சமையல்! சமையல்!

பலாப்பழ பாயசம், உளுந்து குலோப்ஜாமூன், கேழ்வரகு மாவு அல்வா, கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை

பலாப்பழ பாயசம்!

தேவையானவை:
பலாப்பழச் சுளை - 15, பால் - 250 மி.கி
வெல்லம் - 200 கி., ஏலக்காய் - 4
செய்முறை: பலாச்சுளைகளைத் தண்ணீரில் வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர், வாணலியில் தண்ணீர்விட்டு வெல்லத்தைப் பொடி செய்து தண்ணீரில் பாகு காய்ச்சிக் கொள்ளவும். பிறகு, பாலை ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பால் வெல்லப் பாகில் நன்றாக கலந்ததும் மசித்த பலாப்பழச் சுளைகளை சேர்த்து நன்கு கிளற வேண்டும். ( அடிப்பிடிக்காமல்) பின்னர், பொடியாக்கிய ஏலக்காய்த் தூளை பாயசத்தின் மேல் தூவி இறக்கிவிட வேண்டும். இப்போது சூடாக மணமணக்கும் பலாப்பழ பாயசம் ரெடி. குழந்தைகளுக்கு இது மிகவும் ஆரோக்கியமானது. 
- எஸ்.அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர். 

உளுந்து குலோப்ஜாமூன்

தேவையானவை:
உளுந்தம் பருப்பு - 250 கிராம்
சீனி - 500 கிராம்
பச்சரிசி - 1 பிடி அளவு
ரீபைண்ட் ஆயில் - தேவைக்கேற்ப
செய்முறை: உளுந்தம் பருப்பு, அரிசியுடன் ஊற வைக்கவும். ஊறிய பின்னர், மாவு பந்துமாதிரி வரும்வரை லேசாக தண்ணீர் தெளித்து, வடைக்கு ஆட்டுவதுபோன்று நன்றாக பக்குவமாக ஆட்டிக் கொள்ளவும். பின்னர், மாவில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து எண்ணெய்யில் போட்டு சிவக்க பொரித்துக் கொள்ளவும். பின்னர், சர்க்கரையில் ஜீரா காய்ச்சி, அதில் உருண்டைகளை போடவும். சுவையான உளுந்து குலோப்ஜாமூன் ரெடி.

கேழ்வரகு மாவு அல்வா

தேவையானவை:
கேழ்வரகு மாவு- 2 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
தேங்காய் பால் - 2 கிண்ணம்
தண்ணீர்- 1 கிண்ணம்
நெய் - தேவைக்கேற்ப
ஏலக்காய்த் தூள்-தேவைக்கேற்ப
செய்முறை : தேங்காய்ப் பாலில் தண்ணீர், வெல்லம், கேழ்வரகு மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். அதோடு நெய் ஊற்றி அடுப்பில் வைத்து அல்வா பதம் வரும் வரை கிளறவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும். இந்த அல்வாவில் தேங்காய்ப் பால் சேர்த்திருப்பதால் 3 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை

தேவையானவை:
கேழ்வரகு மாவு-2 கிண்ணம்
வெல்லம் (அ) கருப்பட்டி-1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்-1 கிண்ணம்
பயத்தம் பருப்பு-அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள்-2 சிட்டிகை
செய்முறை : பயத்தம் பருப்பை லேசாக வறுத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வறுத்து தேங்காய்த் துருவல், வேக வைத்த பயத்தம் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். வெல்லம் (அ) கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும். அதை மீண்டும் கொதிக்க வைத்து மாவு கலவையில் ஊற்றி நன்கு கிளறி, கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் துணிப் போட்டு வேக வைக்க வேண்டும். கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை ரெடி.
- மு.சுகாரா, திருவாடானை.

பீட்ரூட் சூப்

தேவையானவை
பீட்ரூட் - கால் கிலோ, பெ. வெங்காயம் - 1, உருளைக்கிழங்கு - 1
எலுமிச்சம்பழம் - பாதி, புதினா - சிறிதளவு, கிரீம் - அரை கப்
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப, உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை: பீட்ரூட், உருளைக்கிழங்கை தோல் நீக்கி வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெய்யில் தாளித்து வேக வைத்துக் கொள்ளவும். பின்னர், அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதில் மிளகுத் தூள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் தேவைக்கேற்ப சேர்க்கவும். சூப் நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கிரீம், புதினா சேர்த்து பருகவும். ஆரோக்கியமான பீட்ரூட் சூப் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com