என் பிருந்தாவனம்!28  - பாரததேவி

"தாயீ எனக்கு இடுப்பு சுளிக்கிக்கிடுச்சி ஓரெட்டு எடுத்து வைக்க முடியல அதேன் உன்ன எடுக்கச் சொன்னேன்''.
என் பிருந்தாவனம்!28  - பாரததேவி

"தாயீ எனக்கு இடுப்பு சுளிக்கிக்கிடுச்சி ஓரெட்டு எடுத்து வைக்க முடியல அதேன் உன்ன எடுக்கச் சொன்னேன்''.
 "எச்சி இலையை எடுக்கிற பழக்கம் எனக்கு இல்லை''.
 "சரி தாயீ எச்சி எலய எடுக்க வேண்டாம். தெருவில யாராவது ஒரு சின்னப்புள்ள போனாக் கூட நானு கூப்பிட்டேன்னு கூப்புடு. சுளுக்கெடுக்கவ இந்த ஊர்ல இருக்கா அவள வரச் சொல்லுவோம்'' என்ற சங்கரியின் குரல் கெஞ்சியது.
 "இந்த ஊருக்குள்ள யாரையும் கூப்பிட்டு எனக்குப் பழக்கமில்ல'' என்ற கௌசிகா திரும்பவும் தன் அறை நோக்கி நடந்தாள்.
 சங்கரிக்கு வலி பொறுக்க முடியவில்லை. மெல்ல எட்டு வைத்து வாசலை நோக்கி நகர முயன்றாள். வலி அவள் இடுப்பை ஊசி கொண்டு இறக்கினாற் போல் தாக்கியது. வீட்டிற்கும், வாசலுக்கும் ஒரு நாளைக்கு நூறு தடவை நடப்பவளுக்கு, ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.
 எக்கா, சங்கரி என்று கூப்பிட்டவாறே ஒரு நாளைக்கு பத்து பேருக்கு மேல் தேடி வருகிறவர்களுக்கெல்லாம் இப்போது என்ன வந்தது? அவளுக்கு கோபமாய் வந்தது. அதே சமயம் அவங்கௌல்லாம் நானு பிஞ்சைக்கு நடுவ நடப் போறேன்னுல்ல நெனச்சிருப்பாக, அவுகள குத்தம் சொல்லி என்ன செய்ய என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.
 மெல்ல பல்லைக் கடித்துக் கொண்டு ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்தாள். இடுப்பில் வலி பொறுக்க முடியவில்லை. எப்படியோ வாசல் வரைக்கும் வந்துவிட்டாள்.
 தூரத்தில் கண்ணம்மாவின் மகள் அகிலா குடம் கொண்டு வருவது தெரிந்தது. அவளைப் பார்த்ததும் சங்கரிக்கு கண்ணில் உயிர் வெளிச்சம் வந்தது.
 "தாயீ அகிலா, அகிலா'' என்று கூப்பிடவும்,
 "என்னத்த..'' என்று கேட்டுக் கொண்டே ஓடிவந்தாள் அகிலா.
 அவளைக் கண்டதும் தன் துன்பம் தீர்க்க வந்த கடவுளைப் போல் தோன்றியது சங்கரிக்கு . அதோடு அவளை வாரி அணைத்து இரு கன்னத்திலும் முத்தம் கொடுக்க வேண்டுமென்ற ஆசையும் கூட. ஆனால் இடுப்பை வலி மென்று கொண்டிருக்கும்போது கெஞ்சத்தான் வேண்டியிருக்கிறது.
 "அத்தைக்கு இடுப்பு சுளுக்கிருச்சி ஆண்டத்தக்காதேன் நல்லா சுளுக்கு எடுத்து விடுவா அவளப் போயி கூட்டிட்டுவாரயா? அவ இல்லாட்டி அங்கனக்குள்ள இருக்க மாமா, அத்தை, தாத்தான்னு யாரு இருந்தாலும் சங்கரி அத்த கூப்பிட்டான்னு கூட்டிட்டு வா'' என்று அனுப்பிவைத்தாள்.
 அந்த இடத்தைவிட்டு சங்கரியால் நகரவே முடியவில்லை. இவள் கண்ணுக்கெதிரிலேயே தெருநாய் ஒன்று திறந்திருந்த வீட்டிற்குள் போய் வந்தது. இரண்டு சேவல்களும், நாலைந்து கோழிகளும் வீட்டின் உள் திண்ணையில் கொக்கரித்துக் கொண்டு ரொம்ப தெம்பாக அலைந்தன. வீட்டிற்குள் போய்விட்டால் அவ்வளவுதான் சாப்பிட்ட இலைகளை கொத்திக் கொதறி வீடு முழுக்க நாசமாக்கிவிடும். இவளால் சத்தம் கொடுத்து அவைகளை விரட்டவும் முடியவில்லை. உயிர் போய்விடும் வலியோடு அப்படியே நின்று கொண்டிருந்தாள். தூரத்தில் அகிலாவோடு ஆண்டத்தக்கா வருவது தெரிந்தது.
 "என்ன சங்கரி இன்னைக்கு உன் பிஞ்சையில நடுவன்னு பத்து பேருக்கு மேல நிக்காக நீ அங்க போவாம, இங்க இருக்கே இடுப்பில வேற சுளுக்கிக்கிடுச்சாமில்ல எப்படி சுளுக்கிச்சி'' என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.
 சங்கரிக்கு இடுப்பு வலியையும், வீட்டுக்கு வந்த மருமகளையும் நினைத்து தொண்டைக்குள் அழுகை தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அதையெல்லாம் அடக்கிக் கொண்டு, காலை நேரம் விருந்தாளிகள் வந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு,
 "எக்கா இந்த படியில ஏறி திரும்பி அந்தா அங்கன இருக்க கோழியத்தேன் முடுக்குனேன். அம்புட்டுத்தேன் இடுப்புல மளுக்குன்னு ஒரு சத்தம். அந்த மான இங்கிட்டு, அங்கிட்டு திரும்ப முடியல. ஒரு எட்டு எடுத்து வைக்க முடியல. அதேன் உன்ன வரச் சொன்னேன். அதுவும் கூட நீ வேலைக்குப் போயிருப்பயோ. அப்படி போயிருந்தேன்னா அது எந்தப் பிஞ்சைன்னு விசாரிச்சி ஆளனுப்புவோமின்னு நெனைச்சிக்கிட்டுருந்தேன். நல்ல வேள மவராசி நீ வந்துட்டே சீக்கிரம் எனக்கு சுளுக்கு எடுத்து விடுக்கா வலி தாங்க முடியல'' என்றாள் சங்கரி.
 "என் ஆடு இன்னைக்கு குட்டி போட்டுருச்சி அதேன், நான் வேலைக்குப் போவல, சரி விளக்கெண்ண எங்க இருக்கு?'' என்று கேட்டுக் கொண்டே உள்ளே போனாள் ஆண்டத்தாக்கா.
 " அடுப்புமேட்டுல ஈசான மூலையில இருக்கு'' என்றாள் சங்கரி.
 வீட்டிற்குள்ளிருந்த விளக்கெண்ணெய் சீசாவை எடுத்துக் கொண்டு வந்தவள், "விருந்தாளிக சாப்பிட்ட எலய எடுக்காமயா அவுகள வழி அனுப்ப வந்த -எச்சிஎலய எடுக்காட்டா எழப்பு( இழப்பு) வந்து சேருமின்னு சொல்லுவாகளே'' என்றதும் சங்கரிக்கு திக்கென்றது.
 இதுவேற என் தலயெழுத்தா என்று நினைத்தவள், "என் வீட்டுக்கு வந்த மருமவளோடவா எனக்கு எழப்பு வந்து சேரப்போவுது ?'' என்று தனக்குள்ளாகவே எண்ணிக் கொண்டாள்.
 ஆண்டத்தக்கா அங்கேயிருந்த இலைகளை எடுத்து கொல்லையில் வீசிவிட்டு விளக்கெண்ணெய்யோடு வந்தாள்.
 உள்ளே அழைத்து வந்து சங்கரியின் இடுப்புச் சேலை நகட்டிவிட்டு எங்கன சுளுக்குச்சி என்று சுளுக்கிய இடத்தைத் தொட்டவள் கையில் எண்ணெய்யோடு வழிச்சிவிட ஆரம்பித்தாள். சங்கரிக்கு வலி உயிர் போயிற்று.
 "அய்யய்யோ ஆத்தா, அய்யா' என்று அழுவ வேண்டுமென்றுதான் இருந்தது. ஆனால் சுளுக்கெடுக்கதுக்கெல்லாம் அழுதால் ஊருக்குள் சிரிப்பார்களே என்று,
 " எக்கா எக்கா வலி உசுரு போவுது. கைய எடுத்திடு எனக்கு சுளுக்கு எடுக்க வேண்டாம்'' என்று அலைமோதிக் கொண்டு வந்தாள்.
 ஆனால் ஆண்டத்தக்கா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. சுளுக்கிக் கொண்டவர்கள் எல்லாம் சுளுக்கை எடுக்கும்போது இப்படித்தான் வலியில் கத்துவார்கள். ஆனால் அவள் அதைக் கண்டு கொள்வதில்லை. கதற, கதறத்தான் பிடித்த சுளுக்கை எடுக்க முடியும். இவர்கள் அழுகிறார்களே என்று பூவோ, பொன்னோ, என்று அவர்களைத் தொட்டுக் கொண்டிருந்தாள் சுளுக்கை எடுக்க முடியாது. அதனால் சங்கரி துடிக்க, துடிக்க சுளுக்கை எடுத்து முடித்ததோடு அதற்கு மருந்தாக துணிப்பத்தையும் போட்டுவிட்டாள். மெல்ல அவளைக் கூட்டிக் கொண்டு போய்படுக்க வைத்தாள். பிறகு எண்ணெய்ச் சீசாவைக் கொண்டு போய் அதன் இடத்தில் வைத்தவள், அங்கே இருந்த விளக்கமாறை எடுத்து வீட்டை நன்றாகப் பெருக்கினாள்.
 "சரி சங்கரி, இன்னும் கொஞ்ச நேரத்துக்கு உனக்கு வலிக்கத்தேன் செய்யும். நீ சத்தோடம்படுத்து உறங்கு வேலை செய்தேன்னு இடுப்ப அசைக்காதே, நானு பொழுதூர வாரேன்'' என்று சொல்லிவிட்டு கதவை அடைத்துவிட்டுப் போனாள்.
 இப்போது சங்கரிக்கு வலி சற்றே நின்றிருக்க உறக்கமே வரவில்லை. எழுந்து சுவரோடு சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
 கண்ணீரை உள்ளடக்கி அழுததில் முகம் சற்றே வீங்கியிருந்தது. மருமகளை நினைக்க, நினைக்க மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று பயமாயிருந்தது. உள்ளக் கொதிப்பில் உள்ளம் நடுக்கியது சோர்வோடு உடல் துவண்டுக் கிடந்தாள்.
 டவுனுக்கு உரம் வாங்கப் போயிருந்த தங்கராசு வீட்டிற்குள் வந்தவன், அம்மாவைப் பார்த்து சற்றே அதிர்ந்துதான் போனான். எப்போதும் சிரித்த முகத்தோடு, எந்த நேரமும் சுறு, சுறுப்பாக காட்டு வேலைகளையும், வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவா இப்படி பழைய துணியாக மூலையில் சுருண்டு கிடக்கிறாள். திடுக்கிட்டுப் போனவனாக, "அம்மா... அம்மா'' என்று கூப்பிட்டபடி சங்கரியின் அருகில் சென்றான் தங்கராசு.
 - தொடரும்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com