இந்திய வீர மங்கைகள்!

இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனைகள் குறித்த பட்டியல் தயாரித்தால் மிக நீளும். அவற்றில் சிலரைப் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
இந்திய வீர மங்கைகள்!

இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனைகள் குறித்த பட்டியல் தயாரித்தால் மிக நீளும். அவற்றில் சிலரைப் பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
 இந்தப் பட்டியலின் தொடக்கம் 1857. வீராங்கனைகளில் குறிப்பிடத்தக்கவர்களில் ராணி லட்சுமி பாயும் ஒருவர். ஜான்சிராணி என்ற பெயரிலும் அழைக்கப்படுபவர். இவரது இயற்பெயர் மணிகர்ணிகா.
 1835 -இல் பிறந்தார். தனது ஏழாம் வயதிலேயே ஜான்சியின் மகாராணியானார். ராஜ கங்காதர் ராவ் மன்னரை திருமணம் செய்தபின் (1842) மணிகர்ணிகா, லட்சுமிபாய் என்று அழைக்கப்பட்டார். 1857-இல் மீரட்டில் சிப்பாய் கலகம் மூண்டபோது லட்சுமிபாய் ஜான்சியின் ரீஜென்டாக மகுடம் சூட்டப்பட்டார். டல்ஹெளசி பிரபுவின் தத்து உரிமை ரத்து சட்டப்படி, 6000 ரூபாய் வருட பென்ஷன் வழங்கி, ஜான்சியின் உரிமையை பிரிட்டிஷாருக்கு ராணி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார். தத்து உரிமை ரத்து சட்டத்தை மீறியதை அடுத்து 1858 -இல் பிரிட்டிஷாருடன் போர் . வீரத்துடன் போராடி , தனது 23 - ஆம் வயதில் வீர மரணம் அடைந்தார் ராணி லட்சுமிபாய்.
 துர்காவதி

சாந்தேல் பகுதியின் இளவரசி, மன்னர் கிராதி சிங்கின் மகள். கோண்ட் இளவரசன் தளபதி சிங்கை திருமணம் செய்ததோடு கோண்ட்வானா மகாராணியானார். 1548- இல் தளபதி சிங்கின் மரணத்தை அடுத்து கோண்ட்வானா நாட்டின் ஆட்சியாளர் ஆனார். மொகலாய தளபதி ஆஸப் கானுடனான மோதலில் 1564 -இல் கொல்லப்பட்டார்.
 ருத்ரம்மா

காகதீய அரச பரம்பரையின் ஒரே பெண் ஆட்சியாளர். காகதீய ராஜ வம்சத்தின் முதல் சுதந்திர ஆட்சியாளர் ஒன்றாம் பிரதாப ருத்ரன். பிரதாப ருத்ரனின் மகனான கணபதியின் இரண்டு மகள்களில் ஒருவரே ருத்ரம்மா. (ஆந்திரா) வாரங்கல் இவர்களது தலைநகரம்.
 சாந்த் பீபி

தக்காண ராஜ வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்த அகமதாநகரின் ராஜகுமாரி. 1580-இல் அலி அதில்ஷா பீஜப்பூரில் கொல்லப்பட்டபோது, தனது ஒன்பது வயது மகனுக்காக ஆட்சிப் பொறுப்பேற்றவர் சாந்த் பீபி.
 ஒனெக் ஒபாவ்வா

கன்னட பெண்மை மற்றும் வீரத்தின் அடையாளமாக கருதப்படும் பெண்மணி. எதிரிகளை உலக்கையால் அடித்து அழித்ததாலேயே இவர் "ஒனெக்' ஒபாவ்வா என்று அழைக்கப்படுகிறார். சித்ரதுர்கா கோட்டை காவலாளியின் மனைவி. 1772 -இல் ஹைதர் அலியின் படைகள் சித்ரதுர்கா கோட்டையை கைப்பற்ற முயன்றபோது, ஒபாவ்வா தனது கையில் இருந்த உலக்கையால் அவர்களை நிர்மூலமாக்கினார்.
 எனினும் இறுதியில் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் "வீரப்பெண்மணி "ஒனெக்' ஒபாவ்வா மைதானம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
 வீர மங்கை வேலுநாச்சியார்

தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடிய முதல் வீரப்பெண்மணி. "கொரில்லா' போர்முறையை முதன்முதலாக சோதித்துப் பார்த்தவர். தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று சிறப்பிக்கப்பட்டவர். 18-ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணி.
 அப்பாக்கா

 துளு நாடு என்னும் குறுநில நாட்டின் மகாராணி. அம்பெய்வதிலும், வாள் வீச்சிலும் அபார நிபுணத்துவம் பெற்றவர். நேத்ராவதி, குருபுரா என்னும் இரு நதிகள் சங்கமிக்கும் பகுதியில் அமைந்தது "உல்லால்' கோட்டை. போர்த்துக்கீசியர்கள் இக்கோட்டையை கைப்பற்ற செய்த முயற்சியை அப்பக்கா முறியடித்தார். 1525 -இல் போர்த்துக்கீசியர்கள் தெற்கு கனாரவுக்குள் அத்துமீறி நுழைந்து, மங்களூரு கோட்டையை தகர்த்தனர். போர்த்துக்கீசியர்களுக்கு கப்பம் கட்ட மறுத்த அப்பாக்கா, அவர்களை எதிர்த்து போராடினார். சிறையில் அடைக்கப்பட்ட அப்பாக்கா அங்கு ஏற்பட்ட புரட்சியில் வீர மரணம் அடைந்தார். கர்நாடக நாட்டுப்புற பாடல்களிலும், யஷகானத்திலும் அப்பாக்காவின் பெயர் இன்னும் நிலவி வருகிறது.
 கேலாடி சென்னம்மா

 கர்நாடக மலைப்பகுதியின் கேலாடியின் மகாராணி. 12 ஆண்டுகள் சென்னம்மா கேலாடியை ஆண்டு வந்தார். இவரது மரணத்துக்குப் பின் தத்துப்புத்திரன் பாஸவ நாயக் ஆட்சிப் பொறுப்பேற்றார். பாஸவபுரத்தின் கோட்டைக்கு தனது தாய் சென்னம்மாவின் நினைவாக "சென்னம்மா கிரி' என்று பெயர் சூட்டினார்.
 கிட்டூர் ராணி செல்லம்மா

 ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான புரட்சிக்கு 1824-இல் தலைமை தாங்கிய வீரப்பெண். கர்நாடகத்தின் கிட்டூர் பகுதி மகாராணி. தனது ஒரே மகனின் மரணத்துக்குப்பின் 1824-இல் சிவலிங்கப்பாவை தத்து புத்திரனாக வரித்துக் கொண்டதை, பிரிட்டிஷார் அங்கீகரிக்காததைத் தொடர்ந்து போர் மூண்டது. சிறையிலேயே காலமானார். ராணியின் வீர வரலாற்றினை கர்நாடக நாடோடி பாடல் வடிவங்களான பல்லட, லாவணி போன்றவற்றில் காணலாம்.
 தொகுப்பு: கோட்டாறு ஆ.கோலப்பன்,
 நாகர்கோவில்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com