நான் இந்தியப் பெண்தான் - காத்ரினா கைப்

"பூம்' படத்தின் மூலம் 2003-ஆம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்த காத்ரினா கைப், பல படங்களின் வியாபாரத்திற்கு உதவியாக இருந்தாலும்,
நான் இந்தியப் பெண்தான் - காத்ரினா கைப்

"பூம்' படத்தின் மூலம் 2003-ஆம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்த காத்ரினா கைப், பல படங்களின் வியாபாரத்திற்கு உதவியாக இருந்தாலும், மும்பை படவுலகுக்கு அவர் வெளிநாட்டுப் பெண்ணாகவே கருதப்பட்டார். ஏனெனில் அவர் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்ததால் அவர் இந்திய பிரஜையாக கருதப்படவில்லை. அவரது தந்தை இந்தியர்- தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்றாலும், 17-ஆவது வயதில் இந்தியாவுக்கு வந்த காத்ரினா, இங்கேயே தங்கி படங்களில் நடித்து வருகிறார்.
 " என்னை போல் பலர் அந்நிய நாட்டு பாஸ்போர்ட்டுடன் இந்தியாவில் உள்ளனர். இதனால் அவர்களுக்கு இந்திய நாட்டின் மீது தேசபக்தி இல்லை என்று கூறிவிட முடியாது. இதுதான் என்னுடைய நாடு. நான் இங்கு தங்கி படங்களில் நடித்து வருகிறேன். நான் இந்தியப் பெண்தான்'' என்று சமீபத்தில் காத்ரினா கூறியதோடு, தான் வெளிநாட்டுப் பெண் என்ற சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
 அண்மையில் சல்மான்கானுடன் இவர் நடித்து வெளியான "பாரத்' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதலில் இப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்புக் கொண்டு பின்னர் தன் திருமணம் காரணமாக விலகிவிட்டார். பின்னர் காத்ரினாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுபோன்று பல நடிகைகள் விலகிய படங்கள், இவருக்கு இரண்டாவதாக கிடைத்துள்ளன.
 "நான் ஒன்றும் புதுமுகமல்ல. முதலில் ஒப்பந்தமானவர்கள் விலகும்போது எனக்கு வாய்ப்பளிப்பதை தவறாக கருத முடியாது. நான் பெரும்பாலும் வர்த்தக ரீதியான படங்களையே தேர்வு செய்து நடிப்பதால் இத்தகைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. இந்த பயணத்தில் நான் திரும்பி பார்க்க விரும்பவில்லை. தவறாகவும் கருதவில்லை. நாம் எதை விரும்பி தேர்ந்தெடுக்கிறோமோ அது தவறாக இருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் இன்று நான் நானாகவே இருக்கிறேன். இதைப் பகுத்து பார்க்கவும் கூடாது. என் மனதுக்குப் பிடித்த பாத்திரங்களை ஏற்று நடிப்பதை சவாலாக கருதுகிறேன்.
 இன்று எனக்கு 36 வயதாகிறது. வாழ்க்கையை பற்றியோ, வயது ஆவதையோ நான் பிரச்னையாக கருதவில்லை. ஒவ்வொரு நாளையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.
 நமக்கு பரிசாக கிடைத்த இந்த வாழ்க்கை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திரும்ப பெறப்படலாம். நாம் நிரந்தரமானவர்கள் அல்ல. எதிர்காலத்தில் என்ன நடக்கும்? என்பது தெரியாததால் ஒவ்வொரு வாய்ப்பையும் நான் வரவேற்கிறேன். எனக்கு தொடர்பில்லாத விஷயங்களைப் பற்றி கருத்து கூறுவதும் இல்லை'' என்று கூறும் காத்ரினா. சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஆர்வம் காட்டி வருகிறார்.
 "உண்மையில் நான் இந்த சமூக வலை தளங்களை விரும்பியதில்லை. என்னைப் பற்றிய தகவல்களை தொடர்ந்து படிக்க வேண்டும். தவறாக இருந்தால் தகுந்த பதிலை அளிக்க வேண்டும். இது தேவைதானா என்று நினைத்ததுண்டு. பிறகு ஒவ்வொருவருக்கும் கருத்தை வெளிப்படுத்த இந்த மேடை பயன்படுவதை அறிந்த பிறகே நானும் இதில் பங்கேற்க முடிவெடுத்தேன்'' என்கிறார் காத்ரினா.
 - பூர்ணிமா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com