பதினேழு வயதிலேயே வானத்தைத் தொட்டவர்!

'எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகள் டாக்டர், இன்ஜினீயர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் என பலதுறைகளில் சிறந்தவர்களாக வரவேண்டுமென்று பெற்றோர் ஆசைபடுவதுண்டு.
பதினேழு வயதிலேயே வானத்தைத் தொட்டவர்!

'எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகள் டாக்டர், இன்ஜினீயர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் என பலதுறைகளில் சிறந்தவர்களாக வரவேண்டுமென்று பெற்றோர் ஆசைபடுவதுண்டு. என்னுடைய அம்மாவோ நான் விமானியாக வேண்டுமென விருப்பப்பட்டார். அதுவே என் மனதில் ஆழமாக பதிந்து விட்டதால், சிறுவயதிலிருந்தே வானத்தை எட்டிப் பிடிப்பது போன்றும், மேகங்களை தொடுவது போன்றும் நான் கற்பனை செய்வதுண்டு'' என்று கூறும் ஆனி திவ்யா, இன்று உலகிலேயே போயிங்777 விமானத்தை இயக்கும் மிக குறைந்த வயது பெண் விமானி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
 மற்ற விமானங்களை விட நீளமும் அகலமும் கொண்ட இரட்டை என்ஜினுடன் கூடிய இந்த போயிங் 777 ஜெட் விமானம், போயிங் கமர்ஷியல் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாகும். இந்த விமானத்தில் விமானியாக பணியாற்றி கேப்டனாக பதவி உயர்வு பெற்று தற்போது மும்பையில் வசிக்கும் ஆனி திவ்யா, விமானியானதற்கு பின்புலமாக நல்ல பணவசதி இருந்திருக்கலாமென பலர் கருதலாம். ஆனியின் தந்தை ஆனி முராஹரி, ராணுவத்தில் பணியாற்றியவர் என்றாலும், விருப்ப ஓய்வு பெற்று விஜய வாடாவில் குடியேறிய பின்னர், ஆனி அங்கேயே பள்ளியில் சேர்ந்து படித்தார். நடுத்தர குடும்பம். போதிய வருமானம் இல்லை. தாய்மொழி தெலுங்கு என்பதால் துவக்க ஆண்டுகளில் ஆங்கிலம் கற்க மிகவும் சிரமமாக இருந்தது. பெற்றோர் கொடுத்த ஒத்துழைப்பும் ஆதரவும் திவ்யாவுக்கு பெரும் பலமாக இருந்தது. நீ அடைவது வெற்றியோ, தோல்வியோ அவைகளை ஒரு சவாலாக ஏற்று, உன் லட்சியத்தை அடைய முன்னேறுவதற்கு முயற்சி செய் என்று இவரது அம்மா அடிக்கடி கூறுவதுண்டாம்.
 17 வயதில் பள்ளி படிப்பை முடித்தவுடன் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், இந்தியாவில் உள்ள முன்னணி விமான பயிற்சி நிலையங்களில் ஒன்றான இந்திராகாந்தி ராஷ்ட்ரிய யுரான் அகாதெமியில் சேரும் வாய்ப்பு திவ்யாவுக்கு கிடைத்தது. இரண்டாண்டு கால பயிற்சிக்குப் பிறகு திவ்யாவுக்கு விமானம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் வழங்கப்பட்டதோடு, ஏர் இந்தியாவில் வேலையும் கிடைத்தது. தொடர்ந்து 21 -ஆவது வயதில் போயிங் 777 விமானத்தை இயக்கும் விமானியாக பணியில் அமர்ந்தார். தற்போது 30 வயதாகும் திவ்யாவுக்கு ரியாத்திலிருந்து மும்பை செல்லும் போயிங் 777 விமானத்தில் கமாண்டராக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதற்கிடையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் போதே, ஏவியேஷனில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றதோடு, தன் உடன் பிறந்தவர்கள் கல்விச் செலவுக்கும் பணம் கொடுத்து உதவியுள்ளார். பெற்றோருக்கு ஒரு வீடும், தனக்கு ஹைதராபாத்தில் ஒருவீடும் வாங்கியுள்ளார். ஆனி திவ்யாவின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்ன ?
 "17 வயதில் பெற்றோரை பிரிந்து புதிய வாழ்க்கையை தொடங்க நான் விரும்பியபோது, தொடக்கத்தில் பயிற்சி காலத்தில் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளை மீறி புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டுமென்ற உறுதி என் மனதில் இருந்தது. நம் மனதில் ஏற்படும் துணிவு நமக்கு சரியான பாதையை வழிகாட்டுவதோடு சவால்களை எதிர்கொண்டு முன்னேற உதவும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.
 என்னுடைய 21-ஆவது வயதில் மேற்கொண்டு பயிற்சிபெற லண்டனுக்கு அனுப்பப்பட்டேன். முதலில் போயிங் 737 விமானத்தில் பயிற்சிபெற்ற நான் போயிங் 777 விமானியாக அமர்த்தப்பட்டேன். அதன்பிறகு என்னுடைய வாழ்க்கையில் இதுவரை கிடைக்காத அபூர்வமான அனுபவங்களை பெற்றதோடு, உலகின் பல்வேறு நாடுகளுக்கு பறக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 இன்று முன்னேற்றமடைந்த பல நாடுகள் விமானத்துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வாய்ப்பளித்து வருவதைபோன்று, இந்தியாவிலும் வாய்ப்புகள் அதிகரித்து வருவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவில் பெண் விமானிகள் எண்ணிக்கை 14 சதவீதமாக இருக்கும் நிலைமாற வேண்டும் என்பதுதான் என் ஆசை'' என்கிறார் ஆனி திவ்யா.
 - பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com