், இம்புட்டுக்கு அழகா இல்ல, ஆனா இங்க ஒரு அர மூடப் பழம் கண்ணுக்கு எம்புட்டு ரஞ்சிப்பா இருக்கு'' என்று சொல்லிக் கொண்டே மிளகாய் பழத்தைக் கிண்டி விட்டாள் சங்கரி.
 உடனே தன் அறைக்குள்ளிருந்து பாய்ந்து வந்த கௌசிகா,
 "இங்கே வாசல்ல இத காயப்போடக் கூடாது'' என்று சொல்ல அதிர்ந்து போனாள் சங்கரி.
 "எதுக்குத் தாயீ இப்படி சொல்லுத அதுபாட்டுக்கு இங்கன காஞ்சிட்டுப் போவுது. இம்புட்டுக்கான பழத்தக் கொண்டு களத்தில் காய போட்டா எல்லோரும் அள்ளிட்டுப் போயிருவாக தாயீ..''
 "அதப்பத்தி எனக்கு கவலயில்ல. இங்க வாசல்ல போட்டா எனக்கு அந்த வாசன வரும். இரும்பி, இரும்பி எனக்கு நெஞ்சு வலி வரட்டுமின்னு நினைக்கிறீங்களா?'' என்று அவள் சீறியபோது தங்கராசு வந்தான்.
 கௌசிகா போட்டச் சத்தம் தெருமுனை வரை கேட்டது.
 "என்னம்மா அது, கௌசி என்ன சொல்லுதா?''
 "அது ஒண்ணுமில்லயா மிளகாப் பழத்த வாசல்ல காயப் போட வேண்டாம், எனக்குத் தொண்டை கமறும், இருமல் வருமின்னு சொல்லுதா, அவ சொல்லுதம் நாயம்தான''.
 "ஏத்தா கமலா... இந்தப் பழத்த அள்ளிக் கொண்டு போய் வடிவு வீட்டு மெத்துல காயப் போட்டுட்டுவா.. என்ன மயிலுக அம்புட்டு வத்தலயும் கொத்தி, கொதறி பாழாக்கிப் போடும்'' என்றாள் பெருமூச்சோடு..
 தங்கராசு திசையறியாத பறவையை போல் தவித்துக் கொண்டிருந்தான்.
 அன்று வியாழக்கிழமை சீனிக்கிழங்கு ( சர்க்கரை வள்ளி கிழங்கு) நடுவதற்கு சங்கரி ஆட்களை வரச் சொல்லியிருந்தாள். இரவெல்லாம் கிழங்கை நறுக்கி தயாராக வைத்திருந்தாள். நெல் நாற்று வேறு பாவ வேண்டியிருந்தது.
 ஆனால், விடிந்ததுமே சங்கராபுரத்திலிருந்து ஊர்க்காலி மாடு மேய்ப்பவன் சங்கரியின் தம்பி செத்துப் போனதாக செய்தியை சொல்லிக் கொண்டு வந்து விட்டான். தனக்கு இதுநாள் வரையிலும் துணைக்கு, துணையாயிருந்த தம்பி செத்துப் போனதில் சங்கரி உடைந்து போனாள். அழுது கத்தி கதறினாள்.
 கமலா தன் தாயோடு சேர்ந்து அழுதாள். தங்கராசுவும், பாண்டியும் தான் அவளை ஆறுதல்படுத்தினார்கள். இவர்கள் அழுவதைப் பார்த்துவிட்டு கௌசிகா ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
 தங்கராசு அவளிடம் எல்லா விவரத்தையும் சொன்னதும், "அய்யோ பாவம்ங்க, நானும் கூட வரட்டுமா?'' என்று இரக்கத்துடன் கேட்டாள்.
 அவள் கேட்டதிலேயே தங்கராசு நெகிழ்ந்து போனான்.
 "இல்ல கௌசி நான் கூட எப்படி உன்னத்தனியா விட்டுட்டுப் போறதுன்னு அம்மா கிட்ட கேட்டேன். ஆனா அம்மா முதன் முதலா கல்யாண முடிச்சவக அடுத்த ஊருக்குத் துட்டிக்கு ( இறப்புக்கு) போவக் கூடாதுன்னு சொல்லிட்டா. அதனால தேன் உன்ன கூட்டிட்டுப் போவ முடியல'' என்று தங்கராசு சொல்லவும் கௌசிகா முகம் வாடியது.
 ""நீங்க மட்டும் இருங்களேன்'' என்றாள் ஏக்கத்தோடு,
 "இல்ல கௌசி, மாமா எங்கள தூக்கி வளத்தவரு.. எத்தனையோ நேரத்தில எவ்வளவோ உதவிய எங்களுக்கு செஞ்சிருக்காரு. சொல்லப்போனா நாங்க அங்க மொத்தக்காரியமும் முடியறவரைக்கும் இருக்கணும். ஆனா நாத்துப் பாவ வேண்டிய வேல இருக்கிறதினால நானும், அம்மா எல்லோரும் நாளைக்கே வந்திருவோம்'' என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே,
 "என்னது, நாளைக்கா, அப்ப நானு இன்னைக்குத் தனியாதான் இருக்கணுமா? என்றாள் அதிர்வோடு.
 தங்கராசு மெல்ல அவளை அணைத்தான், "ஒன்னும் பயமில்ல கௌசி வீரணன் உனக்கு துணையாயிருப்பான்''
 "என்னது வீரணனா அப்ப நீங்க இனிமே எனக்கு துணையா இருக்க மாட்டீங்களா?'' என்றாள் செல்ல சிணுங்கலோடு.
 "இப்ப வெளையாட நேரமில்ல கௌசி, இந்நேரத்துக்கு நீ அக்கம், பக்கத்தில பழகியிருந்தா உனக்கு துணைக்கு நிறையப் பேரு வந்து ராத்திரி முழுக்க உன் கூடவே தங்கியிருப்பாங்க'' என்று தங்கராசு சொல்ல,
 கௌசி உடம்பை அருவெறுப்போடு குலுக்கினாள்.
 "அய்யோ எல்லாம் பட்டிக்காட்டு ஆளுங்க எனக்கு அவங்களப் பாக்கவே பிடிக்கல. அழுக்கு மனுசங்க''
 " சரி அப்ப இன்னைக்கு மட்டும் நீ தனியா இரு'' என்றவன் அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு திரும்பியபோது
 ""கொஞ்சம் இருங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னால நாத்துப் பாவுற வேலைன்னு ஏதோ சொன்னீங்களே அது என்னங்க?'' என்றாள் ஆர்வத்தோடு.
 "ஊருக்குப் போற நேரத்தில இதெல்லாம் என்ன கேள்வி?'' என்று முகம் சுருங்கியவன், "அது ஒன்னும் இல்ல ஒரே இடத்தில நெல்ல நெருக்கமா வெதச்சிட்டமின்னா அதுவும் நெருக்கமா மொளச்சிரும். பிறகு அதப்பிடுங்கி மொத்த வயல்லயும் நட்டிரலாம்'' என்றான்.
 இதற்குள் சங்கரி கூப்பிட, ""வாரேன் கௌசி பத்திரமா இரு'' என்றவன் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து காளைகளின் கயிறைப் பிடித்து அவைகளை நடக்க வைப்பதற்காக பொய்யாக சாட்டையை வீசினான்.
 தன் கணவன் ஒரே தாவலில் ஏறி வண்டியில் உட்கார்ந்ததையும் இருகாளைகளையும் தன் கைகளில் அடக்கும் கம்பீரத்தையும் கண்டு கௌசிகா மயங்கிப்போனாள்.
 சினிமாக்களில் வண்டி ஓட்டிய ஹீரோக்கள் எல்லோரும் அவள் நினைவில் வந்து போனார்கள்.
 பொழுது மேலேறிக் கொண்டிருந்தது வேலைகளை முடித்துவிட்ட வீரணன்,
 ""சின்னம்மா நான் நம்ம காடு வரைக்கும் போயிட்டு வாரேன். நீங்க பத்திரமா வீட்டுல இருங்க'' என்று புறப்பட்டபோது "இரு வீரண்ணா, நானும் கொஞ்சம் காடு வரைக்கும் வர வேண்டியிருக்கு'' என்று சொன்னதும் ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தான். வீரணன் விழிகள் இரண்டும் வெளியே விழுந்து விடுவது போல் பிதுங்கிக் கிடந்தது.
 "என்ன அப்படி பார்க்கிற வீரண்ணா? அவரு, அதான் உன் பெரிய முதலாளி என்கிட்ட ஒரு வேலையை சொல்லிட்டுப் போயிருக்காரு'' என்றதும் மயங்கி விழுவாத குறையாக தடுமாறிய வீரணன் சற்று தூரத்திலிருந்த கம்பை இறுகப் பிடித்துக் கொண்டான்.
 "என்ன தாயீ சொல்லுதீக, பெரிய முதலாளி எந்த வேலைன்னாலும் எங்கிட்டதான சொல்லிட்டு போவாரு''.
 "அப்படித்தான் போவாராம், ஆனா இன்னைக்கு அவரு மாமா செத்த துக்கத்தில போறதுனால சொல்ல மறந்துட்டா ராம்'' என்றாள்.
 ஆனால், வீரணனோ பேசும் நிலைமையில் இல்லை. அவன் கண்ணுக்குள் இருட்டு பரவுவது போலிருந்தது. அந்த வீட்டில் இருபத்தி ஐந்து வருசமாக வேலைப் பார்க்கிறவன் இது வரையில் சங்கரி அம்மாவிலிருந்து, கமலா வரையிலும் அவனிடம் யோசனை கேட்டப் பிறகுதேன் எந்த வேலையும் ஆரம்பிப்பாக. இன்னைக்கென்ன புதுசா சின்னம்மாகிட்ட சொல்லியிருக்காங்க. ஒருவேளை இனிமே இவங்கதான் எல்லாத்துக்கும் பொறுப்புன்னு சொல்லியிருப்பாரோ பெரிய முதலாளி என்று பலவாறு நினைத்து சிக்கலான சிந்தனையில் பின்னிக் கிடந்தான் வீரண்ணன்..
 - தொடரும்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com