சமையல்! சமையல்! (4/12/2019)

பொட்டுக்கடலை உருண்டை, அவல் பொரி எள் உருண்டை, முந்திரி ரவை அப்பம்,  பாசிப் பருப்பு பாயாசம்  

பொட்டுக்கடலை உருண்டை 

தேவையானவை :
பொட்டுக்கடலை - ஒரு கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
நெய் - சிறிதளவு
செய்முறை : வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும். பின்னர், வடிக்கட்டிய வெல்ல நீரை அடுப்பில் ஏற்றி, நன்கு கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் நன்கு கொதித்துப் பாகுப் பதம் வந்ததும். பாகுடன் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து இளம் சூடாக இருக்கும் போதே உருண்டைகளாகப் பிடிக்கவும். சூப்பரான இரும்பு சத்து நிறைந்த பொட்டுக்கடலை உருண்டை ரெடி. இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து அதிக நாட்கள் உபயோகிக்கலாம். 

அவல் பொரி எள் உருண்டை 

தேவையானவை: 
அவல் பொரி - 4 கிண்ணம்
கறுப்பு எள் - 2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - கால்கிண்ணம்
வெல்லம் - ஒன்னேகால் கிண்ணம்
அரிசி மாவு - சிறிதளவு
நறுக்கிய தேங்காய் - 1 கிண்ணம்
செய்முறை: எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தைப் பொடித்து, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு பாகு பதம் வந்ததும் இறக்குங்கள். (பாகை சிறிது எடுத்து தண்ணீரில் விட வேண்டும். பின் அதை எடுத்து உருட்டினால் பந்து போன்று உருண்டு வர வேண்டும். வெல்லப்பாகு சேர்க்கும் எல்லா உருண்டைகளுக்குமே இதுதான் பாகு பதம்.) இதனுடன் வறுத்த எள், பொட்டுக்
கடலை, அவல் பொரி, நறுக்கிய தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை பாகில் கொட்டி, கிளறி சூடாக இருக்கும்போதே, அரிசிமாவைக் கைகளில் தடவிக்கொண்டு உருண்டை பிடியுங்கள். அவல் பொரி எள் உருண்டை தயார்.

முந்திரி ரவை அப்பம் 

தேவையானவை:
ரவை – - 100 கிராம்
மைதா –- 100 
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்ப் பொடி - கால் தேக்கரண்டி
முந்திரிபருப்பு -– 10
கிஸ்மிஸ் –- 10
சோடா உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 250 மிலி
நெய் - தேவையான அளவு
வாழைப்பழம் - 1 
செய்முறை: ரவையை சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து அதில் மைதா, சர்க்கரையைச் சேர்த்து கலந்து வைக்கவும். வாணலியில் நெய் விட்டு சிறிய துண்டுகளாக்கிய முந்திரியையும், கிஸ்மிஸ்யையும் வறுத்து எடுக்கவும். பிறகு ஊற வைத்த ரவை கலவையுடன் ஏலக்காய்ப் பொடி, சோடா உப்பு, மசித்த வாழைப்பழம் சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து சிறிய சிறிய அப்பமாக ஊற்றி பொன்னிறமாக வரும் வரை வேகவைக்கவும். ரவை, மைதா, சர்க்கரை மூன்றும் சம அளவில் இருந்தால்தான் அப்பம் சரியாக வரும்.

பாசிப் பருப்பு பாயாசம் 

தேவையானவை:
பால் - 2 டம்ளர்
பாசிப்பருப்பு - கால் கிண்ணம்
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
வெல்லம் - முக்கால் கிண்ணம்
துருவியத் தேங்காய் - கால் கிண்ணம்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - கால் தேக்கரண்டி
முந்திரி - 6
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை: துருவிய தேங்காய் மற்றும் அரிசி மாவை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து லேசாக வறுத்து எடுத்து , குக்கரில் பருப்பு வகைகளை சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் ஒரு கிண்ணத்தில் தேங்காய் மற்றும் அரிசி மாவை போட்டு, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பருப்பு, அரிசி மாவு கலவை, ஏலக்காய்ப் பொடி மற்றும் வெல்லத் தண்ணீர் சேர்த்து கலந்து குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, சூடு ஆறியதும் அதனுடன் காய்ச்சியப் பால், முந்திரியை வறுத்து சேர்த்து கிளறி பரிமாறலாம். 
- தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com