என் பிருந்தாவனம்! 21 - பாரததேவி 

"சரி கௌசி... இம்புட்டு நேரமும் இருந்ததுபோதும் வா'' என்று அவள் அருகில் சென்று சொல்லவும்.
என் பிருந்தாவனம்! 21 - பாரததேவி 

"சரி கௌசி... இம்புட்டு நேரமும் இருந்ததுபோதும் வா'' என்று அவள் அருகில் சென்று சொல்லவும்.
 கல, கலவென்று சிரித்தவாறே அவனை மணலில் பிடித்துத் தள்ளினாள். "இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு ஒரு மனிதரும் இல்லை. இப்படியொரு தனிமை நமக்கு இனி எங்கே கிடைக்கப் போகுது. விடியும் வரை நாம இங்கேயே இருக்கலாம்'' என்றாள். அவள் முகம் நிலவொளியில் பொலிவு கண்டு பிரகாசித்தது.
 ஆனால், அவனுக்குள் பயமும், கவலையும் ஏற, ஏற நிமிஷத்துக்கு, நிமிஷம் நிலை கொள்ளாமல் தவித்தான். இவள் இப்படி செய்வாள் என்றால் ஆட்களோடு, ஆட்களாக இன்னொரு முறை இரண்டாம் ஆட்டம் சினிமாவே பார்த்திருக்கலாம் என்று நினைத்தவன், ""போதும் கௌசி நேரம் நடுச்சாமமாகப் போகிறது. எத களவாம்போமின்னு, ரா விடிய களவாணிப்பயக அலைவாக வா நாம போயிருவோம்'' என்றான்.
 அவன் சொன்னதைக் கேட்டு அவள் கோபமடைந்தாள். " நீங்களும் ஒரு ஆம்பளத்தான வரவங்கள சினிமாவில வர ஹீரோக்கள் அடிச்சமாதிரி பெறட்டி, பெறட்டி அடிக்க வேண்டியதுதானே''.
 "உன்ன மாதிரி சினிமாவையும், வாழ்க்கையையும் ஒன்னாப் பாக்கிறதினாலதேன் சில பேரு குடும்பம் கெட்டுக்கிடக்கு. வா போவோம். இதுக்குமேல இங்க இருக்கக் கூடாது'' என்று வம்படியாக இழுத்துக் கொண்டு வந்தான்.
 ரோட்டுக்கு வந்தவன் திடுக்கிட்டுப் போனான். அங்கே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிளை காணோம். பதட்டத்தோடு சுற்றிலும் பார்த்தான். ரோடு விரீரென்று நீண்டு கிடந்தது. நிலவு வெளிச்சத்தில முயல்களும், கீரிப்பிள்ளைகளுமாக குறுக்கும் மறுக்குமாக ஓட, ஒரு நீளமானப் பாம்பும் தோலின் மினு, மினுப்பு தெரிய சர, சரவென்று நழுவியவாறு இவர்களை நோக்கி வந்து கடந்து சென்றது.
 கௌசிகா பயத்துடன் அவன் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்டவள், "இப்ப நம்ம என்னங்க செய்றது?'' என்றாள்.
 தங்கராசுவுக்கே எதுவும் புரியவில்லை. திரும்பவும் டவுனுக்கே போய்விடலாமென்றால் அதுவும் இவன் ஊர் தூரமிருந்தது. இனி ரோட்டில் நிற்க முடியாது. ஊருக்கு நடந்துதான் ஆக வேண்டும். இந்த விஷயத்தை கௌசிகாவிடம் சொன்னதுமே அவள் நடுரோட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விட்டாள்.
 "இப்படியெல்லாம் தூரமாக நடந்து எனக்குப் பழக்கமில்லை. போன் பண்ணி கால்டாக்ஸியை வரவழையுங்கள். நாம் போகலாம்'' என்றாள் ரொம்பவும் கெத்தாக.
 அப்புராணி தங்கராசு, உழவு மாட்டோடு கிடப்பவன் கால் டாக்ஸியை கண்டானா.. எதைக் கண்டான். அவனுக்கு கோபம்தான் மூக்கு முட்ட வந்தது.
 "கௌசி நீ இப்படியெல்லாம் முரண்டு பிடிக்காத, நாம எப்படியும் வீட்டுக்குப் போய்தான் ஆகணும். இங்க உட்கார்ந்திருக்கிறதில எந்த ராவமுமில்ல. எந்திரி பேசிக்கிட்டே நடப்போம் கொஞ்ச தூரம் தான் நம்ம போயிருவோம்'' என்று கெஞ்ச.. அவள் பிடிவாதமாக மறுத்ததோடு ரோட்டிலேயே படுத்தும் விட்டாள்.
 தங்கராசுவிற்கு வந்த கோபத்தில் அவன் உச்சி மண்டையே எரிந்தது. மூவாயிரம் ரூபாய் சைக்கிள் மோசம் போனவனை இவள் இன்னும் சேர்ந்து படுத்துகிறாள். நம்ம ஊரு பொண்ணுகன்னா இப்படி இருக்குமா? நம்மளயும் இழுத்துக்கிட்டுல்ல ஓடுவா. இவ இப்படி படுத்துக்கிட்டு அழிச்சாட்டியம் பண்ணினா நம்மளால என்ன செய்ய முடியும்? இந்த மானைக்கு, நாலு மிதி, மிதிச்சி அங்கேயே விட்டுவிட்டு போக வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளின் குணம் அவனுக்கு நன்றாக தெரியுமாதலால். அவள் அருகில் சென்று மெல்ல எழுப்பினான்.
 ""கௌசி இந்த இடம் மோசமான இடம் இனியும் இங்க இருக்கக் கூடாது. நிலாவோட சேர்ந்து காத்தும் சிலு,சிலுன்னு அடிக்கு வா நாம பேசிக்கிட்டே நடப்போம். நீயும் அதுக்குத்தானே ஆசப்பட்ட''
 "அதுக்காக, எவ்வளவு தூரம் நடக்கிறது. எங்க வீட்டில் பக்கத்தில இருக்க பிரண்டஸ் வீட்டுக்குப் போனாக் கூட ஆட்டோவுலதான் அனுப்புவாங்க''.
 "உங்க வீட்டுப் பேச்ச கேக்க இப்ப நேரமில்ல, எந்திரி நடப்போம்'' என்று அவளின் கையைப் பிடிக்க, உதறினாள்.
 ""நான் வரமுடியாதுன்னா முடியாதுதான்'' என்று கௌசிகா சொல்லிக் கொண்டிருக்கையில் பெரிய வெருவு (ஆண் பூனை) இவளைத்தாண்டி ஓடியது. வீலென்று அலறிக் கொண்டு எழுந்தாள்.
 பக்கத்து பனைமரத்திலிருந்து கோட்டான் ஒன்று அலற கௌசிகா பயத்துடன் கண்களை மூடிக் கொண்டு கோட்டானுக்கு மிச்சமாக அலறினாள்.
 "இதுக்குத்தேன் சொன்னேன். இங்க இருக்க வேண்டாம்ன்னு. வா போகலாம்'' என்று தங்கராசு, அவளைத் தோளோடு அணைக்க அவனிடமிருந்து விருட்டென விலகி அந்த ஆற்றின் மணலை நோக்கி ஓடினாள்.
 அவளைப் பிடித்து நிறுத்தினான் தங்கராசு.
 "என்னை விடுங்க, விடுங்க'' என்று கௌசிகா திமுறினாள்.
 தன் உள்ளத்துக்குள் எழுந்த கோபத்தைப் பொறுத்துக் கொண்டு, "இப்ப உனக்கு என்ன செய்யணும் கௌசி?'' என்றான் தங்கராசு அமைதியாக.
 ""நாம அந்த ஆத்து மணலுக்குப் போறோம். விடிய, விடிய கதை பேசுறோம். விடிஞ்சப் பெறவு வீட்டுக்குப் போறோம்'' என்றாள்.
 அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன தங்கராசு.. கௌசிகாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவள் அந்த நேரத்தில் அவன் பொண்டாட்டியாக தெரியவில்லை. விஷம் கொண்ட மோகினியாகத் தெரிந்தாள்.
 இறுகப் பிடித்திருந்த அவள் கைகளை சட்டென்று விட்டுவிட்டு, விரு விருவென்று வேகமாய் எட்டுகளை வைத்து தன் வீட்டை நோக்கி நடந்தான்.
 "என்னங்க, என்னங்க...'' என்றபடி பின்னாலிருந்து கௌசிகா கூப்பிட்டச் சத்தம் அவனுக்கு கேட்டுக் கொண்டுதான் இருந்தது. ஆனால், அவன் திரும்பியேப் பார்க்கவில்லை. இதற்குள் விடியும் நேரம் வந்துவிட்டது.
 சங்கரி பசுவின் பால் கறந்து கொண்டிருந்தாள்.
 வாசல் தெளிக்க வந்த கமலம், "என்னண்ணே சினிமாவுக்குப் போயிட்டு இப்பத்தேன் வாரியா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தவள் இவன் பின்னாலேயே ஓடிவந்த கௌசிகா மயக்கம் போட்டு விழுவதை அப்போதுதான் பார்த்தாள்.
 கையிலிருந்த சாணி சட்டியை கீழே போட்டுவிட்டு, "மதினி'' என்று ஓடிப்போய் பிடித்தாள் கமலா. கூடவே தங்கராசும் ஓடினான்.
 "என்ன நடந்தது'' என்று சங்கரி கேட்க, தியேட்டரிலேயே சைக்கிள் காணாமல் போனதாகவும், அங்கிருந்து தாங்கள் நடந்து வந்ததில் இவ்வளவு நேரமாகிவிட்டதாகவும், முதன் முதலாக அம்மாவிடம், தாங்கள் ஆற்றங்கரைக்குப் போனதை மறைத்து பொய் சொன்னான் தங்கராசு.
 மயக்கம் தெளிந்து கண்விழித்த கௌசிகா, யாருடனும் பேசவுமில்லை, சாப்பிடவுமில்லை. தன் ஊருக்குப் புறப்பட்டு விட்டாள். அவளுடன் கூட போனால் பல பிரச்னைகள் வரும். நாம் சொல்வதை ஒருவரும் நம்ப மாட்டார்களென்று தங்கராசு அப்போதே பிஞ்சைக்குப் புறப்பட்டுவிட்டான்.
 பிறகு கௌசிகாவை தனியாக அனுப்பி வைத்தால் நன்றாக இருக்காதென்று அவள் கூடப் பாண்டியை அனுப்பி வைத்தாள் சங்கரி.
 இருபது நாட்கள் வரை சென்றுவிட்டன.
 இவர்கள் யாரும் வரச்சொல்லாமல் மட்டுமல்ல; யாரும் கூப்பிடப் போகாமலே தன் அப்பாவோடு வந்துவிட்டாள் கௌசிகா.
 தன் சம்பந்திக்காரர் மகளோடு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட உடனே தாங்கள் செய்த வேலையை அப்படி, அப்படியே போட்டுவிட்டு வீட்டுக்குப் புறப்பட்ட சங்கரி கூடவே தங்கராசுவையும் கூட்டிக் கொண்டு வந்தாள்.
 தங்கராசுவிற்கு இப்போது பொண்டாட்டியிடம் ஆசை இருந்ததைவிட , இனி என்ன அழிச்சாட்டியம் பண்ணுவாளோ என்ற பயம்தான் இருந்தது.
 "சம்பந்தி' என்ற பேச்சு கிராமத்தில் இல்லையாதலால், ""வாங்க தம்பி நேத்தே நீங்க வாரது தெரிஞ்சிருந்தா விடியமின்ன காட்டுக்கு போயிருக்க மாட்டோம்'' என்று கனகராசுவை அன்போடு வரவேற்றாள் சங்கரி.
 ஆனால், அவர் முகம் கடு, கடுவென்றிருந்தது.
 "என்ன தம்பி ஊருல எல்லாரும் நல்லா இருக்காங்களா? காப்பி குடிக்கிறீங்களா? இல்ல பால் தரட்டுமா?'' என்று பிரியத்தோடு கேட்க,
 கனகராசு, ""நானு உங்க வீட்டுல வந்து காப்பியும், பாலும் குடிக்கிற மாதிரியா வச்சிருக்கீங்க? என் மக, என்ன மாதிரி செல்லமா வளந்தவன்னு உங்களுக்குத் தெரியுமா? நீங்கள்ல்லாம் பட்டிக்காட்டு ஆளுங்கதான உங்களுக்குக்கெங்க அந்த அருமையெல்லாம் தெரியப்போவுது'' என்று சிடுசிடுக்க, சங்கரி ரொம்பவும் நொந்து போய்விட்டாள்.
 "என்ன தம்பி பட்டிக்காட்டுல இருந்தாமட்டும் பிள்ளைகளோட வளப்பு, அருமையெல்லாம் தெரியாமயா இருக்கும். நானும் என் புள்ளைகள செல்லமாத்தேன் வளத்திருக்கேன். அதோட, நீன்னு சொன்னா நீதி குலைஞ்சி போயிரும்ங்கிற மாதிரிதேன் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். உங்கப் பொண்ண இங்க யாருமே கொடும பண்ணல. நாங்க ஏதோ எங்களுக்குத் தக்கன வசதி செஞ்சு கொடுத்துப் பொன்னும், கண்ணுமாத்தேன் வச்சிருக்கோம்''என்றாள்.
 "அதான் உங்க பையன் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போயிட்டு தனியா ரோட்டுல விட்டுட்டு வந்திருக்கான்'' என்று சொல்ல,
 கௌசிகா, "அப்பா...' என்றாள் அதட்டலாக..
 "இதுல ஒன்னும் குறைச்சலில்ல பாத்தீங்களா? என் பொண்ணோட பெருமையை, மோசமான புருஷன் கிடைச்சிருந்தும், அவர, அவன், இவன்னு சொல்லக் கூடாதாம்''.
 ""நீங்க கோபப்படுத அளவுக்கு எதுவுமே நடக்கல தம்பி, சினிமா போறயில சைக்கிள்ல்ல ஏறிப் போனாக வரும்போது சைக்களப் பாத்திருக்காக, சைக்கிள எந்தக் களவாணிப்பயலோ தூக்கிட்டுப் போயிட்டானாம். அதனால ரெண்டு பேரும் நடந்தே வந்திருக்காக''
 "என் மகள பத்து நிமிஷம் கூட நடக்க விட்டது கிடையாது. ஆட்டோ, கால் டாக்ஸி என்று அனுப்பிதான் பழக்கம். அதுபோல தியேட்டருல சைக்கிள காணோமின்னா டவுன்ல்ல இருக்க ஓட்டல்ல, ஒரு ரூம் போட்டு தங்கணும். இல்லாட்டி, கால் டாக்ஸிப் புடிச்சி வரணும்.''
 "அதெல்லாம் எங்களுக்கு தெரியாது தம்பி. எங்கயும் போவனும்ன்னா மாட்டு வண்டிக்கட்டிக்கிட்டு போவோம். இல்லாட்டி நடந்துதான் போவோம்.''
 "அதான் பட்டிக்காட்டு ஆளுங்கிறது, சரியாத்தான் இருக்கு. உங்கள போல ஆளுங்க நடப்பாங்க, எம்மவ நடப்பாளா? சரி அவள நடக்கவிட்டவரு , கூடவே உங்க மகனும் நடந்து வரலாமில்ல. கூடவே, பேசிக்கிட்டு நடப்போமின்னு இவ எவ்வளவோ சொல்லியும் அவள ஒத்தையா அந்த ரோட்டில விட்டுட்டு இவரு வேகமா நடந்து வீட்டுக்கு வந்திருக்காரு. பாவம் என் பொண்ணு ஓட்டமும் நடையுமா அவர் பின்னாலேயே வந்தவ வீட்டு வாசல்லயே மயங்கி விழுந்திருக்கா. இப்படி ஒரு அநியாயமும், அக்ரமும் எங்கேயாவது நடக்குமா?'' என்று அதிகாரத்தோடு தங்கராசுவைப் பார்த்து மிரட்டியபோது,
 தங்கராசுவுக்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. அவன் உடல் எங்கும் நரம்புகள் முறுக்கேறியது. அப்படியே வந்தது வரட்டுமென்று கனகராசுவின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிடலாமா'' என்று பரபரத்தவனின் உணர்ச்சிகளைப் புரிந்தவள் போல் சங்கரி மகனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
 - தொடரும்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com