உதாசீனங்களை கண்டுகொள்ளாதீர்கள்!

மனநலம் சார்ந்த வாசகர்களின் கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:
உதாசீனங்களை கண்டுகொள்ளாதீர்கள்!

மனநலம் சார்ந்த வாசகர்களின் கேள்விகளுக்கு மனோ தத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் அளித்த பதில்கள்:
 எனக்கு 75 வயது, என் கணவருக்கு 78 வயது. எங்களுக்கு ஒரே மகள். இந்த 78 வயதிலும் என் கணவர் உழைத்து தனியாக வாழ்கிறோம். மகள், தொழில் சூழ்நிலையால் கஷ்டப்படுகிறாள், இருந்தாலும் தன் குடும்பத்தோடு குழந்தைகள் பள்ளி அருகே வசிக்கிறார்கள். ஒரே கூட்டுக் குடும்பமாக இருந்தால் செலவும், கட்டுக்குள் வருமே. அதை புரிந்து கொள்ளவில்லையே, இன்றைய இளைய தலைமுறைகள். எப்படி புரிய வைப்பது?
 - ரேவதி சம்பத்குமார், ஈரோடு.
 
 நீங்கள் சொல்வது போன்று கூட்டுக் குடும்பமாக இருந்தால் அனைவருக்கும் நல்லதுதான். ஆனால் இப்போது இருக்கிற இளைய தலைமுறைகள் அது மகனாக இருந்தாலும் சரி, மகளாக இருந்தாலும் சரி. தனக்கென்று வீடு, குடும்பம் என தனியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனால், உங்களால் உங்கள் மகளுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை மட்டும் செய்து வாருங்கள். இதைப் புரிந்து கொண்டு உங்கள் மகளே, அனைவரும் ஒன்றாக இருக்கலாம் என்று அழைத்தால் ஒன்றாக இருங்கள். அதைவிட்டுவிட்டு அவர்கள் ஏன் நம்மை கூட வைத்துக் கொள்ளவில்லை. அனைவரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று தினம் தினம் நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் , நாளடைவில் உங்கள் மனதில் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினோம். இன்று நம்மை கூட வைத்துக் கொள்ள அவர்கள் தயங்குகிறார்களே, நம்மை உதாசீனப்படுத்துகிறார்களே என்ற எண்ணம் தோன்றும். இதுவே நாளடைவில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். அந்த எண்ணத்திற்கு இடம் கொடுக்காமல், 75 வயதானாலும், 78 வயதானாலும் இன்றும் நம்மால் நமது சொந்த உழைப்பில் நிற்க முடிகிறது. இன்றும் நம் கணவர் சம்பாதியத்தில்தான் நாம் ராணி மாதிரி வாழ்கிறோம். வேறு யார் கையையும் நாம் எதிர்பார்க்கவில்லை என்று பெருமை கொள்ள வேண்டுமே தவிர, வருத்தப்படக் கூடாது. மற்றபடி , உங்களால் முடிந்த உதவியை நீங்கள் உங்கள் மகளுக்கு செய்து கொடுங்கள். நிச்சயம் அவர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.
 ன் பெண்ணுக்கு 29 வயதாகிறது. அவருக்கு பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் என்று சென்னையில் உள்ள மன நல மருத்துவர் ஒருவர் தெரிவித்திருந்தார். இரண்டு முறை எப்படியோ கஷ்டப்பட்டு டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற வைத்தோம். இரண்டாவது முறை கொடுத்த மாத்திரைகளை டாய்லட்டில் ப்ளஷ் செய்துவிட்டாள். ஒரு கட்டத்தில் சண்டைப் போட்டு ( வேண்டுமென்றே) மாத்திரைகளை தூக்கி போட்டுவிட்டாள். 3-ஆவது முறை டாக்டரிடம் வர மறுத்துவிட்டாள். "அம்மாவாகிய எனக்கு மனநலம் சரியில்லை உன்னால், என்னுடன் துணைக்கு மருத்துவமனைக்கு வா' என்று அழைத்தபோதும் வரவில்லை. அவளை எப்படி மருத்துவரிடம் அழைத்துச் செல்வது என்று புரியாமல் கவலையாக உள்ளது. தாங்கள் தயவு செய்து இதற்கு ஒரு வழி கூறுங்கள்?
 - அகிலா
 மன நோய் இருப்பவர்களை சுலபத்தில் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியும். பெர்சனாலட்டி டிஸ் ஆர்டர் என்பது மன நோய் என்பதைவிட மன சுபாவம் என்பது தான் சரியானது. அந்த சுபாவம் உள்ளவர்கள் எப்போதுமே , நான் நன்றாகதான் இருக்கிறேன். நான் எதற்காக டாக்டரிடம் வரவேண்டும், நான் எதற்காக மாத்திரை சாப்பிட வேண்டும்? உங்களால்தான் எனக்கு இப்படி கோபம் வருகிறது. உங்களால்தான் எனக்கு பிரச்னை வருகிறது . நீங்கள்தான் நான் இப்படியிருக்க காரணம் என்று அடுத்தவர் மீது எல்லா பழியையும் போட்டுவிடுவார்கள். நான் நல்லாதான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்படி மருத்துவரிடம் வருவார்கள். வரமாட்டார்கள். இந்த பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டரை பொருத்தவரை நமது நாட்டில் மட்டுமில்லாமல், அனைத்து நாடுகளிலும் இதே பிரச்னைதான் உள்ளது. இதில் மருந்தும் ஓரளவுதான் பயன் தரும்.
 பொதுவாக மன சுபாவம் உள்ளவர்கள், நாம மாறனும் என்று அவர்களாகவே நினைத்தால் மட்டும்தான் நாம், மேற்கொண்டு சைக்கோதெரபி மூலமாக படிப்படியாக குணப்படுத்த முடியும். அதிலும், 6-8 மாதம் வரை தொடர்ந்து அவர்களிடம் பேசினால்தான் அவருடைய குணாதிசயங்களைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு அவர்கள் ஓரளவாவது நாம் செய்வது தவறு என்று உணர்ந்து நம்முடன் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் இவர்களை குணப்படுத்த முடியும். மற்றபடி இவர்களை அதை இதைச் சொல்லி ஏமாற்றி மருத்துவரிடம் அழைத்துச் சென்றாலும், அவர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்காது. அதேபோன்று இவர்கள் விஷயத்தைப் பொருத்தவரை நாளடைவில் இவர்களாக சரியாகி விடுவார்கள். அல்லது இவர்கள் ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொள்வார்கள். அப்போது இவர்களை மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் குணப்படுத்திவிடலாம். இதுதான் இவர்களை பொருத்தவரை தீர்வு.
 சந்திப்பு: ஸ்ரீதேவி
 - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com