ஆண் பிள்ளைகளைப் போல..!

இந்திய கிரிக்கெட் உலகில் இன்றைய பரபரப்பு செய்தி ஷெஃபாலி வர்மா. பதினைந்து வயது புயலான ஷெஃபாலி வர்மா தலைப்பு செய்தியாகக் காரணம் கிரிக்கெட்டின் பிதாமகர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரின்
ஆண் பிள்ளைகளைப் போல..!

இந்திய கிரிக்கெட் உலகில் இன்றைய பரபரப்பு செய்தி ஷெஃபாலி வர்மா. பதினைந்து வயது புயலான ஷெஃபாலி வர்மா தலைப்பு செய்தியாகக் காரணம் கிரிக்கெட்டின் பிதாமகர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரின் முப்பதாண்டு கால சாதனையை முறியடித்ததுதான்...!
 தனது பதினாறு வயதைக் கடந்து ஏழு மாதங்கள் ஆகியிருந்த போது ஃபைசலாபாத்தில் பாகிஸ்தானை எதிர்த்து 1989 }இல் நடந்த போட்டியில் சச்சின் அரை சதத்தைத் தாண்டி 59 ஓட்டங்களை எடுத்திருந்தார். அந்த சாதனை, இதுவரை யாரும் முறியடிக்காத இமாலய சாதனையாக இருந்து வந்தது. ஷெஃபாலி வர்மா பதினைந்து வயது நிரம்பி ஒன்பதரை மாதங்கள் நிறைவுற்ற நிலையில் இரண்டு வாரங்கள் முன்பு மேற்கிந்திய தீவுகளின் பெண்கள் கிரிக்கெட் அணியை எதிர்த்து முதலாவது டி20 போட்டியில் ஆடி நாற்பத்தொன்பது பந்து வீச்சில் எழுபத்திமூன்று ஓட்டங்களை ஈட்டி சச்சினின் சாதனையை முறியடித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறு வயதில் "அரை சதம்' அடித்த இந்தியர் - கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் ஷெஃபாலி வர்மாவை வந்தடைந்துள்ளது. இவரது இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனங்களை ஈர்த்திருக்கிறது.
 ஷெஃபாலி வர்மா இந்தியாவின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி வருகிறார். மேற்கிந்திய தீவின் பெண்கள் கிரிக்கெட் அணியை எதிர்த்து ஆடியதில் ஷெஃபாலி வர்மா ஆறு பவுண்டரிகள், நான்கு சிக்சர்களை அதிரடியாக விளாசித் தள்ளினார். ஷெஃபாலியின் அட்டகாச ஆட்டம் இந்திய அணிக்கு 84 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வெற்றி கொள்ளச் செய்தது. தொடர்ந்து இரண்டாவது டி}20 போட்டியிலும் ஷெஃபாலி இரண்டாவது அரை சதம் ஓட்டம் ஈட்டியதுடன் கூடுதலாக 19 ஓட்டங்களை எடுத்து மொத்தம் 69 ஓட்டங்களை சேர்த்தார். ஆக ஷெஃபாலியின் வெற்றிக்கதை தொடர்கிறது.
 இந்தச் சின்ன வயதில் ஷெஃபாலி பதற்றம், பயம், தடுமாற்றம் இல்லாமல், அமைதியாக நின்று விளையாடுகிறார். சச்சின் போலவே, ஷெஃபாலிக்கு திறமை ரத்தத்தில் கலந்துள்ளது என்று சொல்பவர் ஹரியானாவின் ரோத்தக் நகரிலுள்ள கிரிக்கெட் பயிற்சியகத்தின் பயிற்சியாளரான அஸ்வினி குமார். இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை டெனியேலா, "ஷெஃபாலி கிரிக்கெட்டில் புதிய சூப்பர் ஸ்டார்' என்று புகழ்ந்திருக்கிறார். 2019-க்கான பெண்களுக்கான ஐபிஎல் போட்டியில் "வெலாசிட்டி அணி'யில் ஆட்டக்காரராக ஷெஃபாலி இடம் பெற்றுள்ளார்.
 மித்தாலி ராஜ் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கும், ஷெஃபாலி இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியில் இடம் பெறுவதும் ஒரே சமயத்தில் நடந்தது. சென்ற செப்டம்பர் மாத இறுதியில் ஷெஃபாலி இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தொடக்கத்தில் அதிரடி ஆர்பாட்டம் ஆட்டம் ஆடியிருக்கும் ஷெஃபாலியின் ஆரம்ப கால பயணங்கள் எளிதாக அமையவில்லை. திரைப்படத்தில் வரும் திருப்பங்கள் ஷெஃபாலியின் வாழ்க்கையிலும் இடம் பெற்றுள்ளது. ஷெஃபாலி மனம் திறக்கிறார்:
 "சச்சின் ஆடுவதை ஆச்சரியமாக அதிசயமாகப் பார்த்து வளர்ந்தவள் நான். அவர் அநாயசமாக பேட்டிங் செய்வதை பார்த்து பலமுறை வியப்பில் உறைந்து போயிருக்கிறேன்... "இப்படியெல்லாம் என்னால் விளையாட முடியுமா?' என்று தந்தையிடம் கேட்டேன். "தீவிரமாக பயிற்சி செய்தால் எதுவும் சாத்தியமாகும்.... முயன்றால் முடியாதது உலகில் ஒன்றும் இல்லை' என்று சொன்னார். அவரது சொற்கள் எனது மனதில் பதிந்தன... கிரிக்கெட்டை நான் சுவாசிக்க ஆரம்பித்தேன்.
 தொடக்கக் காலத்தில் என்னை ஆண் பிள்ளைகள் ஆடும் கிரிக்கெட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். நான் பெண் என்பது ஒரு காரணம். பிறகு வேகமாக வீசப்படும் பந்து என் தலையில் கையில் காலில் பட்டால் காயம் ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் அப்பா அணியினரைத் திட்டுவார் என்பதினால் என்னைச் சேர்த்துக் கொள்ளவில்லை.
 அப்பா "ஷெஃபாலிக்கு அடி ஏதும் பட்டால் நான் எதுவும் கேட்க மாட்டேன்.. சண்டைக்கு வர மாட்டேன்' என்று என்ன சொல்லிப் பார்த்தாலும்... அணியினர் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது பெண்களுக்கான கிரிக்கெட் பயிற்சிகள் எதுவும் ரோத்தக்கில் நடைபெறவில்லை. அதனால் நகரத்தின் வேறு பகுதியில் இருக்கும் அணியில் சேர்ந்து பயிற்சி பெற தீர்மானித்தோம். அப்போது எனக்கு ஒன்பது வயது. அங்கேயும் இதே பிரச்னை வரும் என்று எதிர்பார்த்ததினால் அப்பா சஞ்சீவ் வர்மா முதலில் எனது முடியை வெட்டி ஆண் பிள்ளைகளின் கிராப்பாக மாற்றினார். நான் பார்க்க ஆண் பிள்ளை மாதிரி இருப்பேனா... கிராப் வந்ததும் அசல் ஆண் பிள்ளை மாதிரி ஆனேன். கிரிக்கெட் அணியில் சேர்க்கும் போது பெயர் கேட்பார்களே.. அப்பா ஒரு ஆண் பிள்ளையின் பெயரைச் சொல்லி என்னை பயிற்சியகத்தில் சேர்த்து விட்டார். சில மாதங்கள் நகர்ந்தன. எத்தனை நாளுக்கு நான் ஆண் பிள்ளை என்று மறைக்க முடியும். "நான் சிறுமி' என்ற உண்மை எப்படியோ வெளிவந்துவிட்டது. வந்தது வினை. முதல் நடவடிக்கையாக என்னை பயிற்சியகத்திலிருந்து நீக்கி விட்டார்கள். எல்லாரும் "இப்படியா சிறுமியை சிறுவன் என்று பொய் சொல்லி சேர்ப்பது' என்று கடிந்து கொண்டார்கள். குற்றம் சொன்னார்கள்.
 அப்பா இதை எதிர்பார்த்தார். அதனால் தளர்ந்து போகவில்லை. உள்ளூரில்தானே பயிற்சி எடுப்பதில் பல தடைகள். பக்கத்து ஊரில் முயற்சிக்கலாம் என்று தீர்மானித்தார். வேறு வழியில்லாமல் எட்டு கி. மீ தூரத்திலுள்ள பக்கத்து ஊரில் சிறுமியாகப் பயிற்சிக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்பாதான் சைக்கிளில் கொண்டு வந்து விட்டு... பிறகு பயிற்சி முடிந்ததும் அழைத்துக் கொண்டு போவார். தினமும் நான்கு தடவைகள் அவர் 8 கி. மீ சைக்கிள் மிதிப்பார். இப்படித்தான் எனது கிரிக்கட்டின் பால பாடம் துவங்கியது. பயிற்சியின் போது பல முறை பந்துகள் தாக்கியுள்ளன. அணிந்திருக்கும் ஹெல்மெட் சிதைந்து போயுள்ளது. கைகளில் கால்களில் பலத்த அடிகள்.. காயங்கள்... ஆனால் பயிற்சியைத் தொடர்ந்தேன்.

 எப்போதும் ஆரம்ப கால கஷ்டங்கள்.. அப்பா பட்ட சிரமங்களை நினைத்துக் கொள்வேன். அந்த நினைவுகள்தான் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறியை என்னுள் உருவாக்கியது. சென்ற பிப்ரவரி மாதம் நாகாலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில், 56 பந்தில் 128 ரன்கள் எடுத்தேன். அதனால் என் மேல் கிரிக்கெட் ஆர்வலர்களின் பயிற்சியாளர்கள் தேர்வாளர்கள் கவனங்கள் பதிந்தன.
 என்மேல் நம்பிக்கை பிறந்தது. தொடர்ந்து போன மே மாதம் நடந்த பெண்களுக்கான டி20 கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் அதிரடியாக ஆடியதால் என் மேலான நம்பிக்கை உறுதி செய்யப்பட்டது. அதனால் எனக்கு தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அப்படி வாய்ப்பு கிடைத்ததினால்தான் பதினாறு வயது நிறைவாகும் முன்னே சாதனை படைக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
 இந்த சாதனையில் திருப்தி அடையப் போவதில்லை. இதையே ஒரு தொடக்கமாகக் கருதுகிறேன். இன்னும் சாதிக்க வேண்டும் என்ற தாகம் என்னிடம் உண்டு. எல்லா வகை கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற விரும்புகிறேன். பேட்டிங்கில் சச்சினைப் போலவும், தோனி போல விக்கெட் கீப்பராகவும் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்'' என்கிறார் கிரிக்கெட் புயல் ஷெபாலி வர்மா.
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com