நங்கை உணவகம்!

தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்து நகர் பகுதியில் ஆரோக்கிய புரம் பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ளது அந்த உணவகம். பெயரே நம்மை ஆச்சரியப்படுத்துகிறது
நங்கை உணவகம்!

தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்து நகர் பகுதியில் ஆரோக்கிய புரம் பிரதான சாலையோரத்தில் அமைந்துள்ளது அந்த உணவகம். பெயரே நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆம்!. அந்த உணவகத்தின் பெயர் "நங்கை உணவகம்'. உணவகத்தின் உரிமையாளர் ஒரு திருநங்கை. அவரது பெயர் காயத்ரி.
 அரசுப் பணிகளில், காவல் பணிகளில் திருநங்கை இடம் பெற்று விட்டாலும், உணவு சம்பந்தப்பட்ட துறையில் கால் பதித்து அனைவரும் ருசித்து உண்ணும்படி உணவுகளை சமைத்து பெயர் பெற்று வருகிறார் திருநங்கை காயத்ரி. ஏழைத் தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரிடையேயும் நங்கை உணவகத்துக்கு தனி மவுசு தான். ஆச்சரியத்துக்கு காரணமான நங்கை உணவகத்தின் உரிமையாளரான 25 வயது திருநங்கை காயத்ரி, உணவகம் குறித்தும், தனது எதிர்காலத் திட்டம் குறித்தும் தொடர்கிறார்:
 "எனது சொந்த ஊர் தூத்துக்குடி தாளமுத்துநகர். 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். உடன் பிறந்தவர்கள் 7 பேர். நான்கு அக்கா. மூன்று அண்ணன். 8 ஆவதாக பிறந்த எனக்கு வீட்டில் செல்லம் அதிகம். பிறப்பில் ஆணாக இருந்த எனக்கு பெற்றோர் வைத்த பெயர் சஞ்சீவி.
 5 -ஆம் வகுப்பு படிக்கும்போது எனது உடலில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. உடன் படித்தவர்களிடம் தெரிவித்தபோது எள்ளி நகையாடினர். குடும்பத்துக்கும் தெரியவந்தது. சில ஆண்டுகள் ஓடினாலும் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால், 14 வயதில் வீட்டில் இருந்து வெளியேறினேன்.
 என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நான் கட்டட தொழிலுக்கு சித்தாள் வேலைக்குச் சென்றேன். பின்னர் உப்பளத் தொழிலுக்கு சென்றேன். அப்புறம் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டேன். சில இடங்களில் வேலை செய்த போதிலும் எப்படியாவது சுயமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது.

 சமையல் தெரியும் என்பதால் பல சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வங்கி கடனுதவி பெற்று "நங்கை உணவகம்' என்ற பெயரில் டிபன் சென்டரை தொடங்கினேன். காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசை, வடை, பூரி, பொங்கல் ஆகியவை சமைத்து விற்பனை செய்கிறேன்.
 உணவகத்துக்கு சாப்பிட வருவோர் யாரும் முகம் சுளிக்கவில்லை. வீட்டில் ஒருத்தியாக என்னை நினைத்து அக்கா சட்னி நன்றாக உள்ளது, சாம்பார் சூப்பர் என புகழ்ந்து சாப்பிட்டு செல்கின்றனர். அவர்களின் பாசம் என் மனதுக்கு திருப்தியாக உள்ளது.
 தொடக்கத்தில் குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தற்போது அண்ணன், அக்கா வீடுகளுக்கு சென்று குழந்தைகளை பார்த்து வருவேன். அவர்களும் என்னை பாசத்தோடு ஏற்கின்றனர். தற்போது 18 வயது திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன்.
 நங்கை உணவகம் போல, தூத்துக்குடியில் மேலும் நான்கு உணவகங்கள் தொடங்கி அதில் திருநங்கைகளை உரிமையாளராக்கி பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்'' என்றார் மிகவும் தன்னம்பிக்கையோடு.
 - தி. இன்பராஜ்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com