கலை கலாசாரத்தில் கோடீஸ்வரர்கள்! "பத்மஸ்ரீ' நர்த்தகி நடராஜ்

"திருநங்கை' என்ற சொல்லை உருவாக்கம் செய்தது... "கலைமாமணி' பட்டம் பெற்ற முதல் திருநங்கை ... "முனைவர்' பட்டம் வழங்கப்பெற்ற முதல் திருநங்கை... "கடவுச் சீட்டு' பெற்ற முதல் திருநங்கை...
கலை கலாசாரத்தில் கோடீஸ்வரர்கள்! "பத்மஸ்ரீ' நர்த்தகி நடராஜ்

"திருநங்கை' என்ற சொல்லை உருவாக்கம் செய்தது... "கலைமாமணி' பட்டம் பெற்ற முதல் திருநங்கை ... "முனைவர்' பட்டம் வழங்கப்பெற்ற முதல் திருநங்கை... "கடவுச் சீட்டு' பெற்ற முதல் திருநங்கை... தேசிய சங்கீத நாடக அகாதெமி விருது.. தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவு...இத்தனை சிறப்புகளைக் கொண்டிருக்கும் நர்த்தகி நடராஜின் புதிய பெருமை "பத்மஸ்ரீ' விருது கிடைத்திருப்பதுதான். அவரது பயணத்தில் அடுத்தது என்ன? நர்த்தகி நடராஜ் மனம் திறக்கிறார்:
 "வரும் மே மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறேன். அவ்வப்போது சுமார் இருபது வெளி நாடுகளுக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறேன். என்னை வெளிநாட்டு அமைப்புகள் அழைப்பது, நான் ஒரு திருநங்கை என்பதற்காகவோ, ஒரு இந்தியக் கலை மகள் என்பதற்காகவோ அல்ல. தமிழ் இலக்கியம் ஆழமாக அறிந்த.. தெரிந்த.. நாட்டிய தாரகை என்பதற்காக என்னை விரும்பி அழைக்கிறார்கள். ஆடச் சொல்கிறார்கள். பேசச் சொல்கிறார்கள்.. விளக்கத்திற்காக கேள்விகள் கேட்கிறார்கள்.
 வெளிநாடுகளுக்கு செல்லும்போது வெறும் நடன நிகழ்ச்சிகள் வழங்குவதுடன் நான் நிறுத்திக் கொள்வதில்லை. அவர்கள் இசையுடன் நம் பாரம்பரிய இசை நாட்டிய வாத்தியங்களை வாசிக்கச் செய்து இசை நிகழ்ச்சி வழங்குகிறேன். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அவர்கள் உள்மனதைத் தொடுகிறது. குறிப்பாக நார்வே நாட்டில் "ஆடுகளம்' பட நடிகரும், கவிஞருமான ஜெயபாலன் வாழ்ந்து வருகிறார். அவர் நார்வே சிம்பனியின் பாடலை தமிழில் மொழிபெயர்க்க, அவர் மனைவி வாசுகி இசை அமைக்க, நார்வே மேற்கத்திய இசைக் கருவிகளுடன் நமது மிருதங்கம், வீணை இசை கருவிகளை இசைக்கச் செய்து நிகழ்ச்சி வழங்கினேன். வாசுகி நார்வே அரசின் தமிழிசைத் துறையில் ஆசிரியராக பணிபுரிகிறார். தமிழிசையை நார்வேயில் அவர் பிரபலப்படுத்தி வருகிறார்.

 இப்படி இசை புனைவு நிகழ்ச்சிகளை வழங்கும் போதுதான், நமது கலை கலாசாரம் எத்தனை பழமையானது... மதிப்பானது என்பது தெரிய வருகிறது. கலை கலாசாரம் பொருத்தவரையில் நாம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கோடீஸ்வரர்களாக இருக்கிறோம். நமது கலைவெளிப்படல்கள் - அது சிற்பமாக இருக்கலாம்... நடனமாக இருக்கலாம்... உள்மனதிலிருந்து உணர்வுபூர்வமாக அனுபவித்து வெளிப்படுவது. வெறும் உடலால், உடல் உறுப்புகளால் இயந்திரமயமாக செய்யப்படுவதில்லை.. காட்டப்படுவதில்லை.. வெளிநாடுகளில் உடலால் ஆடுகிறார்கள். இசை வாத்தியங்கள் முழங்கினால்தான் அவர்களால் ஆட முடியும். நான் நடனிக்கும் போது என் உடல் ஆடாது. உடலால் எனக்கு ஆடத் தெரியாது. என் மனதிலிருந்து கொண்டு ஆடுவேன். நடனம் மூலம் என்னால் மெய் மறந்து மயங்கிய நிலையில் இருக்க முடியும். அண்ட வெளியில் பறக்க முடியும். கனவு காண முடியும். மனம் இப்படி நடன லாகவத்தில் குழைந்து போவதால் நடனத்தில் உடல், மன உணர்வுகளை தானே பிரதிபலிக்கிறது. இந்த நடன மூலங்கள் நமது இலக்கியங்களில் உள்ளன.
 தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் திருநங்கை குறித்த குறிப்புகள் உள்ளன. அதில் எங்களை பற்றி உயர்வாகவே எழுதியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் "திருநங்கை' என்ற பதத்தை உருவாக்கினேன். அதை தமிழக அரசும் ஏற்று அங்கீகரித்தது. வேறு எந்த மொழியிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை போன்ற ஒரு மதிப்பு கூட்டப்பட்ட, கெüரவமான பதம் கிடையாது. உடல் சார்ந்த பெயர் வைத்துதான் மூன்றாம் பாலினத்தவர்கள் கொச்சையாக அழைக்கிறார்கள். எனக்கும் ஒரு குறை உண்டு. அர்த்தநாரீஸ்வரரை வழிபடுபவர்கள்.. எங்களை ஏன் அங்கீகரிப்பதில்லை?
 எனது தோழி சக்தியின் வாழ்க்கை வரலாறு இந்த ஆண்டு பள்ளிப்படிப்பில் பாடமாக வைத்திருக்கிறார்கள். அதை படிக்கும் மாணவ மாணவியரின் திருநங்கை குறித்த கண்ணோட்டம் நிச்சயம் மாறுபடும் என்று நம்புகிறோம். மூன்றாம் பாலினத்தவருடன் கனிவாக நடந்து கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும் என நம்புகிறேன், அவர்களுக்கு உதவுவார்கள்.. ஊக்குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
 இளைய தலைமுறையிடம் நம் கலை கலாசாரத்தை கொண்டு செல்வதை குறிக்கோளாகக் கருதுகிறேன். தாராளமயமாக்களில் நாம் பல நன்மைகளை பெற்றிருக்கலாம். அதுபோல பலவற்றையும் இழந்திருக்கிறோம். மன அமைதி போய்விட்டது. மன அமைதி தேடி மலையடிவாரம், தியான வகுப்புகள், குருக்கள் ஆசிரமம் என்று எங்கெல்லாமோ போய்க் கொண்டிருக்கிறோம். நமது தாத்தா, பாட்டி இப்படி அலையவில்லை. குடும்பத்தில் பிரச்னைகள் வந்தால் அவர்களுக்குள் பேசி, சிந்தித்து மனதை பண்படுத்திக் கொண்டார்கள்.
 அன்றைய காலத்தில் முதியோர் இல்லங்கள் கிடையாது. அப்போது மனிதாபிமானம், மனித நேயம் இருந்தது. குடும்ப பந்தம் இருந்தது. இன்றைய குழந்தைகள் வறட்சியில் வளர்கின்றன. வறட்சியாக இருக்கின்றன. குழந்தைகளுக்கு விளையாட இடம் கிடையாது. விளையாட்டு என்பதே இல்லாமல் போய்விட்டது. பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் என்று தெரியாது. உறவினர்கள் யார் யார் என்று தெரியாது. இந்த உறவுகளின் முக்கியத்துவம் என்ன என்று பெற்றோர் சொல்வதில்லை. அதனால் என்ன நேர்ந்துவிடப் போகிறது என்கிறீர்களா? நாளை பெற்றோர் ஏன் தேவை என்று பிள்ளைகள் கேட்பார்கள்.
 "பெத்து வளர்த்தீங்க.. இனி உங்க அவசியம் எங்களுக்கு கிடையாது' என்பார்கள். உணர்வற்ற இயந்திரங்களாகிப் போவார்கள். குழந்தைகளைப் பண்படுத்த கலை உதவும். நடனம், ஓவியம், சிற்பம், இசை.. இவற்றை கற்க ஐம்புலன்களும் ஒரு புள்ளியில் ஐக்கியமாக வேண்டும். அப்போதுதான் அந்தக் கலையைக் கற்றுக் கொள்ள முடியும். கையாள முடியும். மனமும் மென்மையாக நயமுள்ளதாக இருக்கும். இந்தக் கலைகளில் மனித நேயங்களை சொல்ல முடியும். குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். இந்த சூழல் சமூகத்திற்குப் பாதுகாப்பாக அமையும். இனி இந்த திசையில் தான் எனது நடனப் பயணம் இருக்கும்'' என்கிறார் நர்த்தகி நடராஜ்.
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com