இயற்கையைத் தேடி ஒரு பயணம்...

'கால்களுக்குப் பயிற்சி தர, வேலைநாட்களில் இரண்டிலிருந்து ஐந்து கி.மீ, வார இறுதி நாட்களில் பத்து முதல் பதினைந்து கி.மீ ஓடுவேன்
இயற்கையைத் தேடி ஒரு பயணம்...

'கால்களுக்குப் பயிற்சி தர, வேலைநாட்களில் இரண்டிலிருந்து ஐந்து கி.மீ, வார இறுதி நாட்களில் பத்து முதல் பதினைந்து கி.மீ ஓடுவேன். மேலும் தினமும் சைக்கிள் பயிற்சியும் செய்வேன். மலைஏற்றம் என்பது உடலுக்கும் மனதிற்குமான விளையாட்டு. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பருவ வயது பெண்களுக்கு மாதவிடாய் சீராக இருப்பதில்லை; இதில் நானும் விதிவிலக்கல்ல. இவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்குமென்றால் அது இயற்கையால்தான் சாத்தியமாகும்.
 ட்ரெக்கிங் செல்லத் துவங்கியது முதல் எனது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன; மாதவிடாய் கோளாறுகள் நீங்கி, எனது உடல் பாகங்கள் வலுப்பெற்றதை உணர முடிந்தது. இந்த இயந்திரமயமான உலகில் இயற்கையைத் தேடிப்போகும் பயணங்கள் தரும் இன்பத்தையும் மன அமைதியையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது'' என்று கூறும் வானதி தனியார் நிறுவன ஊழியர். இதுவரை மூன்று முறை இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்று திரும்பியவர்.
 "மனிதர்கள் மட்டும்தான் ஆண் பெண் என்ற வேறுபாடு பார்க்கிறார்கள். ஆனால், இயற்கை அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறது. ஆண்கள் மலையேற்றம் செய்வதற்கும் பெண்கள் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பெண்களுக்குப் பெரும் சிக்கலான காலம் எதுவென்றால் மாதவிடாய் நாட்கள்தான். ஆனால் நான் அதை ஒரு சாதாரண நாளாகத்தான் நினைக்கிறேன்.
 ஏனென்றால், அந்நாளை துயரமான நாளாக மனதில் பதியவைத்தால்தான் சிரமமாக இருக்கும். பெண்கள் ஆண்களைவிட ஆற்றல் குறைந்தவர்கள் என்று தொடர்ச்சியாக கூறிவருவதால்தான் சில பெண்கள் அதை உண்மை என்று ஏற்றுக் கொண்டுவிட்டனர். பயிற்சியும் பக்குவமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் மலையேற்றம் செய்யலாம். ஆண்களும் பெண்களும் கலந்த குழுக்களாக நாங்கள் மலையேற்றம் செல்லும்போது ஆண்களுக்கு இணையாகவே நானும் எல்லா இடங்களுக்கும் செல்வேன்'' என்று சொல்லும் சந்தியா உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவர், ஐ.டி யில் கிடைத்த வேலைக்கு டாட்டா சொன்னவர்.
 "மலை ஏற்றத்தை பொருத்தவரை திட்டமிடுதல் மிகவும் முக்கியம். ஆனால், அதை விட முக்கியம், நேரம் மற்றும் சூழலுக்கு ஏற்ப அதை மாற்றியமைப்பது. ஐ.டி என்றாலே மிகவும் அழுத்தம் தரக்கூடிய வேலைதான் என்பது அனைவருக்கும் தெரியும். எனது வேலையை விட்டுவிட்டுத் தனியாக இமயமலையில் ஒரு மாத பயணம் செய்து திரும்பினேன்'' என்றவரிடம், தனியாக ட்ரெக்கிங் செய்வதில் உங்களுக்குப் பயமில்லையா? என்று சந்தியாவிடம் கேட்டால், "பெண் என்ற முறையில், நம்மை ஆபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்ளச் சில அடிப்படை தற்காப்புப் பயிற்சிகள் தெரிந்தால் போதுமானது.
 பொதுவாகவே இமயமலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்னிடம் அன்பாகப் பழகினார்கள். நான் பார்த்தவரையில் அங்குப் பெண்களுக்கு நல்ல மரியாதை வழங்கப்பட்டது, குறிப்பாக தனியாக வரும் பெண்களை நன்கு வரவேற்றனர். எனக்கு ஏற்கெனவே ஹிந்தி தெரியும் என்பதால் உரையாடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நான் கேட்ட உடனேயே அங்குள்ள மக்கள் அவர்களது உள்ளூர் மொழியில் சின்ன சின்ன வார்த்தைகள் கற்றுக்கொடுத்தார்கள். அதில் ஒன்றிரண்டு வார்த்தைகளை நான் பேசுவது கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். இதனால் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்களுடன் குழுவாகவும் நான் மலையேற்றம் சென்றிருக்கிறேன்.
 ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்களை எதிர்பார்க்கமுடியாது. எல்லாருக்கும் ஒரே நேரத்தில் விடுப்பு கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எல்லாருடைய உடல் தகுதி நிலையும் ஒரே மாதிரி இருக்காது. உதாரணமாக என்னால் நாளொன்றுக்கு இருபதிலிருந்து இருபத்து இரண்டு கிலோமீட்டர் மலையேற்றம் செய்ய முடியும்'' என்றார்
 சென்னையிலிருந்து டெல்லி சென்று அங்கிருந்து சிம்லா வழியாக சங்லா சென்று, சிட்குல், ரிஷிகேஷ் என்று வட இந்தியா முழுக்க வலம் வந்துள்ளார் இந்தப் பெண்மணி.
 "பொதுவாக இயற்கையான பகுதிகளுக்குச் சென்றால், பெரும்பாலானோர் புகைப்படம் எடுப்பார்கள். எனக்கு அதில் அதிக ஆர்வம் இல்லை . ஆனாலும் பறவைகளை ரசிப்பேன். இரவில் நட்சத்திரங்களை ரசிப்பேன். மலை உச்சியில் ஏறி, ஏதாவது பாறையிலோ அல்லது அமைதியான இடத்திலோ தியானம் செய்வது என் பழக்கம். ஒரு இடத்திற்கு ட்ரெக்கிங் சென்றால், அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன்; அதோடு அந்த ஊரின் பழக்க வழக்கங்கள், வீடுகள் கட்டப்பட்டிருக்கும் முறை, அவர்களின் உணவு வகை, உடைகள் போன்றவற்றை கூர்ந்து கவனித்து, கேட்டு தெரிந்துகொள்வேன்.
 மற்ற பெண்மணிகளுக்கு நான் சொல்ல விரும்புவது, பெண்கள் தாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறிய கூட்டிற்குள் இருந்து வெளியே வந்து இவ்வுலகம் உண்மையில் எவ்வளவு பெரியது என தெரிந்துகொள்ள ட்ரெக்கிங் நிச்சயம் உதவும் என்பதைத்தான். தனியாகவும், குழுவுடனும் ட்ரெக்கிங் சென்றாலும், ஒரு சுதந்திர உணர்வு கிடைக்கும். நம்மை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள முடியும். உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கமுடியும்; ஒன்றின் மீது நமக்கு ஆர்வம் அதிகரித்தால், நமது பலவீனம் என்று நினைக்கும் ஒன்றுகூட மறந்துபோகும். எந்த நேரத்தில் எப்படிச் செயல்பட வேண்டும், எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளலாம். காலை விடிவது முதல் இரவு முடிவது வரை நீங்கள் செய்யும் செயல்களில் மாற்றத்தை காணலாம். மொத்தத்தில் உங்களது வாழ்க்கை முறையே மாறிவிடும்'' என்று நம்பிக்கையாகக் கூறும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ருத்ரா இதுவரை ஏலகிரி மலைக்குப் பலமுறை சென்றவர்.

 -வனராஜன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com