கல்விக் "கண்' திறப்பவர்!

கண்ணொளி இழந்த அதிகமான ஆசிரியர்கள் இன்று கல்விக்கண் திறந்து கொண்டிருக்கிறார்கள்.
கல்விக் "கண்' திறப்பவர்!

கண்ணொளி இழந்த அதிகமான ஆசிரியர்கள் இன்று கல்விக்கண் திறந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓர் ஆசிரியைத் தான் கே.ராதாபாய். இவருடைய பேச்சை எதிர்பாராதவிதமாக புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் கேட்க முடிந்தது. பேச்சு எல்லோரையும் தன்கைக்குள் கட்டிப்போட்ட ஒரு உணர்வு. அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டவை:
"என்னுடைய சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி. இந்த ஊரைப் பொருத்தவரைக்கும் பெண் சிசு கொலைக்கு பெயர் போன ஊராகும். 1960 -ஆம் ஆண்டு நான் பிறந்தேன்; பிறக்கும்போதே ரெட்டினைட்டீஸ் பிக்மண்டோஸா என்ற நோயுடனே பிறந்தேன். இந்த நோயைப் பொருத்தவரைக்கும் லட்சத்துல ஒருத்தருக்குத்தான் இது வருமாம். படிப்படியாய் பார்வையை இழக்கச் செய்கிற நோய். வளர, வளர ஒளி குறைந்து கொண்டே போகும். ஆனாலும் என்னுடைய பெற்றோர் கள்ளிப்பாலை புகட்டி என்னை சிசுக்கொலை செய்யாமல் வளர்த்தார்கள். என்னுடைய பாட்டி படிக்கவில்லை, என்னுடைய தாயார் வெறும் 5-ஆம்வகுப்பு வரை தான் படித்தார். ஆனாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இதற்கு அடித்தளமிட்டவர் என்னுடைய தந்தை. அவருக்கு என்மேல் தனிப்பிரியம். எப்படியும் நீ சாதித்துவிடுவாய் என்று எனக்கு நம்பிக்கையூட்டினார். 
மூன்றாம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளியில் தான் படித்தேன். அதன் பிறகு தான் சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில் படிப்பை தொடங்கினேன். பிரெய்லி புத்தகங்கள், டெய்லர் ஃபிரேம்னு சொல்லப்படுகிற சிலேட்டு எல்லாம் எனக்குள்ளே மிகப்பெரிய ஒரு சுதந்திர உணர்வை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக 1977-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் 71சதவீதம் வாங்கி பள்ளியின் முதலிடத்தைப் பிடித்தேன். இதனைத் தொடர்ந்து 1979-ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் பி.யூ.சி(வரலாறு) படித்தேன். அதில் 58 சதவீதம் வாங்கி தேர்ச்சிப் பெற்றேன். மீண்டும் அதே கல்லூரியில் பி.ஏ.வரலாறு, எம்.ஏ.வரலாறு.அப்போது பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தேன். 
நீங்கள் வாங்கிய விருதுகள்? 
1988-ஆம் ஆண்டு மும்பை தேசிய பார்வையற்றோர் சங்கத்தால் சிறந்த பெண்மணி விருது, அதே ஆண்டுகளில் திருச்சி ஜேசீஸ் கிளப் சார்பில் சிறந்த இளைஞர் விருது, மெட்ராஸ் வெஸ்ட் ரோட்டரி கிளப் சார்பில் சிறந்த இளைஞர் விருது, 1992-ஆம் ஆண்டில் திருச்சி அண்ணா நகர் மகளிர் மன்றம் சார்பில் சிறந்த பெண் விருது, 1993-ஆம் ஆண்டில் திருச்சியின் சர்வதேச கலாசார கூட்டமைப்பு சார்பில் சிறந்த பெண்மணி விருது, 2003-இல் புதுக்கோட்டை கலைமான் அப்துல் காதர் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் சிறந்த சமூக சேவைகளுக்கான அன்னை தெரசா நினைவு விருது, அதே ஆண்டில் புதுக்கோட்டை இலக்கிய பேரவை சார்பில் கருத்தொளிச்செம்மல் விருது, 2004-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மகளிர் திட்டம் சார்பில் சிறந்த பெண் விருது, 2005-ஆம் ஆண்டில் சென்னை ஸ்கேன் அறக்கட்டளை சார்பில் புதுமை ஆசிரியர் விருது, 2006-இல் புதுக்கோட்டை கவிராசன் நற்பணி மன்றத்தால் சிறந்த ஆசிரியர் விருது, 2009-இல் புதுக்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் 2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த கல்லூரி பேராசிரியர் விருது, அதே ஆண்டில் தமிழக சிறந்த பணியாளர் விருது இது போன்ற பல விருதுகள் வாங்கியுள்ளேன். இப்போதும் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய பணி குறித்து? 
1987முதல் 1992வரை திருச்சியில் உள்ள பார்வையற்ற பெண்களுக்கான மறுவாழ்வு மையத்தில் ஆலோசகராக பணியாற்றினேன். 1992 முதல் 1994-ஆம் ஆண்டு வரை கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கல்வியி யலில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். 1994-ஆம் ஆண்டு முதல் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை பாடப்பிரிவுக்கு விரிவுரையாளராக பணியில் சேர்ந்தேன். அதன் தொடர்ச்சியாக அத்துறைக்கு துறைத் தலைவராகவும், இணைப் பேராசிரியையாகவும் பணியில் இருந்தேன். கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி அக்கல்லூரிலேயே இருந்து ஒய்வுப் பெற்றேன். ஓய்வுப் பெற்றாலும் என்னுடைய கல்விப் பயணத்தை விடவில்லை தற்போது தஞ்சாவூரில் உள்ள ஒரு சுயநிதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் பணியில் இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது மற்ற பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பேச்சுகளை பேசி ஊக்கப்படுத்தி வருகிறேன்'' என்றார். 
- பொ.ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com