காடுகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு காலண்டர்

பொதுவாக ஆண்டுதோறும் விதவிதமான காலண்டர்கள் வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.
காடுகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு காலண்டர்

பொதுவாக ஆண்டுதோறும் விதவிதமான காலண்டர்கள் வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவிலேயே முதல்முறையாக காடுகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடர்ந்த காட்டுக்குள் இயற்கையான சூழலில் ஒரு மாடல் அழகி யானையுடன் இருப்பது போன்ற போட்டோக்கள் அடங்கிய "நயாப்' என்ற காலண்டரை வெளியிட்டிருக்கிறார் ஃபேஷன் டிசைனர் ஃபைசாகான். இதுகுறித்து ஃபைசாகான் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "எனக்கு பூர்வீகம் வாணியம்படி. ஆனால், வளர்ந்ததெல்லாம் பெங்களூரில்தான். திருமணத்திற்குப் பிறகு, சென்னை வந்தேன். மகள் பள்ளிக்குச் செல்ல தொடங்கியதும், வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் "ஈவண்ட் மேனேஜ்மெண்ட்' துறையில் இறங்கினேன், நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அதையே பிரதான தொழிலாக எடுத்துக் கொண்டேன். இந்நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, என் மகளின் பள்ளியில் ஆண்டு விழா நடத்தப்பட்டது. அதில் என் மகள் ஃபேஷன்ஷோவில் கலந்து கொண்டாள். அப்போது பள்ளியிலிருந்து என்னை அழைத்து, "உங்கள் மகளுக்கு காஸ்ட்யூம் டிசைனர் யாரும் தேவைப்படுகிறார்களா? என்றார்கள். அதற்கு, "நானே ஃபேஷன் டிசைனர்தான் அதனால் வேண்டாம்' என்று சொல்லிவிட்டேன். அதைக்கேட்ட, பள்ளி நிர்வாகத்தினர், அப்படியென்றால் நீங்கள் மற்ற சில குழந்தைகளுக்கும் ஆடை வடிவமைத்துக் கொடுக்க முடியுமா?' என்றார்கள்.
 "ஈவண்ட்மேனேஜ்மென்ட்'டில் நான் பிஸியாக இருந்தாலும், ஃபேஷன் டிசைன் படித்திருப்பதால், எப்போதும் வித்தியாசமான ஆடைகளை வடிவமைப்பதில் ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. அதனால், சரியென்று செய்து கொடுத்தேன். அது அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதன் மூலம் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய தாய்க்கும்- மகளுக்குமான ஃபேஷன் ஷோவிற்கு ஆடைவடிவமைத்துக் கொடுக்கச் சொல்லி ஆர்டர் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நிறைய ஃபேஷன் ஷோவுக்கான ஆர்டர்கள் வரத்தொடங்கிவிட்டது. இதனால் "ஃபேப்' என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தைத் தொடங்கினேன். அதன்மூலம் சின்னத்திரை நடிகைகள், திரைப்படங்களுக்கும் தற்போது காஸ்ட்யூம் டிசைன் செய்து தருகிறேன்.

இருந்தாலும், காஸ்ட்யூம் டிசைனை வைத்து ஏதாவது தனித்துவமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. அதற்காக யோசித்தபோது, புது வருடம் பிறக்கப்போகிறது அதனால் காலண்டர் செய்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. என் கணவரும் உற்சாகப்படுத்தி நம்பிக்கை கொடுத்தார்.
 காலண்டர் செய்வது என்று முடிவாகிவிட்டது. ஆனால், இங்கே காலண்டர் செய்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதிலிருந்து நாம் என்ன வித்தியாசமாக செய்வது என்று யோசித்தபோது, காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காலண்டர் உருவாக்க வேண்டும் என்று தோன்றியது. இதற்காக 12 மாதத்திற்கும் 12 தீம் உருவாக்கி, அடர்ந்த காட்டுக்குள் யானையுடன் ஒரு மாடலை வைத்து செய்ய நினைத்தேன். அடுத்து யாரை மாடலாக வைத்து செய்வது என்று யோசித்தபோது, என் தோழியான நடிகை சாக்ஷி அகர்வால் "நானே செய்து தருகிறேன்' என்று சப்போர்ட் பண்ணார். அதன்பிறகு 12 மாதங்களுக்கான தீமுக்கு ஏற்றவாறு ஆடையைத் தயார் செய்தேன். ஒவ்வொன்றின் பின்னும் ஒரு அழகான அர்த்தமும், கதையும் உருவாக்கினேன். அதாவது, ஜனவரி மாதத்திற்கான படத்தில், சாக்ஷி விளக்கினை கையில் ஏந்தி இருப்பார். அது முதல் மாதம் என்பதால், நம் வாழ்வில் ஒளியைக் கொண்டு வருகிறது என்பதைக் குறிக்கும். அதேபோல், பிப்ரவரி மாதம் காதலுக்கானது என்பதால், சாக்ஷியின் உடை சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு கருப்பொருளையும், நிறத்தையும் வைத்து ஆடையை தயார் செய்தேன்.

 அடுத்து, யானையை வைத்து காலண்டர் எனும்போது, கேரளாதான் அதற்கு சரியாக இருக்கும் என்று நினைத்து விசாரித்தோம். எங்கள் நேரம் அங்கிருந்த யானை எல்லாம் திருமணவிழாவில் கலந்து கொள்வதில் ரொம்ப பிஸி. மாடல் கூட கிடைத்துவிட்டார் ஆனால், யானை கிடைப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. ஒருவழியாக "ராஜா' என்ற கம்பீரமான யானை கிடைத்தது. அதன்பிறகு, அங்குள்ள வன இலாகாவிடம் முறையாக அனுமதி பெற்றோம். ஷூட்டுக்கான நாளை குறித்தோம்.
 மேக்கப் ஆர்ட்டிஸ்ட், கேமராமேன், வீடியோ சூட் என எல்லாவற்றிற்கும் சொல்லி ஆயிற்று. கேரளாவுக்கும் டிக்கெட் போட்டாயிற்று. ஆனால், குறித்த நாளில் அங்கே மழை வெளுத்துவாங்க தொடங்கிவிட்டது. எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல், சூட்டிங்கை தள்ளிவைத்துவிடலாம் என்றார்கள்.
 இத்தனை உழைப்பும் வீணாகிவிடும் என்பதால், ஏதோ ஒரு நம்பிக்கையில், ஒருநாள் தங்கி பார்ப்போம் மழை விட்டால் ஷூட் செய்வோம். இல்லையென்றால் திரும்பிவிடலாம் என்று தைரியம் கொடுத்து எல்லோரையும் அழைத்துச் சென்றுவிட்டேன்.

 நாங்கள் போய் இறங்கிய நேரம் மழை சற்று ஓய்ந்தது. காலை நேரம் ஷூட் செய்வோம், இரவெல்லாம் மழை பெய்யும். முதல் ஷாட்டே சாக்ஷி பிரமாதமாக செய்து கொடுத்தார். அதன்பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. சரி நம்மால் இதை செய்ய முடியும் என்று. இப்படியே 4 நாட்கள் தங்கி படம் பிடித்தோம். காட்டுப் பகுதி என்பதால், குடிக்க தண்ணீர் வேண்டுமென்றாலும் 20 கிலோமீட்டர் வரை செல்ல வேண்டும். சரியான உணவும் கிடைக்கவில்லை. ஆனாலும் கூட , சாக்ஷி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி சரத், கேமராமேன் அலெக்ஸ், யானைப்பாகன் என ஒவ்வொருவருமே, அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இது என்னுடைய தனி உழைப்பு என்பதையும் தாண்டி அனைவரின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி என்றே சொல்வேன். சமீபத்தில் காலண்டரை வெளியிட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது'' என்றார்.
 - ஸ்ரீதேவிகுமரேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com