கப்பல் படையின் போர் விமானி...!

இந்தியக் கப்பல்படையில் போர் விமானம் இயக்கும் முதல் பெண் விமானியான ஷிவாங்கி சமீபகாலமாக செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்.
கப்பல் படையின் போர் விமானி...!

இந்தியக் கப்பல்படையில் போர் விமானம் இயக்கும் முதல் பெண் விமானியான ஷிவாங்கி சமீபகாலமாக செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். போர் விமானம் இயக்குவதில் பல கட்ட பயிற்சிகள் உண்டு. ஒவ்வொரு கட்ட பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்ததும் ஷிவாங்கி குறித்த செய்திகள் ஊடகங்களில் பரவும். அப்போது "வெறும் முதல் பெண் போர் விமானி' என்று குறிப்பிடப்பட்டு வந்தவர் இந்த டிசம்பர் மாதம் 2 -இல் கொச்சி கப்பல்படைத் தளத்தில் உதவி லெஃப்டினண்ட்டாக பொறுப்பேற்றுள்ளார். இங்கு இவருக்கு போர் விமானம் இயக்குவதில் இறுதிக் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு அசல் போர் விமானியாக அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார். இவருடன் மேலும் இரண்டு பெண்கள் போர் விமானியாக இந்தியக் கப்பல் படையில் சேருவார்கள்.
 இந்தியக் கப்பல் படையில் முன்பெல்லாம் மருத்துவத்துறையில் மட்டுமே பெண்களை பணிகளில் சேர்த்துக் கொள்வார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்தான் ஷிவாங்கி உட்பட மூன்று பெண்களை போர் விமானிகளாகத் தேர்வு செய்தார்கள். ஷிவாங்கி இந்தியக் கப்பல் படையின் கொச்சி தளத்தில் இருக்கும் "டோர்னியர்' வகை விமானங்களை இயக்குவார். வானில் பறந்து எதிரிகளின் போர் கப்பல்கள் குறித்த தகவல்களை சேகரித்து இந்தியப் போர்க்கப்பலுக்கு தர வேண்டும்.
 இது குறித்து ஷிவாங்கி கூறுகையில்:
 "சிறு வயதில் தாத்தாவுடன் சென்றிருந்த போது அமைச்சர் ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போதுதான் ஹெலிகாப்டரை முதன் முதலாகப் பார்த்தேன். என்றாவது ஒருநாள் ஹெலிகாப்டரையோ விமானத்தையோ இயக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். ஜெய்ப்பூரில் படித்துக் கொண்டிருந்தபோது கப்பல் படையில் பெண்களை விமானியாக சேர்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரிந்ததும் மனு செய்து.. தேர்வானேன். உள்நாட்டிற்குள் விமானம் ஓட்டினால் தொடுவானத்தைப் பார்க்கலாம். கடலின் மேல் விமானத்தை இயக்கும் போது தொடுவானம் தெரியாது. நீண்டு பரந்த கடல்தான் தெரியும்.
 நான் இந்தியக் கப்பல்படையில் சேர்ந்ததை அறிந்ததும் பல தோழிகள் மற்றும் தெரிந்தவர்கள் கப்பல் படையில் எப்படி சேர்வது என்று ஆர்வத்துடன் கேட்கிறார்கள். அப்பா பள்ளி ஆசிரியர். அம்மா வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். என்னுடன் ஷுபாங்கி ஸ்வரூப், திவ்யாவும் போர் விமானியாகி உள்ளனர். நாங்கள் மூவரும் கேரளத்தின் "எழிமலா' தளத்தில் ஒன்றாகப் பயிற்சி பெற்றோம். இப்போது அந்த இருவர் இந்திய விமானப் படையில் போர் விமானியாகப் பயிற்சி பெறுகின்றனர். நான் போர் விமானியாக இருந்தாலும், பெண்களைக் கடல் பயணத்தின்போது கொண்டு செல்ல போர்க் கப்பல்களில் வசதி ஏற்படுத்தும் வரை கொச்சி தளத்திலிருந்து விமானத்தை இயக்க வேண்டியிருக்கும்'' என்கிறார் "உதவி லெஃப்டினண்ட்' ஷிவாங்கி.
 - பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com