சித்திரம் பேசுதடி!

மனித மனம் விசித்திரமானது. எந்த நேரத்தில் எதன் மீது காதல் கொள்ளும் என்று கணித்துக் கூற முடியாது. அறிவியல் கற்றுக்கொண்டிருந்த பெண்ணுக்கு கலையின் மீது குறிப்பாக ஓவியத்தின் மீது காதல் ஏற்பட்டிருக்கிறது
சித்திரம் பேசுதடி!

மனித மனம் விசித்திரமானது. எந்த நேரத்தில் எதன் மீது காதல் கொள்ளும் என்று கணித்துக் கூற முடியாது. அறிவியல் கற்றுக்கொண்டிருந்த பெண்ணுக்கு கலையின் மீது குறிப்பாக ஓவியத்தின் மீது காதல் ஏற்பட்டிருக்கிறது. சிறுவயதில் பள்ளிநாட்களில் வாசித்த வரலாற்றுப் புதினங்கள் அவருக்குள் பெரும் ரசாயன மாற்றங்களைச் செய்து இருக்கின்றன. ஓவியத்தை முறைப்படி கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் ஓவியம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்று நம்புகிறார். இன்று "ஈ-புக்' உலகில் சித்திரங்கள் வரைந்து பெயர் பெற்றிருக்கிறார். தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இணைய ஓவியக் கலைஞரான சம்யுக்தா.
 உங்களுடைய குடும்பம் பற்றி சொல்லுங்கள்?
 கம்பர் பிறந்த திருவழுந்தூர் எனக்கு சொந்த ஊர். எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். விவசாயக் குடும்பத்தின் அத்தனை சிரமங்களையும் சந்தோஷங்களையும் அனுபவித்திருக்கிறேன். அப்பா வெங்கடேஷ் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து என்னை உருவாக்கியவர். நல்ல விவசாயி. அம்மா அமுதவல்லி இல்லத்தரசி. எளிய குடும்பம் மகிழ்ச்சியான வாழ்க்கை. மயிலாடுதுறையில் என்னுடைய பள்ளி கல்லூரிப் படிப்புகளை முடித்தேன். பயோ டெக்னாலஜியில் முதுநிலை கல்வி பயின்றேன். குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி. கல்வி எங்களை அடுத்த தளத்திற்கு நகர்த்தும் என்ற நம்பிக்கையோடு படித்தேன். முதுநிலை கல்வியில் தங்கப் பதக்கமும் பெற்றிருக்கிறேன். மேற்படிப்புக்காக சிங்கப்பூர் செல்ல விரும்பினேன் ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்று படிக்க இயலவில்லை.
 ஓவியத்தில் ஈடுபாடு தோன்றியது எப்படி?
 நிறைய புத்தகங்களை வாசிக்க எங்கள் சித்தப்பா பழக்கினார். சிறுவயதில் வரலாற்று நாவல்களைப் படிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எங்கள் ஊரில் பொது நூலகத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் நிறைய நாவல்களை வாசித்திருக்கிறேன். அப்போது எனக்குள் தோன்றும் பிம்பங்களை வரைந்து பார்க்க முயன்றேன். மற்றபடி ஓவியத்தை முறைப்படி கற்கவும் இல்லை. பயிற்சியும் இல்லை. ஆர்வம் மட்டுமே இருந்தது. மனதில் தோன்றிய உருவத்தைக் கையில் கிடைக்கும் காகிதங்களில் வரைந்து பார்ப்பது வழக்கமாக இருந்தது. இணையத்தில் "பொன்னியின் செல்வன்' குழு ஒன்றைப் பார்த்தவுடன் அதில் என்னையும் இணைத்துக் கொண்டேன். அந்த அளவுக்குப் "பொன்னியின் செல்வன்' நாவல் மீது எனக்குப் பைத்தியம் என்றே சொல்லலாம். அதிலே நான் கற்பனை செய்த "பொன்னியின் செல்வன்' காட்சிகளை வரைந்து பதிவிட்டேன். என்னுடைய முதல் முயற்சி இப்படித்தான் ஆரம்பமாகியது.
 ஓவியராக இணையம் உங்களை எப்படி வரவேற்றது?
 மிகுந்த மன உளைச்சல் ஏற்படும் அளவுக்கு எதிர்மறை கருத்துக்கள் வந்து குவிந்தன. சிலர் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு மிரட்டவும் செய்திருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை வரைவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று திட்டியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் மனதில் அந்தக் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன என்று அதனை நல்லமுறையில் எடுத்துக்கொண்டேன். அதே நேரத்தில் என்னுடைய கற்பனைகளை விட்டு விடவும் விருப்பம் இல்லை. மீண்டும் மீண்டும் அந்த நாவலில் இடம்பெறும் காட்சிகளை கதாபாத்திரங்களை வரைந்து கொண்டே இருந்தேன். ஒரு சில ஆண்டுகளில் என்னுடைய ஓவியங்களையும் சிலர் ரசித்து நல்லமுறையில் கருத்துகளைப் பதிவிட்டதில் இன்னும் நிறைய வரையத் தொடங்கினேன்.
 இணையத்தில் சுவாரஸ்யமான அனுபவங்கள்?
 முகநூலில் பொன்னியின் செல்வன் குழுவில் தான் என்னிடம் இருந்த நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. வரலாறு தொடர்பான பல்வேறு செய்திகளையும் அதில் தான் கற்றுக்கொண்டேன். கல்வெட்டு சார்ந்த செய்திகள், ஓவியர்கள் தரும் தகவல்கள் என்று சில ஆண்டுகளுக்குள் நான் இணையம் சமூக வலைதளங்கள் வழியாகக் கற்றுக் கொண்டிருக்கும் செய்திகள் ஏராளம். என்னுடைய முதல் வாய்ப்பும் இதையே தொழிலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இணையம் எனக்கு ஏற்படுத்தியது. நட்பு வட்டத்தில் என்னுடைய ஓவியத்தைப் பகிர்ந்த தோழியின் வழியாகவே புதிய நாவலுக்கு வரைய வாய்ப்புக் கிடைத்தது. எங்கோ முகம் தெரியாத நண்பர்கள் வழியாக நாம் பெறும் தகவல்களும் வாய்ப்புகளும் ஆச்சரியப்படுத்துகின்றன. எதுவுமே நேர்மறையாக அணுகும் வரை நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகின்றன.
 - ஜோதிலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com