தற்போதைய டிரண்ட் லெஹங்காதான்!

தற்போது ஆடை வடிவமைப்பில் புதிய டிரண்டுகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.
தற்போதைய டிரண்ட் லெஹங்காதான்!

தற்போது ஆடை வடிவமைப்பில் புதிய டிரண்டுகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. அன்றாட பயன்பாட்டுக்கே விதவிதமான டிசைன்களில் ஆடைகளை அணியவே பெரும்பாலான இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். இதில் திருமண வரவேற்பு என்றால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில், மணப்பெணுக்கான திருமண வரவேற்பில் தற்போதைய டிரண்ட் லெஹங்காதான். அதேசமயம் அதன் விலையினால், பலருக்கும் லெஹங்கா எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஆனால், சாதாரண மக்களுக்கும் சாத்தியமாகிற விலையில் லெஹங்கா தைப்பதில் பிரபலமாகியிருக்கிறார் லெஹங்கா ஸ்பெஷிலிஸ்ட்டான சென்னையைச் சேர்ந்த கோமதி. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "சின்ன வயதிலிருந்தே எனக்கு டெய்லரிங் மீது ஒரு ஆர்வம் உண்டு. ஆனால், வீட்டில் டெய்லரிங் கற்றுக் கொள்ள அனுமதிக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு மகன் பிறந்து ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்ததும் நிறைய நேரம் கிடைத்தது. எனவே, கணவரின் அனுமதியுடன் தையல் கற்றுக் கொண்டேன். பின்னர், எங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆடைகளை விதவிதமாக நானே தைக்க ஆரம்பித்தேன்.
 என் கணவர் திருமணங்களில் மண்டப அலங்காரம் செய்கிற வேலை பார்த்து வந்தார். இந்நிலையில். திடீர் என்று அவருக்கு அந்த பிசினஸ் நொடிஞ்சு போனதால் அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை. அதிலிருந்து மீள டெய்லரிங்கை முழு நேர வேலையாக்கிக் கொண்டேன்.
 அதே சமயம், பொதுவாக எல்லாரையும் போன்று பெண்களுக்கான ஜாக்கெட் மற்றும் சுடிதார் தைப்பதை விட டெய்லரிங்கிலேயே வேறு ஏதாவது வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்தேன். அப்போதுதான் லெஹங்கா இளம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கிய நேரம். அதனால் லெஹங்கா தைப்பதில் ஆர்வமானேன். இன்று எளிமையாக திருமணம் செய்பவர்கள் கூட திருமண வரவேற்புக்கு லெஹங்காதான் போட்டுக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், லெஹங்கா பெரும்பாலும் பெரிய கடைகளில் ஒரு கணிசமான தொகையில்தான் கிடைக்கிறது. ஒரு நாளுக்காக அவ்வளவு செலவு செய்யணும்மா என்ற தயக்கம் மணப்பெண்ணின் பெற்றோருக்கு இருக்கிறது. அதனால் குறைந்த விலையில் திருமண வரவேற்புக்கு என்று விசேஷமாக லெஹங்கா தைத்துக் கொடுக்க ஆரம்பித்தேன்.
 லெஹங்கா தைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு தற்போது பயிற்சியளித்தும் வருகிறேன்.
 இதனை பிசினஸாக எடுத்துக் கொள்ள விரும்பினால், அடிப்படை தையல் தெரிந்திருந்தால் போதும் ஒருநாள் பயிற்சியிலேயே கற்றுக் கொள்ளலாம்.
 18,000 ரூபாயிலிருந்து பவர் தையல் மெஷின் கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொண்டால் போதும். மற்றபடி எம்ப்ராய்டரி, ஆரி வேலைபாடுகள் எதுவும் தெரிந்து இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அலங்கார வேலைகள் தேவைப்பட்டால் அதற்கு என்று இருப்பவர்களிடம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். தற்போது ஆங்காங்கே பொட்டிக்குகள் நிறைய வந்துவிட்டன. அதனால் அவர்களிடம் பேசி ஆர்டர் பிடித்துக் கொண்டால் 50 சதவிகிதம் வரை லாபம் கிடைக்கும்.
 தற்போது கல்லூரி மாணவிகள் அன்றாட பயன்பாட்டுக்கே காட்டனில் லெஹங்கா அணிவதை விரும்புகிறார்கள். லெஹங்காவின் அடிப்படை மாடல் ஒன்றுதான். அதில் கழுத்து டிசைன், சட்டையின் நீளம், லேஸ் போன்ற அலங்காரங்கள், பனியன் துணி, சில்க் காட்டன், வெல்வெட் என தைக்கிற துணியிலும், டிசைன்களிலும் சிறியதாக வித்தியாசம் காட்டினால் போதும். நல்ல வரவேற்பு எப்போதும் இருக்கும்'' என்றார்.
 - ரிஷி
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com