நூறு வயதை தாண்டிய கௌரி அம்மா!

"கேரளத்தின் அம்மா' எனப்படும் கெளரி அம்மா சாதனை படைத்திருக்கிறார். இந்திய அரசியலில் வயதிலும் அனுபவ த்திலும் மூத்த தலைவரான கெளரி அம்மா நூறு வயதை
நூறு வயதை தாண்டிய கௌரி அம்மா!

"கேரளத்தின் அம்மா' எனப்படும் கெளரி அம்மா சாதனை படைத்திருக்கிறார். இந்திய அரசியலில் வயதிலும் அனுபவ த்திலும் மூத்த தலைவரான கெளரி அம்மா நூறு வயதை நிறைவு செய்து சென்ற வாரம் நூற்றியொன்றில் அடி யெடுத்து வைத்திருக்கிறார். வேறு எந்த ஆண் தலைவருக்கும் பெண் தலைவருக்கும் இல்லாத சிறப்பு இது. உலகில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசில் அமைச்சராக செயலாற்றியவர் கெளரி அம்மா. அந்த அமைச்சரவையில் பதவி ஏற்றவர்களில் கெளரி மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார். கேரளத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர். அதிகம் முறை தேர்தல்களில் வெற்றி பெற்றிப்பவரும் இவர்தான்.
செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இவர், பொது உடமை சித்தாந்தத்தினால் கவரப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். சட்டம் படித்து வழக்கறிஞராக பணி புரிந்தவர். சுதந்திரப் போராட்டம்... விவசாயத் தொழிலாளர்களுக்கான போராட்டம்... சேர்ந்த கட்சியில் முக்கியத்துவத்திற்காகப் போராட்டம்.. என்று வாழ்க்கை முழுவதும் போராட்டத்தில் கழித்தவர்.
1957-இல் கேரளத்தில் நடந்த முதல் தேர்தலில் வென்று நம்பூதிரிபாட் தலைமையில் ஆட்சி அமைந்தபோது கெளரி வருவாய்த்துறை அமைச்சர் ஆனார். கெளரி அந்த அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க "நில சீர்திருத்த மசோதா' சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதற்காகப் போராடினாரோ... எதற்காக காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளானாரோ அந்த கெளரிக்கு தனது கட்சியின் கொள்கையினை சட்டமாக ஆக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தான் கண்ட நீண்ட நாள் கனவு நனவானது குறித்து கெளரி சொன்னது.
"நில சீர்திருத்தச் சட்டம் நிறைவேறிய தினத்தில் இரவில் நான் உறங்கவில்லை. அதீத சந்தோஷத்தில் தூக்கமே வரவில்லை'
சட்டம் நிறைவேற்றப்பட்ட இரு தினங்களில் மசோதாவால் பயன்பெறும் பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர் கள் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு கூடி சந்தோசமாக வாழ்த்தி கோசமிட்டு கெளரியை அன்பினால் திக்கு முக்காடச் செய்தனர்.
தன்னைக் காதலித்து வந்த தன் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டி வி தாமûஸ கெளரி மணந்தார். பின்பு கம்யூனிஸ்ட் கட்சி வலது இடதாகப் பிரிந்தபோது தாமஸ் வலது பிரிவிலும், கெளரி இடது பிரிவிலும் தொடர்ந்தார்கள். "நாங்கள் அமைச்சரானதும் அடுத்தடுத்து வீடுகள் எங்களுக்கு வழங்கப்பட்டது. நடுவிலிருந்த மதிலை உடைத்து நாங்கள் போய் வந்து கொண்டிருந்தோம். ஆனால் அவரது கட்சி மீண்டும் மதிலைக் கட்டியது. அவர் வீட்டிற்குப் போக வேண்டுமென்றால் காம்பவுண்டு கடந்து சுற்றிச் செல்ல வேண்டும். இது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. மாரடைப்பும் ஏற்பட்டது. ஒரு மாதம் சிகிச்சை பெற்றேன். கூடிய விரைவிலேயே கணவன் - மனைவி பந்தத்திற்கும் முற்றுப் புள்ளி விழுந்தது. தாமஸ் திருமணம் ஆன புதிதில் காஷ்மீர் பட்டுப் புடவையை பரிசளித்தார். அதை இன்றைக்கும் பாதுகாத்து வருகிறேன். இடது கம்யூனிஸ்ட் கட்சியில் நம்பூதிரிபாடிற்கு, ஈ.கே.நாயனாருக்கு அடுத்த தலைவராய் கெளரி உயர்ந்தார். முன்னிருவர் முதலமைச்சர் ஆகிவிட்ட படியால் 1987 -இல்தேர்தலில் வென்றால் கெளரிதான் முதல்வர் ஆவார் என கட்சித் தொண்டர்களும் எண்ணினார்கள். அந்த தேர்தல் சமயத்தில் "கேரம் (தேங்காய்) தின்னும் கேரள நாட்டில், கே.ஆர் கெளரி ஆட்சி செய்வார்' என்று கேரளம் முழுவதும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆனால் தேர்தலில் வென்ற இடது கம்யூனிஸ்ட் கட்சி ஈ.கே. நாயனாரை மீண்டும் முதல்வராக்கிப் பார்த்தது. தன்னை உதாசீனம் செய்ததாகக் கருதிய கெளரி அம்மாவுக்கும் கட்சிக்கும் இடையே உறவு விரிசலானது. பெண் என்ற ஒரு காரணத்திற்காக கட்சிக்குள் தனது சீனியாரிட்டி, தனது உழைப்பு அவமதிக்கப்படுவதை கெளரியால் பொறுத்துக்க கொள்ள முடியவில்லை.
கெளரி கட்சிக்குள் வகித்த மாநில அளவில் உள்ள பதவி மாவட்ட அந்தஸ்த்திற்கு தரம் குறைக்கப்பட்டது. 1994 -இல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனிக் கட்சி தொடங்கினார். காங்கிரஸ் முன்னணியுடன் கூட்டணி அமைத்தார். அமைச்சருமானார்.
காலம் செல்லச் செல்ல கெளரி அம்மாவின் கட்சி செல்வாக்கை இழந்தது. தான் சந்தித்த பதினேழு தேர்தல்களில் பதிமூன்றில் வென்ற கெளரி அம்மாவுக்கு குழந்தைகள் இல்லை. காரணம் கேரள காவல்துறையினர் அளித்த சித்ரவதையே.
- கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com