கல்வி... கலை... வாழ்க்கை!

நம் இந்தியாவின் தொன்மை, இந்தியர்களின் மேன்மை, நமது வேதங்கள் சொல்லித் தந்த விஷயங்களை வளரும் இளம் சந்ததியினருக்கு சொல்லித் தரவேண்டும் என்ற அவா. அதை செயலிலும் காட்டினார்
கல்வி... கலை... வாழ்க்கை!

நம் இந்தியாவின் தொன்மை, இந்தியர்களின் மேன்மை, நமது வேதங்கள் சொல்லித் தந்த விஷயங்களை வளரும் இளம் சந்ததியினருக்கு சொல்லித் தரவேண்டும் என்ற அவா. அதை செயலிலும் காட்டினார் திருமதி ஒய்.ஜி.பி அவர் வைணவ குடும்பத்தில் பிறந்தவர் அன்று பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். அந்த காலத்தில் அவருடன் படித்த குழுவில் அவர் ஒருவர்தான் மேற்படிப்பிற்கு முன்னேறியவர். இன்னும் சொல்லப்போனால் அவரது குடும்பத்தில் அவர் ஒருவர்தான் முதல் பெண் பட்டதாரி.
 அவர் சரித்திரத்திலும், பத்திரிகை துறையிலும் பட்ட மேற்படிப்பு படித்து தன் திறமையை வளர்த்துக் கொண்டவர். அவருக்கு எப்படி இந்த பள்ளிக் கூடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று ஒரு சமயம் அவரிடம் கேட்ட போது திருமதி ராஜம்மா (தெரிந்த பலர் அவரை அப்படித்தான் அழைப்பார்கள்) என்ன சொன்னார் தெரியுமா?
 "தரமான கல்வியை வளரும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனென்றால் அவர்கள் தான் இந்த நாட்டின் நாளைய சாதனையாளர்கள். அடிப்படை கல்வியை அவர்களுக்கு சரியாக நாம் கற்பித்தால் அவர்கள் நாட்டின் சிறந்த குடிமகனாக வருவார்கள். இந்த நாடும் சிறந்த நாடாக மாறிவிடும் இல்லையா'' என்றார்.
 இதன் மூலம் அவருக்கு நாட்டின் மீதும், குழந்தைகள் மீதும் எவ்வளவு பாசம் இருக்கிறது, எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
 அவருக்கு கல்வியின் மீது எவ்வளவு பற்று இருந்ததோ, அதே அளவிற்கு கலைகளின் மீதும் பற்று உண்டு. குழந்தைகள் பல்வேறு கலைகளை கற்று தேர்ந்து திறமையானவர்களாக வளர வேண்டும் என்று விரும்பினார்.
 ஒரு முறை பத்திரிகையாளரோடு அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் நீங்காதவாறு மனதில் மிகவும் ஆழமாக பதிந்து விட்டது.
 "உங்களுக்கு பெண் குழந்தை தானே பிறந்திருக்கிறது. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள். பல்வேறு கலைகளில், அதாவது வாய்ப்பாட்டு, ஸ்லோகங்கள், நடனம் என்று சில கலைகளில் சேர்த்து விடுங்கள். குழந்தைகளுக்கு எது பிடிக்கிறதோ அதை அவர்களாகவே உற்சாகதோடு படித்து தேர்ந்து பெரிய ஆளாக வளரட்டும். அவரின் தந்தை என்று உங்களுக்கு பெருமை சேர்க்கட்டும்'' என்றார்.
 "ருக்மிணி அசோக் குமார்' என்ற பெயரில் கமல் ஹாசனோடு இணைந்து "உத்தம வில்லன்'" திரைப்படத்தில் பாடல் பாடும் அளவிற்கு முன்னேறினார் அந்த குழந்தை இதற்கெல்லாம் காரணம், திருமதி ஒய்.ஜி,பி. யின் ஆசிகளும் சிறந்த அறிவுரையும்தான் என்று கூறவேண்டும்.
 இவரும் இவரது கணவரும் ஆதர்ச தம்பதியினர் என்றுதான் சொல்லவேண்டும். இவர்கள் இருவருக்கும் சண்டையே வந்த தில்லையாம். அவரே கூறுகிறார், "எங்களுக்குள் சண்டை வந்ததில்லை என்று கூறினால் பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கணவன் மனைவி சண்டை இல்லாமலா என்று கேட்பார்கள். நாங்கள் விவாதம் செய்துள்ளோம். கோபம் வந்தால் நான் பேசுவதை நிறுத்திவிடுவேன். இரண்டு மூன்று நாட்கள் இப்படி இருந்தாலே அவருக்கு நான் கோபமாக இருக்கிறேன் என்று தெரியும். பின்னர் சமாதானமாக பேசி சகஜமாகிவிடுவோம்''.
 தன் வீட்டின் மொட்டை மாடியில் ஆரம்பித்த பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி, இன்று பல கிளைகளைக் கொண்டு அவரது இளைய மகன் ஒய்.ஜி. ராஜேந்திரன், அவரது மனைவி ஷீலாவின் மேற்பார்வையில் சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது. மற்றொரு மகனான ஒய்.ஜி. மகேந்திரன் திரைப்பட நடிகர், ட்ரம்ஸ் வாசிப்பதில் வித்தகர். தனது விருப்பம் போலவே ஒரு மகனை கல்விக்காகவும், ஒரு மகனை கலைக்காகவும் கொடுத்து விட்டு சென்றுள்ளார் ஒய்.ஜி.பி. ராஜலக்ஷ்மி என்ற 93 வயது வரை வாழ்ந்து மறைந்த திருமதி ஒய்.ஜி.பி.
 - சலன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com