சமையல் டிப்ஸ்

தோசைக்கு அரிசி ஊற வைக்கும் போது கைப்பிடி அளவு துவரம் பருப்பு சேர்த்துக் கொண்டால், தோசை வாசனையாகவும் முறுகலாகவும் இருக்கும்.
சமையல் டிப்ஸ்

• தோசைக்கு அரிசி ஊற வைக்கும் போது கைப்பிடி அளவு துவரம் பருப்பு சேர்த்துக் கொண்டால், தோசை வாசனையாகவும் முறுகலாகவும் இருக்கும்.
• அவ்வப்போது ஃபிரஷ்ஷாக வீட்டிலேயே கொஞ்சமாக ரவாலட்டு செய்ய, நான்கு தேக்கரண்டி ரவையை வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். சற்று ஆறியதும் மிக்சியில் நைசாக பொடித்துக் கொள்ளுங்கள். அதே போன்று நான்கு தேக்கரண்டி சர்க்கரையை, இரண்டு ஏலக்காய் சேர்த்து பொடித்து காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது உருக்கிய நெய் விட்டு பிசைந்து உருண்டைகளாகப் பிடித்து பத்தே நிமிடங்களில் ரவா லட்டு செய்து விடலாம்.
• குழம்பு, சூப் செய்யும் போது நீர்த்து விட்டால், திக்காக வருவதற்கு சோளமாவு கரைத்து ஊற்றுவோம். அதற்குப் பதிலாக ஓட்ஸை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து பொடி செய்தோ அல்லது தண்ணீர் ஊற்றி அரைத்தோ குழம்பு, சூப் கொதிக்கும் போது சேர்த்துக் கொதிக்க வைத்தால் ருசியும் மாறாது. ஆரோக்கியத்திற்கும் நல்லது.
• திடீர் விருந்தினர்களுக்கான எமர்ஜென்சி பாயாசம் தயாரிக்க, மைதா மாவு, கடலை மாவு, அரிசி மாவு, கோதுமை மாவு, சத்து மாவு இவற்றில் ஏதாவது ஒரு மாவை இரண்டு தேக்கரண்டி எடுத்து நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். (சுமார் 2-3 நிமிடங்கள்) அதிலேயே இரண்டு டம்ளர் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். நான்கு தேக்கரண்டி சர்க்கரையும் அதில் சேர்க்கவும். பால் நுரைத்து வரும் போது அடுப்பை நிறுத்தி விடவும். சிவக்க வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்தால் இன்ஸ்டன்ட் பாயாசம் தயார்.
• வடைக்கு உளுந்து அரைக்கும் போதே, வேறொரு கிண்ணத்தில் அரிசியையும் ஊற வையுங்கள். (ஆழாக்கு உளுந்திற்கு ஒரு பிடி அரிசி என்ற அளவில்) உளுந்தை பாதி அரைத்ததும் அதில் ஊறிய அரிசியை போட்டு மேலும் நைசாக அரைக்கவும். வடை மொறு மொறுவென ருசியாக இருக்கும். ஆனால் தயிர் வடைக்கு அரிசி சேர்த்து அரைக்க வேண்டாம்.
• சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது முதலில் சிறிது கடலை மாவை எண்ணெய்யில் வறுத்து விட்டு கிழங்கை போட்டால் ரோஸ்ட் மொறு மொறு வென்று சுவையாக இருக்கும்.
• இட்லிக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கப் மாவைத் தனியே எடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் அல்லது பொடித்த மிளகு, கொத்துமல்லித் தழை இவற்றைச் சேர்த்துப் பிசைந்து (தேவையானால் சிறிது உப்பு சேர்த்து) போண்டா தயாரித்தால் மாலை நேர டிபன் கவலை தீர்ந்தது.
• புளித்த மோர் இருந்தால் அதில் புழுங்கல் அரிசியும், உளுத்தம் பருப்பும் ஒரு மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து உடனே தோசை வார்க்கலாம். மாவு பொங்க வேண்டிய அவசியமில்லை. தோசை ருசியாக இருக்கும்.
• அரிசி உப்புமாவை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இதனால் உப்புமா மிகுந்து விடும். இப்படி மிகுந்து விடும் உப்புமாவில் ஒரு வெங்காயத்தை நறுக்கி போடுங்கள். தேவையான அளவு முட்டை கோஸ் மற்றும் கேரட்டை துருவிப் போடுங்கள். எல்லாவற்றையும் கலந்து நன்றாக பிசைந்து சிறு சிறு வடைகளாகத் தட்டி முறுகலாகப் பொரித்து எடுங்கள். மிகவும் ருசியான இந்த வெஜிடபிள் வடை நிமிடங்களில் காலியாகிவிடும்.
எளிய சமையல் குறிப்புகள் }நூலிலிருந்து
- சி.பன்னீர்செல்வம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com